|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Sunday, December 30, 2007

அரசு செய்த துரோகத்தை கண்டித்து நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம்!தனி இட ஓதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு தமிழக அரசு செய்த துரோகத்தை கண்டித்து இன்று ( 28-12-2007) சென்னையில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம்!

ஆயிரக்கணக்காணோர் பங்கேற்பு

ஆர்ப்பாட்டக்காட்சிகள்...
ஆர்ப்பாட்டக் கோஷங்கள்...

ஆர்ப்பாட்டக் கோஷங்கள்...அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்.
அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்.

போராட்டம் இது போராட்டம்
முஸ்லிம்களின் போராட்டம்
போராட்டம் இது போராட்டம்
TNTJ வின் போராட்டம்

என்ன ஆச்சு! என்ன ஆச்சு!
மூன்றரை சதவீதம் என்ன ஆச்சு!

தந்தீரே! தந்தீரே!
தனி இடஒதுக்கீடு தந்தீரே!
இல்லையே அது இல்லையே
நடைமுறையில் இல்லையே

ஏமாற்றாதே! ஏமாற்றாதே!
தி.மு.க வே ஏமாற்றாதே!

என்ன ஆச்சு என்ன ஆச்சு
சர்வீஸ் கமிஷனில் இடஒதுக்கீடு
என்ன ஆச்சு! என்ன ஆச்சு

நியாயம் தானா? நியாயம் தானா?
டாக்டருக்கான இட ஒதுக்கீட்டில்
அல்வா கொடுத்தது
நியாயம் தானா? நியாயம் தானா?

அக்கிரமம் அக்கிரமம்
அரசு ஆணையில் மூன்றரை
நடைமுறையில் ஒன்றரை.

சப் இன்ஸ்பெக்கடர் செலக்ஷனிலும்
கல்தா எங்களுக்கு கொடுத்தீரே!

எச்சரிக்கை! எச்சரிக்கை!
இறுதி கட்க எச்சரிக்கை!
உறக்கம் கலைந்தோம் உரிமை பெற்றோம்
பறிக்க நினைத்தால் உடைத்தே பெறுவோம்

வாரியம் வேண்டாம் கலைஞரே!
M.P சீட் வேண்டாம் கலைஞரே!
MLA சீட் வேண்டாம் கலைஞரே!
எங்களுக்கு தேவையெல்லாம்
முழுமையான இட ஒதுக்கீடே
முறையான இட ஒதுக்கீடே!

காணவில்லை! காணவில்லை!
வேலை வாய்ப்பு விளம்பரங்களில்
மூன்றரையை காணவில்லை.

பசித்தவனுக்கு சோறு கேட்டால்
பச்சை தண்ணி தந்து விட்டு
சோறு போட்டோம் என்று சொன்னால்
நியாயம் தானா கலைஞரே
இது நேர்மை தானா முதல்வரே!

விசிலடிக்கும் கூட்மல்ல
ஜால்ரா போடும் கூட்டமல்ல
துதிபாடும் கழகமல்ல
சமுதாயத்திற்கு தீங்கு என்றால்
சிங்க நிகர் படையடா
சீறிப்பாயும் படையடா

மாற்றிவிடு மாற்றி விடு
சர்வீஸ் கமிஷன் வெளியிட்ட
வஞ்சித்த ஒதுக்கீட்டை
மூன்றரையாக மாற்றிவிடு

அனுமதியோம் அனுமதியோம்
முஸ்லிம்களின் உரிமையை
தட்டிப்பறிக்க முயற்சித்தால்
அனுமதியோம் அனுமதியோம்

தமிழக அரசே தமிழக அரசே
இட ஒதுக்கீடை தக்க வைக்க
எதற்கும் நாங்கள் தயங்கமாட்டோம்.

அடுத்த கட்ட வேலை வாய்ப்பில்
தனி இடஒதுக்கீட்டை தராவிட்டால்
கிடு கிடுக்கும் போராட்டம்
நடு நடுக்கும் போராட்டம்
தமிழகமெங்கும் போராட்டம்

Thanks..tntj.net

Wednesday, December 26, 2007

மௌலவி.பி.ஜெ பேட்டி- குமுதம் டாட் காம்.

தமிழக அரசின் பச்சை துரோகம்!

Bismillah..
கருணாநிதி தலைமையிலான திமுக அரசு முஸ்லிம்களுக்காக மூன்றரை சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க சட்டமியற்றியது. இது போதுமானது அல்ல என்ற போதும், இந்த அளவாவது கிடைத்ததே என்று ஆறுதலடைந்தோம். இதற்காக ஒட்டுமொத்த முஸலிம் சமுதாயமும் அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் கருணாநிதிக்கு நன்றியைத் தெரிவித்தோம். ஆனால் தமிழக அரசோ இடஒதுக்கீடு விஷயத்தில் பச்சைத் துரோகம் செய்யும் வகையில் அறிவிப்பு வெள்pயிட்டுள்ளது.


டைப்பிஸ்ட், ஸ்டெனோ கிராஃபர் பணிகளுக்காக 3875 பேர் தேர்வு செய்யப்படவுள்ள தாகவும், இதில் கிறிஸ்தவர்களுக்கு 130 இடங்கள், முஸ்லிம்களுக்கு 59 இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 3875ல் மூன்றரை சதவிகிதம் என்றால் 135 இடங்கள் முஸலிம்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் ஒன்றரை சதவிகிதம்தான் (59 இடங்கள்) நமக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு இல்லாதபோது இதைவிட அதிக இடங்கள் கிடைத்து வந்தன.

கிறிஸ்தவர்களுக்கு மட்டும் மூன்றரை சதவிகிதம் வழங்கிவிட்டு, முஸலிம்களுக்கு மட்டும் ஒன்றரை சதவிகிதம் வழங்கி முதுகில் குத்திய துரோகச் செயலுக்கு நமது கண்டனத்தைப் பதிவு செய்யத் தவறினால், போராடிப் பெற்ற இடஒதுக்கீட்டின் பயனை நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அடுக்கடுக்கான போராட்டம் நடத்தியவர்களுக்கு ஒன்றரை சதவிகிதம், எந்தப் போராட்டமும் நடத்தாதவர்களுக்கு மூன்றரை சதவிகிதம் என்று அறிவித்திருப்பதன் மூலம் இந்தச் சமுதாயம் ஏமாள்pச் சமுதாயம் என்று கருணாநிதி நினைக்கிறார்.

நாங்கள் ஏமாளிகள் அல்ல என்பதைத் தெள்ளத் தெளிவாகப் பிரகடனம் செய்யவும். இந்த துரோக அறிவிப்பை உடனே ரத்து செய்து, முஸலிம்களுக்கு மூன்றரை சதவிகிதம் கிடைக்கும் வகையில் மறு அறிவிப்பு வெளியிட வலியுறுத்தியும் சென்னையில் நடை பெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்ப்பரித்து திரண்டு வாருங்கள்!
இடம்:
பார்க் டவுன்

மெமோரியல் ஹால் அருகில்நாள்

28-12-2007, வெள்ளி


நேரம்
மாலை 4.00 மணி அளவில்

Thanks..tntj.net

Friday, December 21, 2007

முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?


ஆண் என்பவன் தன்னை முழு அளவில் ஆண் என்று வெளிப்படுத்த வேண்டும். பெண் என்பவள் தன்னை முழு அளவில் பெண் என வெளிப்படுத்த வேண்டும். இரண்டுமே அவரவரைப் பொருத்த வரை பெரும் பாக்கியமாகும்.

40 மார்க் வாங்கினால் பாஸ் ஆகி விடலாம் என்றாலும், நூறு மார்க் வாங்கவே அனைவரும் ஆசைப்படுகிறோம்.

மாதம் பத்தாயிரம் ரூபாய் போதும் என்றாலும் வண்ணக் கனவுகள் எல்லாம் நிறைவேறும் அளவுக்கும், அதை விட அதிகமாகவும் கிடைக்க வேண்டும் என முயற்சிக்கிறோம்; ஆசைப்படுகிறோம்.

ஆண்மை எனும் பாக்கியத்தைக் காட்டிக் கொள்வதில் மட்டும் தான் இந்தப் போதுமென்ற மனநிலை இருக்கிறது.

முகத்தில் முடி இருப்பதோ, இல்லாமல் இருப்பதோ இல்லறத்திற்கு முக்கியமானது இல்லை என்ற நிலையிலும் இறைவன் ஆணுக்கு மட்டும் முடி வளரச் செய்து பெண்களுக்கு வளரச் செய்யாமல் விட்டுள்ளான்.

ஆடைகளைப் பொருத்த வரை ஆண்கள் அணியும் ஆடையைப் பெண்களும் அணிந்திட முடியும். தாடி வைக்க முடியாது.

எனவே அனைத்திலும் முழுமையை விரும்பும் ஆண்களும் லி பெண்களும், ஆண்மையிலும் லி பெண்மையிலும் முழுமையை விரும்ப வேண்டும் என்று இஸ்லாம் எதிர்பார்க்கிறது.

தாடியை வைக்க பெரிய அளவில் பொருளாதாரச் செலவும் ஏற்படாது. எடுப்பதற்குத் தான் செலவு ஏற்படும்.

எளிதில் கடைப்பிடிக்க இயன்ற ஒரு கம்பீரத்தை தானாகவே ஆண்கள் இழந்து விட வேண்டாம் என்பது தான் இஸ்லாத்தின் விருப்பம்.
Thanks...Onlinepj.com

Saturday, December 15, 2007

முஸ்லிம்கள் அரசியலில் நுழையாமல் உரிமைகளை வென்றெடுக்க முடியுமா ???

பாதிக்கப்படும் போதும், உரிமைகளைக் கேட்கும் போதும் களம் இறங்கிப் போராடுதல், ஒவ்வொரு தேர்தலின் போதும் எத்தகைய முடிவுகளை சமுதாயம் எடுத்தால் நல்லது என்று கருத்துச் சொல்லுதல் போன்ற அரசியல் நடவடிக்கையைப் பற்றி குறிப்பிட்டால் அதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. இருபது ஆண்டுகளாக நாம் இத்தகைய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். எனவே தேர்தலில் போட்டியிடும் அரசியலைத் தான் நீங்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும். இதில் நாம் உடன்படவில்லை என்பது உண்மை தான்.
விரிவாக ஆராய்ந்தால் நாம் எடுத்த முடிவுக்குத் தான் நீங்களும் வருவீர்கள். அரசியல் அதிகாரத்தில் நாம் பங்கு கேட்கிறோம். அவ்வாறு பங்கு கேட்கும் போது நாம் தேர்தலில் போட்டியிட்டுத்தானே ஆக வேண்டும்? என்பது தான் இதை நியாயப்படுத்துவோர் எடுத்து வைக்கும் முதல் வாதம். மக்களுக்கு வேண்டுமானாலும் இந்த வாதம் சரியாக இருப்பது போல் தோன்றலாம். இந்த வாதத்தை எடுத்து வைப்பவர்களுக்கு நாம் மக்களை ஏமாற்றுவதற்குத் தான் இதை எடுத்து வைக்கிறோம் என்பது மிகவும் நன்றாகத் தெரியும். அரசியல் அதிகாரத்தில் நாம் 2004லிம் ஆண்டு பங்கு கேட்க ஆரம்பிக்கவில்லை. 1995 முதல் இவ்வாறு கேட்டு வருகிறோம். 1995 முதல் பங்கு கேட்டு வந்த நாம் ஒரு காலத்திலும் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறி வந்தோம். அரசியல் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கூறிக் கொண்டே தேர்தலில் போட்டியிடவும் மாட்டோம் என்பதையும் எவ்வாறு ஒரே நேரத்தில் நம்மால் கூற முடிந்தது? தேர்தலில் போட்டியிடுவது தான் இதன் பொருள் என்றால் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று ஒன்பது ஆண்டுகளாக முரண்பட்டு பொய் பேசினோமா? முரண்பட்ட இரண்டு கருத்துக்களை ஒரு நேரத்தில் கூறி மக்களை ஏமாற்றினோமா?

நிச்சயமாக இல்லை. அரசியல் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதன் பொருள் என்ன என்பதை நாம் மிகத் தெளிவாக விளக்கினோம். 1995லில் கூற ஆரம்பித்த இந்த விளக்கத்தை 2004 தஞ்சைப் பேரணியின் துவக்க உரை வரைக்கும் விரிவாக எடுத்துக் கூறி வந்தோம். நாம் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிடுவது என்பது இதன் பொருள் அல்ல. அரசியல் கட்சிகள் விரும்பும் போது வழங்கும் பிச்சையை நாம் கேட்கவில்லை.
நாங்கள் கேட்பது என்னவென்றால் தலித் மக்களுக்கு எவ்வாறு ரிஸர்வ் (தனி) தொகுதி முறை உள்ளதோ, அதுபோல் முஸ்லிம்களுக்கும் வழங்க வேண்டும் என்பது தான் இதன் பொருள் என்பது தான் நாம் அளித்து வரும் விளக்கம். இந்தியாவில் 540 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 20 சதவிகிதம் என்பது 108 தொகுதிகள். 108 தொகுதிகளை முஸ்லிம் ரிசர்வ் தொகுதிகள் என்று அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்தால் அந்தத் தொகுதிகளில் முஸ்லிம்களைத் தவிர வேறு எவரும் போட்டியிட முடி யாது. எந்தக் கட்சியானாலும், சுயேச்சையானாலும் அங்கே முஸ்லிம் தான் போட்டியிட முடியும்.
எனவே ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் 108 முஸ்லிம் எம்.பி. க்கள் கட்டாயம் இடம் பெறுவார்கள். இதைத் தான் நாம் கேட்டு வந்தோம். இவ்வாறு கேட்டு வந்ததால் தான் நாங்கள் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூற முடிந்தது. இதன் காரணமாகத் தான் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையும், போட்டியிட மாட்டோம் என்ற முழக்கமும் முரண்பட்டது அல்ல என்று மக்கள் விளங்கினார்கள்.


எனவே அரசியல் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதை ஒன்பது ஆண்டுகளாக எந்தக் கருத்தில் நாம் கூறினோமோ அந்தக் கருத்தில் நாம் நிலைத்திருக்கிறோம். புதிய நிலைபாடு நோக்கி நாம் சென்று விடவில்லை.தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தான் ஒரு அமைப்பு தேவை என்றால் ஏற்கனவே முஸ்லிம் லீக், தேசிய லீக் என்று இரண்டு கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதைக் கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. அதில் வெற்றிடம் ஏதும் இருக்கவில்லை. அதைச் செய்வதற்காக நாம் இயக்கம் ஆரம்பிக்க எந்த அவசியமும் இல்லை. களத்தில் இறங்கிப் போராடுதல் என்பது தான் வெற்றிடமாக இருந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்குத் தான் இயக்கம் தேவைப்பட்டது.
எனவே அந்த ஆசை உள்ளவர்கள் முஸ்லிம் லீக்கிலோ, தேசிய லீக்கிலோ தங்களை இணைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டுக் கொள்ளட்டும்! தேர்தலில் போட்டியிடுவதாக வைத்துக் கொள்வோம். வெற்றி பெறுவதற்காகத் தான் போட்டியிடப் போகிறோம். தேர்தலில் போட்டியிட்டு எவ்வாறு வெற்றி பெற நாம் என்ன செய்ய வேண்டும்? தமிழகத்தில் எந்த ஒரு தொகுதியிலும் நாம் 50 சதவிகிதம் இல்லை. ஏராளமான தொகுதிகளில் நமது சதவிகிதம் மூன்று முதல் நான்கு தான். மிகச்சில தொகுதிகளில் தான் எட்டு முதல் பத்து சதவிகிதம் இருக்கிறோம். அதை விடவும் குறைவான விரல் விட்டு எண்ணக்கூடிய தொகுதிகளில் தான் 25 முதல் 30 சதவிகிதம் இருக்கிறோம்.
நாம் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவது கிடக்கட்டும்! ஒட்டு மொத்த முஸ்லிம்களும் நமக்கு வாக்களித்தால் கூட ஐந்து தொகுதிகளில் தான் டெபாசிட்கூட பெற முடியும். மீதமுள்ள தொகுதிகளில் டெபாசிட்டை இழந்து படுதோல்வியைச் சந்திக்கும் அவமானம் ஏற்படும். ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் நம் பின்னே திரண்டால் தான் இந்த நிலை. ஆனால் இன்று வரை 10 சதவிகிதம் முஸ்லிம்களைக் கூட நம்மால் வென்று எடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை. எல்லோரும் இணைந்திருந்த போதே இது தான் நிலை. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது தான் நோக்கம் எனும் போது தனித்துப் போட்டியிடும் முடிவை நாம் எடுக்க மாட்டோம். வெற்றி பெறுவதற்கு ஏற்ற முடிவைத் தான் நாம் எடுக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுவோம்.
அதாவது பெரிய கட்சிகளிடம் பேரம் பேசி கூட்டணி ஏற்படுத்திக் கொள்ளும் நிலைமையைத் தான் தேர்வு செய்வோம். அவர்கள் நமக்கு ஒதுக்குகின்ற ஐந்து அல்லது மூன்று தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமே? அதற்கு என்ன செய்வது? நமது சமுதாயம் மட்டும் ஓட்டு போட்டால் நம்மால் ஜெயிக்க முடியாது. திமுக வினர், அல்லது அதிமுகவினர், அல்லது காங்கிரசார் நமக்கு வாக்களித்தால் தான் வாங்கிய தொகுதிகளில் வெற்றி பெற முடியும். எனவே அந்தக் கட்சியினரைக் கவர்வதற்காக கருணாநிதியை அல்லது ஜெயலலிதாவை அல்லது சோனியா காந்தியைப் புகழ்ந்து பாட வேண்டும். இந்தத் தலைவர்கள் கடந்த காலத்தில் செய்த எந்தத் தவறையும் சுட்டிக்காட்டக் கூடாது. இவரை விட்டால் வேறு கதி இல்லை என்ற தோரணையில் தான் வாக்கு கேட்க வேண்டும். தப்பித் தவறி இவர்களின் கடந்த காலத் தவறுகளையும் சுட்டிக்காட்டி, நெருக்கடிக்காகத்தான் கூட்டு சேர்ந்துள்ளோம் என்று உண்மையை உடைத்தால் நம்மவர்களுக்கு அது திருப்தியளிக்கும்.
ஆனால் நாம் கூட்டுச் சேர்ந்துள்ள பெரிய பங்காளிகள் குழி பறிப்பு வேலையில் இறங்கி ஒரேயடியாகக் கவிழ்த்து விடுவார்கள். வேலூர் நாடாளுமன்றத் தேர்தலின் போது மேடையில் ஒரே ஒரு இருக்கை போட்டு ஜெயலலிதா அமர்ந்திருக்க... கடைசி வரை முஸ்லிம் லீக் தலைவர் ஓரமாக நின்று கும்பிட்டுக் கொண்டிருந்தார் என்று ஒன்பது வருடமாக நாம் செய்த விமர்சனத்தை நமக்கு எதிராக மற்றவர்கள் செய்வார்கள். இப்படித் தான் உரிமையை வென்று எடுக்க வேண்டுமா? அது மட்டுமில்லை. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் தான் உரிமையை வென்றெடுக்க முடியும் என்பதால் வெல்வதற்கு என்ன வழிமுறைகள் நாட்டில் உள்ளதோ அதைத் தான் நாமும் செய்தாக வேண்டும்.


* இரு கைகளையும் கூப்பி கும்பிட வேண்டும்.* கூட்டம் கூட்டுவதற்காக கூத்து கும்மாளம் போடும் போது அதைப் பார்த்து சகித்துக் கொண்டிருக்க வேண்டும்.


* இந்துக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளுக்குச் சென்றால் கோவிலுக்குச் செல்ல வேண்டும். பூஜையும் செய்ய வேண்டும். பிரசாதம் எடுக்க வேண்டும் நெற்றியில் திலகம் அல்லது நாமம் இடு வார்கள். அதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பரிவட்டம் கட்டுவார்கள் தலையை நீட்ட வேண்டும்.


* கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ள பகுதிகளுக்குச் சென்றால் அவர்களுக்கு ஏற்ப நடக்க வேண்டும்.


அனைத்தையும் செய்யாவிட்டாலும் இவற்றில் எதையுமே செய்ய மாட்டோம் என்று நிச்சயம் கூற முடியாது. தனக்கு கும்பிடு போடாதவருக்கு நாம் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று பிற சமயத் தவர் எண்ணி விடக்கூடாது என்பதற்காக இதைச் செய்யும் நிலை ஏற்படும். இப்படியெல்லாம் எங்களை நரக படுகுழியில் தள்ளிவிட்டு உரிமைகளை வென்றெடுக்கச் சொல்கிறீர்களா? உரிமைகளை வென்றெடுக்க இதுதான் வழியா? தேர்தலில் போட்டியிட நமக்கு ஒரு சின்னம் தேவைப்படும். நமக்கு என்று ஒரு சின்னம் கிடைப்பதாக இருந்தால் குறிப்பிட்ட அளவு ஓட்டு வாங்கிக் காட்ட வேண்டும். அப்போது தான் நமக்கு என ஒரு சின்னம் கிடைக்கும். இல்லாவிட்டால் ஒரு தேர்தலில் மோதிரம் சின்னம் தருவார்கள். மறு தேர்தலில் ஏணி தருவார்கள். இன்னொரு தேர்தலில் விளக்குமாறு கூட கிடைக்கலாம். ஐம்பது ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் லீக் கட்சிக்கே சின்னம் கிடையாது. எனவே வெற்றி பெறுவதற்காக திமுக வின் சூரியன், அதிமுக வின் இரு இலை (இரட்டை இலை என்பது தவறு) காங்கிரசின் கை ஆகிய சின்னங்களில் நின்று போட்டியிட வேண்டும். அப்போது தான் ஜெயிக்க முடியும்.
தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள காதர் முஹைதீன் அவர்கள் வேலூரில் சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட்டு வென்றார். இதன் பொருள் என்ன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். உங்களுக்கு தேர்தல் ஆணையம் சூரியன் சின்னத்தைத் தர வேண்டுமானால் திமுக தலைமை 'அவர் எங்கள் கட்சிக்காரர், இவருக்கு எங்கள் சின்னத்தை ஒதுக்குங்கள் என்று கடிதம் தர வேண்டும். அக்கட்சியின் உறுப்பினர் அட்டையைப் பெற்றிருக்க வேண்டும். காதர் முஹைதீன் தி.மு.க. உறுப்பினர் அட்டை பெற்றுள்ளார். அதாவது நீங்கள் வேண்டுமானால் உங்களை முஸ்லிம் லீக் என்றோ தேசிய லீக் என்றோ கூறிக் கொள்ளலாம். சட்டப்படி நீங்கள் திமுக உறுப்பினர் தான். திமுகவின் கொறாடாவுடைய கட்டளைக்கு மாற்றமாக நீங்கள் நாடாளுமன்றத்திலோ சட்டமன்றத்திலோ வாக்களிக்க முடியாது. வாக்களித்தால் கட்சித் தாவல் சட்டப்படி நீங்கள் பதவியை இழப்பீர்கள். சட்ட மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் நீங்கள் திமுக தான். உதாரணத்துக்குத் தான் திமுகவை குறிப்பிடுகிறோம். எந்தக் கட்சியின் சின்னத்தை நீங்கள் பெற்றாலும் நிலைமை இதுதான். சட்டமன்றத்தில் திமுகவுக்கு என்று நேரம் ஒதுக்கும் போது அதில் அவர்கள் தான் பேசுவார்களே தவிர உங்களுக்கு விட்டுத் தரப் போவதில்லை. கட்சி அடிப்படையில் இல்லாமல் தனி உறுப்பினர் என்ற முறையில் கிடைக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைக்கும். அப்போது கூட இரு இலைச் சின்னத்தில் நீங்கள் வெற்றி பெற்றவராக இருந்தால் அதிமுகவுக்கு எதிராக பேச முடியாது. இதன் காரணமாகத்தான் திருமாவளவன் சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற பதவியை ராஜினாமா செய்தார். திமுகவின் உறுப்பினராகத் தான் அவர் செயல்படும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இது தான் உரிமையை வென்றெடுக்கும் இலட்சணமா?
அதாவது தேர்தல் நேரத்துடன் மட்டுமல்ல. மறு தேர்தல் வரை நம்மை பெரிய கட்சியில் அடகு வைக்காமல் வெற்றி பெற இயலாது. இல்லாவிட்டால் ஏரோப்ளேன் சின்னத்தில் போட்டியிட்டு டெபாசிட் இழக்க வேண்டும். முஸ்லிம் இயக்கங்கள் எதுவும் தேர்தலில் போட்டியிடும் நிலைமையே இல்லாமல் இருந்தால் கூட உங்கள் வாதத்தில் மயங்கலாம். ஏற்கனவே ஐம்பது ஆண்டுகளாக முஸ்லிம் லீக் தேர்தலில் போட்டியிட்டது. ஆனாலும் ஒரு உரிமையையும் வென்றெடுக்கவில்லை என்று ஒன்பது வருடமாக நாம் ஏன் விமர்சனம் செய்தோம். அவர்களை விட இவர்கள் போனால் சரியாகச் செய்வார்கள் என்ற பித்தலாட்டமான வாதமும் முன் வைக்கப்படுகிறது. நாம் மேலே சுட்டிக் காட்டியதைச் சிந்தித்தால் இதன் போலித்தனத்தைப் புரிந்து கொள்ளலாம். தேர்தலில் போட்டியிடாத போதே மேடைகளில் பல தவறுகளில் சமரசம் செய்து கொண்டவர்கள், அதை நியாயப்படுத்தியவர்களையும், காதர் முஹைதீனையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது. நம்மோடு நூறு பேர் இருக்கும் போது திமுகவுடன் கூட்டு வைப்போம். வெற்றி பெறுவதற்காக கருணாநிதியைத் துதி பாடுவோம். மறு தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேரும் போது பத்துப் பேர் கருணாநிதியுடன் தங்கி விடுவார்கள். மீண்டும் வேறு கட்சியில் கூட்டுச் சேரும் போது என்பது பேருடன் தான் போய்ச் சேர வேண்டும். கடைசியில் லட்டர் பேட் தான் மிஞ்சும். தமிழக சட்டன்றத்தில் பிரதான எதிர்க் கட்சியாக இருந்த முஸ்லிம் லீக்குக்கு இன்று சட்டமன்றத்தில் ஒரு இடமும் இல்லை. இந்த நிலைக்கு எங்களை தள்ளப் போகிறீர்களா? சில கனவான்கள்(?) தங்களின் சுயநலனுக்கு பயன்படுத்திக் கொள்ளலாமே என்று தூபம் போடுவார்கள். அதில் சில பேர் மயங்கி விட்டார்கள் அவ்வளவுதான். மருத்துவர் ராமதாஸ்தான் இத்தகையோரின் கண்களை உறுத்துகிறார். சாதிக் கட்சியாக ஆரம்பித்து இன்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது போல நாமும் ஏன் ஆக முடியாது என்று நினைக்கிறார்கள்.
ராமதாஸ் வன்னிய சமுதாயத்தைக் குறிவைத்து அரசியல் நடத்துகிறார். அந்தச் சமுதாயம் எண்ணிக்கையில் முஸ்லிம்களை விட அதிகம். வன்னியர்கள் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் திரண்டு வசிக்கின்றனர். மெஜாரிட்டியாக உள்ளனர். எனவே வன்னியர் ஓட்டுக்களைப் பிரித்தெடுத்தால் மற்ற கட்சிகளுக்குப் பெரிய பின்னடைவு ஏற்படும். எனவே அவரால் பேரம் பேசி அதிக இடங்களைப் பெற முடிகிறது. முஸ்லிம்கள் எந்த மாவட்டத்திலும் திரண்டிருக்கவில்லை. எனவே நாம் பிரிக்கும் ஓட்டுக்கள் இரண்டு மூன்று சதவிகிதம் என்பதால் பேரம் படிவது கிடையாது. கேரளாவில் முஸ்லிம் லீக் வெற்றி பெறுகிறது என்றால் சில மாவட்டங்களில் முஸ்லிம்கள் மெஜாரிட்டியாக உள்ளது தான் காரணம். புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக மற்றொரு ராமதாஸாக ஆகலாம் என்று கனவு காண்கிறார்கள். மற்றொரு லத்தீஃபாகக் கூட இவர்கள் ஆக முடியாது என்பது தான் உண்மை. மக்கள் எதனால் நம் பின்னே திரண்டார்கள்? தேர்தலில் போட்டியிடப் போகிறோம் என்ற பிரச்சாரத்தைக் கேட்டா? நிச்சயமாக இல்லை. தங்களுக்காக இவர்கள் எதையும் கேட்க மாட்டார்கள் என்ற நாணயமான முழக்கம் தான் அவர்களை ஈர்த்தது. கடைசி வரை மக்களுக்காக உழைப்பவர்கள் என்ற நம்பிக்கையைப் பாழாக்கினால் உடனடியாக மக்களின் நம்பிக்கையை இழப்பார்கள். இதைக் கண்கூடாக நாம் காண்கிறோம். எத்தனை மடங்கு சரிவு ஏற்பட்டுள்ளது என்பதை ஒவ்வொரு ஊரிலும் காண்கிறார்கள்.

தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்ற கொள்கையால் மக்களை வென்றெடுத்தோம். எதைச் சொல்லி வென்றெடுத்தோமோ அது தவறு என்று சிலருக்குத் தோன்றுகிறது. தேர்தலில் போட்டியிடுவோம் என்று முஸ்லிம் லீக் கூறி படிப்படியாக அனைத்தையும் இழந்தது. அது சரியான வழி என்று தோன்றுகிறது. அல்லாஹ் சிலரை அப்புறப்படுத்த நாடி விட்டால் இப்படித்தான் மதி கெடுப்பான். எங்களைப் பொறுத்தவரை எந்தப் பதவிக்கும் , வாரியத் தலைவர் பதவி உட்பட ஆசைப்படாமல் கடைசி வரை களத்தில் நின்று சமூகப் போராளிகளாகவே மரணத்தைத் தழுவ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அல்லாஹ்வின் மீது ஒன்பது வருடங்கள் தொடர்ந்து செய்து வந்த சத்தியத்தை முறிக்க மாட்டோம். எனவே இதை விரும்பக் கூடியவர்கள் மட்டும் நமக்குப் போதும். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கொள்கையுள்ளவர்களுக்கு நமது தவ்ஹீத் ஜமாஅத் தகுதியான இயக்கம் இல்லை. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்கிறோம். தேர்தலில் போட்டியிடுவது தான் சரி என்று நினைக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் ஏற்கனவே உள்ள இரண்டு கட்சிகளில் ஒன்றைத் தேர்வு செய்து அதில் சங்கமமாவது தான் அந்த விஷயத்திற்கு பலம் சேர்க்கும். தேர்தலில் போட்டியிடுவதற்காகவே புதிதாக முளைக்கும் இயக்கங்களை நிராகரிக்க வேண்டும்.
Thanks...Unarvu Weekly.

Thursday, December 13, 2007

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து


ஏகனின் திருப்பெயரால்..

இன்று எங்கும் பணம், எதிலும் பணம் என்று பணப் பேராசையும் பணத்திற்காகக் கொலை, கொள்ளை போன்றவை பெருகி வருவதையும் நாம் காண்கிறோம். இதற்குக் காரணம், இருப்பதை வைத்து வாழ்க்கைத் தேவையை பூர்த்தி செய்யாமல், அடுத்தவரின் சொத்துக்கோ, பணத்துக்கோ ஆசைப்படும் எண்ணம் தான்.


பெரும் பணக்காரர்கள், தங்களிடம் உள்ள சொத்து போதாதென்று மக்களை ஏமாற்று வேலைகள் பலவற்றால் கொள்ளையடிகிறார்கள். இவை நமது நாட்டில் அன்றாடச் செய்திகளாகி விட்டன. இது போன்ற சமூகத் தீமைகளைத் தடுப்பதற்காகவும் இன்னும் பிற நன்மைகளுக்காவும் நபி (ஸல்) அவர்கள் ஓர் உபதேசத்தை உதாரணமாகக் கூறுகிறார்கள்.


நபியவர்கள் ஒரு நாள் மிம்பரில் அமர்ந்திருந்தார்கள். நாங்கள் அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்தோம். 'எனக்குப் பின்னால் உலக வளங்களும் அதன் அலங்காரமும் உங்களுக்குத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் பயப்படுகின்றேன்' என்று நபியவர்கள் கூறினார்கள். ஒருவர் 'அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை தீமையைத் தருமா?' எனக் கேட்டதும் நபியவர்கள் மௌனமாகி விட்டார்கள். உடனே 'என்ன ஆனது உனது நிலைமை? நீ ரஸþல் (ஸல்) அவர்களிடம் பேசுகிறாய்! ஆனால் நபியவர்களோ உன்னிடம் பேசாமல் இருக்கிறார்களே!' என்று அவரிடம் கேட்கப்பட்டது.


அந்நேரத்தில் நாங்கள் ரஸþல் (ஸல்) அவர்களுக்கு வஹீ அருளப்படுவதாக நினைத்துக் கொண்டோம். ரஸþல் (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்து விட்டு, 'கேட்டவர் எங்கே?' என்று அவரைப் புகழ்வதைப் போல கேட்டார்கள். ''நன்மை தீமையை உருவாக்காது. நீர் நிலைகளின் கரையோரங்களில் விளைகின்ற செடிகள் கால்நடைகளைக் கொன்று விடுகின்றன. அல்லது மரணத்தின் விளிம்பிற்கே கொண்டு செல்கின்றன. பசுமையான (நல்ல வகை) செடிகளை தின்பவைகளைத் தவிர! கால்நடைகள் அந்தச் செடிகளை வயிறு புடைக்கத் தின்று சூரிய ஒளியை முன்னோக்கி, சாணம் போட்டு, சிறுநீர் கழித்து மீண்டும் மேய்கின்றன. (இது போலவே) இந்த உலகம் பசுமையானது; இனிப்பானது. ஒரு முஸ்ஸிம் தனது செல்வதிலிருந்து ஏழைக்கும் அனாதைக்கும் வழிப்போக்கருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை அது அவனுக்கு நல்ல தோழனாக இருக்கும். யார் அதனை முறையின்றி எடுத்துக் கொள்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்று! மறுமையில் அந்தச் செல்வம் அவருக்கெதிராகச் சாட்சி சொல்லும்'' என்று கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1465


உலகச் செல்வங்களை போதுமென்ற மனம் இல்லாமல் அனுபவிப்பவர்கள் சாப்பிட்டும் வயிறு நிரம்பாதவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று கூறியுள்ளார்கள்.


ஒருவன் தேவையான அளவு சாப்பிடும் போது வயிறு நிறைய வேண்டும். ஆனால் வயிறு நிறையவில்லை என்று கூறினால் அவனது நிலை எப்படியோ அதைப் போன்று தான், இருப்பதை வைத்துக் கொண்டு நிம்மதியடையாமல் இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று அலைபவன்.


நபியவர்கள் மனிதனின் பேராசையின் உச்சக் கட்டத்தைக் கூறும் போது,


மனிதனுக்கு ஒரு ஓடை நிறைய தங்கம் வழங்கப்பட்டால், அதனுடன் இரண்டாவதை விரும்புவான். இரண்டாவது வழங்கப்பட்டாலும் மூன்றாவதை அவன் விரும்புகிறான் மண் தான் அவன் வயிறை நிரப்பும். இதிலிருந்து பாவ மன்னிப்புத் தேடியவரை அல்லாஹ் மன்னிப்பான்


அறிவிப்பவர்: இப்னு ஸுபைர் (ரலி)
நூல்: புகாரி 6438


நபிகளார் கூறுகிறார்கள்: மனிதன் பெரியவனாகும் போது அவனுடன் இரண்டு விஷயங்கள் வளர்கின்றன.


அவை: 1. செல்வத்தில் மீதுள்ள ஆசை, 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை.


அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி)
நூல்: புகாரி 6421


வயது முதிர்ந்து, வேறு உலகத்திற்குச் செல்லத் தயாராக வேண்டிய வேளையில் கூட செல்வத்தைச் சேகரிப்பதில் அதிக ஆர்வம் காட்டும் நபர்களையும் காண்கிறோம். இவ்வாறு நாம் செல்வத்தின் மீது பேராசை கொள்வது அல்லாஹ்வின் நினைவை விட்டும் தடுமாறச் செய்து விடும். அதிகம் பணம் சம்பாதிக்க வேண்டும் எனற பேராசையில் தன்னிடத்திலுள்ள பணத்தை விட அதிகமாகக் கடனை வாங்கி வியாபாரம் செய்கின்றனர். அதில் நஷ்டம் ஏற்பட்டால் அந்தக் கடனை அடைப்பதற்கு அல்லாஹ்வை மறந்து வட்டிக்குக் கடன் வாங்கும் அவல நிலையை நம்முடைய சமுதாயத்தில் காண்கிறோம். அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:


மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாகத் (செல்வத்தை) தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது.


அல் குர்ஆன் 102:1, 2


நம்முடைய பார்வையில் செல்வம் என்றால் வீடு, பங்களா, சொத்து கை நிறைய பணம் இவை தான் என்று நினைக்கிறோம். ஆனால் நபியவர்களின் பார்வையில் உண்மையான செல்வம் என்பது போதுமென்ற மனம் தான்.


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வசதி வாய்ப்புகள் அதிகமாக இருப்பது செல்வம் கிடையாது. போதுமென்ற மனம் தான் செல்வமாகும்.


அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6446


நபியவர்களின் உபதேசத்தைக் கேட்டு விட்டு அன்றிலிருந்து யாரிடமும் கையேந்தி யாசகம் கேட்க மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து, தான் மரணிக்கும் வரை தனக்கு அரசாங்கத்தில் கிடைக்கவிருந்த மானியத்தையும் கூட வேண்டாம் என்று ஒதுக்கித் தன்மானத்தை நிலைநாட்டிய நபித்தோழரை இதற்கு உதாரணமாகக் கூறாலாம்.


நான் ரஸþல் (ஸல்) அவர்களிடம் தர்மம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகு அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகு 'இந்தச் செல்வம் பசுமையானது; இனிப்பானதுமாகும். யார் இதனைத் தூய மனதுடன் பெறுகிறாரோ, அவருக்கு பரகத் வழங்கப்படும். யார் இதனைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு பரகத் வழங்கப்படாது. அவர் சாப்பிட்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்று. கொடுக்கும் கை வாங்கும் கையை விடச் சிறந்தது' என்று நபியவர்கள் கூறினார்கள். அப்போது ஹகீம் (ரலி), ''அல்லாஹ் வின் தூதரே! உங்களை சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீது ஆணையாக! உங்களுக்குப் பின் எவரிடத்திலும் எதையும் நான் தர்மமாகக் கேட்க மாட்டேன்'' என்று கூறினார். இதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் அவருக்கு ஸகாத்தைக் கொடுக்க அழைத்தார். அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகு உமர் (ரலி) அவர்கள் தம் ஆட்சிக் காலத்தில் அவருக்கு தர்மம் கொடுப்பதற்காக அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். அப்போது உமர் (ரலி) அவர்கள், ''முஸ்லிம் சமுதாயமே! நான் ஹகீமை கனீமத் பொருட்களில் அவருக்குள்ள பங்கைப் பெற்றுக் கொள்ளுமாறு அழைக்கிறேன். அவரோ அதை மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!'' என்று கூறினார்.


அறிவிப்பவர்: ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி)
நூல்: புகாரி 1472


''ஹகீம் நபியவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவே இல்லை'' என ஸயீத் இப்னு முஸய்யப் (என்ற தாபியி) கூறுகிறார்.


பணம் கிடைத்தாலே போதும் என்று சுய மரியாதையை இழந்து திரிபவர்கள் திருந்த வேண்டும் என்பதற்கு இந்த நபித்தோழர் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.


இதற்குக் காரணம் இந்த உலக வாழ்வு மட்டுமே நிரந்தரம் என்ற எண்ணம் தான். ஆனால் நபியவர்களின் வாழ்க்கையைப் பாருங்கள்!


நபியவர்கள் ஒரு ஈச்ச மரப் பாயின் மீது படுத்திருந்தார்கள். அந்த பாய்க்கும் அவர்களுக்குமிடையே (விரிப்பு) எதுவும் இல்லாமல் இருந்தது. அவர்களின் தலைக்குக் கீழ் ஈச்ச நார் நிரப்பப்பட்ட தோல் தலையணை இருந்தது. அவர்களின் கால்களுக் கீழ் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்க விடப்பட்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் அச்சு பதிந்திருப்பதைக் கண்டு அழுதேன். நபியவர்கள், ''ஏன் அழுகிறீர்!'' என்று கேட்டார்கள். அதற்கு நான், ''அல்லாஹ்வின் தூதரே! கிஸ்ரா, கைஸர் (பாரசீக மன்னர்கள்) சுக போகத்தில் திளைக்கிறார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் அல்லவா? நீங்கள் இந்த நிலையில் இருப்பதா?'' என்று கேட்டேன். அப்போது நபியவர்கள், '' அவர்களுக்கு இந்த உலகமும் நமக்கு மறுமையும் இருப்பதை நீ விரும்பவில்லையா?'' என்றார்கள்.


அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 4913


நபியவர்கள் இந்த உலக சுக போகங்களை அனுபவிப்பதற்கு வாய்ப்பும் முழுத் தகுதியும் இருந்தும் அதனைத் தூக்கியெறிந்து விட்டு, மறுமையில் இதற்கான கூலியை அல்லாஹ் தருவான் என்ற மனப்பான்மையுடன் வாழ்ந்துள்ளார்கள். இது போன்று நாமும் இருப்பதைப் போதுமாக்கி வாழ்ந்தோமென்றால் ஈருலகிலும் நமக்குக் கூலி கிடைப்பது நிச்சயம்.

நன்றி...தீனகுல பெண்மணி மாதஇதழ்

Monday, December 10, 2007

பட்டாசினால் உருவாகும் அலர்ஜியும் ஆஸ்துமாவும்

ஒவ்வொரு சமுதாயமும் தங்களது மகிழ்ச்சியை வெüப்படுத்துவதற்காக சில நாட்களைத் தேர்வு செய்து, அந்நாட்களுக்குப் புனிதம் வழங்கி அவற்றைப் பண்டிகைகளாகக் கொண்டாடி வருகின்றனர்.


பொதுவாக பண்டிகை என்றால் அதில் கேüக்கைகளும் இடம் பெற்றிருக்கும்.


தீபாவளி என்ற பண்டிகையை எடுத்துக் கொண்டால் அதில் பட்டாசு வெடிப்பது ஒரு வணக்கமாகவே கருதி செய்யப்படுகிறது.


இது போன்ற பண்டிகைகüல் வசதி படைத்தவர்கள் மகிழ்ச்சியாக பட்டாசுகளை எரிய விட்டுக் கொண்டாடும் அதே வேளையில் ஏழைகள் அடுப்பெரிக்கக் கூட வழியில்லாமல் திண்டாடுவதைப் பார்க்கிறோம்.


ஆனால் மனித குலத்தின் வாழ்க்கை நெறியான இஸ்லாமில் வசதி படைத்தவர்களுடன் சேர்ந்து ஏழைகளும், பெருநாட்களைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக இரு பெருநாட்கüலும் இரு வேறு விதமான தர்மங்களை மார்க்கம் வலியுறுத்துகின்றது.


நோன்புப் பெருநாளின் போது ஸதகத்துல் ஃபித்ர் எனும் தர்மம் வழங்குவதையும், ஹஜ் பெருநாளின் போது ஆடு, மாடுகளைக் குர்பானி கொடுத்து, அதன் இறைச்சியை ஏழைகளுக்கு விநியோகம் செய்வதையும் இஸ்லாம் வணக்கமாக ஆக்கியிருக்கின்றது.


இப்படிப்பட்ட மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களில் சிலரிடமும் பட்டாசுக் கலாச்சாரம் தொற்றிக் கொண்டு விட்டது. மாற்று மதத்தவர்களைப் பின்பற்றி, இவர்களும் பெருநாள் கொண்டாடும் போது பட்டாசுகளை வெடித்து மகிழ்கின்றனர்.


இந்தப் பட்டாசினால் மனித குலத்திற்கு ஏற்படும் தீமைகளை எடுத்துரைக்க வேண்டியது நமது கடமையாகும்.


பட்டாசு வெடிக்கும் போது நான்கு மீட்டர் தொலைவில் 125 டெசிபல் சப்தத்திற்கு மேல் வெடிக்கும் பட்டாசுகளை விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


125 டெஸிபலுக்கு மேலுள்ள வெடிகளை வெடிக்கச் செய்தால் அவர் 1986ஆம் ஆண்டு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் படி தண்டனைக்குரியவர் ஆவார்.


(தோராயமாக 30 டெஸிபல் வரையுள்ள சப்தங்களையே நாம் செவியுறுகிறோம்.)


பேரியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சோடியம் நைட்ரேட் அயர்ன் பவுடர், மேக்னீசியம் பவுடர், ஸ்ட்ரோனடியம் நைட்ரேட், பொட்டாசியம் குளோரேட் ஆகிய கலவைககள் அதிக அளவில் கலந்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் மிக அதிக அளவிலான நைட்ரஜன் ஆக்ஸைட், சல்பர் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு ஆகியவற்றை வெளியிடுகின்றன. இவை சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்துகின்றன.இதனைச் சுவாசிக்கின்ற மனித இனத்திற்கு இது பெரும் உடல் நலக் கேட்டை ஏற்படுத்துகிறது.


ஹிந்து நாளேட்டின் மதுரை பதிப்பில், ''ஆஸ்துமாக்காரர்களுக்கு தீபாவளி மகிழ்ச்சிக்குரிய நாளல்ல'' என்ற தலைப்பில் 21.10.2006 அன்று வெளியான செய்தி இதோ:


யானை வரும் பின்னே! மணி ஓசை வரும் முன்னே! என்பது போல் எட்டு வயது பவித்ராவுக்கு வண்ண வண்ண மத்தாப்புக்கள், வாய் சிந்தும் புன்னகைப் பூக்கள், வகை வகையான இனிப்புக்கள் என தீபாவளி வருகையை அட்டகாசமாகப் பறை சாற்றிக் கொண்டிருந்தன.


அவள் பட்டாசு கொளுத்தி பண்டிகையைத் துவக்கியதும் இரண்டு நாட்களாகத் தொடர் இருமலும், இளைப்பும் அவளது பண்டிகை மகிழ்ச்சியைப் பறித்துக் கொண்டது. கடைசியில் அவள் கடுமையான ஆஸ்துமாவின் பிடியில் சிக்கி, தீபாளிக்கு முன்னால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.


''கடந்த எட்டு மாதமாக அவள் சுகமாகத் தான் இருந்தாள். இந்த சீசன் தான் அவளுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. பட்டாசுப் புகை அவளது இளைப்பை அதிகரித்து, ஆட்டி அலைக்கழிக்கின்றது'' என்று அவளது தாயார் லெட்சுமி கூறுகிறார்.


பண்டிகை கொண்டாட்டம் தொடரத் தொடர, காற்று மேலும் மேலும் மாசுபட்டுக் கொண்டே இருக்கின்றது.


அதிலும் ஈரப்பதமான குளிர் காற்றில் இந்த வெடி மருந்துப் புகை மண்டலம் ஒன்றாகக் கலக்கையில் அது மாசு படுவதன் அளவு அதிகரிப்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.


எனவே இந்த சீசனில் நாம் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் ஆகி விடுகின்றது.


''ஒவ்வொரு தீபாவளியின் போதும் இளைப்பு மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக வருகின்றன. ஏற்கனவே வயது வந்த, நிரந்தர ஆஸ்துமாக்காரர்களுக்கு இந்தக் கால கட்டத்தில் ஆஸ்துமா அதிகமாகி விடுகின்றது. அவர்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்'' என்று ஆஸ்துமா மற்றும் அலர்ஜி ஆய்வு மையத்தின் மருத்துவர் ஆர். ஸ்ரீதரன் கூறுகின்றார். இந்தக் கால கட்டத்தில் இத்தகைய நோயாளிகள் 50 சதவிகிதம் அதிகரித்து விடுகின்றனர் என்று அவர் குறிப்பிடுகிறார்.


''ஆஸ்துமா நோயுள்ளவர்கள் மட்டும் ஆபத்தில் மாட்டிக் கொள்வதில்லை! புள்ளி விபரப்படி, ஆஸ்துமா இல்லாத பல பேருக்குப் புதிதாக ஆஸ்துமா ஏற்பட்டு ஆபத்தில் மாட்டிக் கொள்கின்றனர். இதனால் புதிய ஆஸ்துமாக் காரர்களின் எண்ணிக்கை இந்தப் பருவத்தில் கூடி விடுகின்றது'' என்று மூச்சு ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவர் ஆர். நரசிம்மன் கூறுகின்றார்.


இதற்குக் காரணம் இந்தப் பட்டாசுப் புகை மூச்சுக் குழாயின் மேல் சவ்வை சிதைத்து விடுகிறது. இதனால் மனித உடலில் இயற்கையாக உள்ள எதிர்ப்பு சக்தி அழிந்து போய், அவர் மூச்சு சம்பந்தமான வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி விடுகிறார்.


இந்த வைரஸ்களில் ஒன்று பெரிய, சிறிய மூச்சுத் துவாரங்களை பாதிப்படையச் செய்கிறது. அதனால் அவர் மூச்சுத் திணறல் மற்றும் இளைப்பு நோய்க்கு உள்ளாகிறார்.


இவருக்கு ஏற்படும் இந்த நோயின் அறிகுறிகள் ஆஸ்துமா, இளைப்பின் அறிகுறிகளைப் போன்றவை தான். இந்தத் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஆஸ்துமாவுக்குப் பலியாகி விடுகின்றனர் என்று டாக்டர் ஸ்ரீதரன் தெரிவிக்கிறார்.


மாசுபட்ட இந்தக் காற்று மூச்சுத் துவாரங்களில் வீக்கத்துடன் கூடிய அலர்ஜியை ஏற்படுத்துகிறது.


தொடர்ந்து பட்டாசுப் புகையைச் சுவாசிப்பவர் இந்த நோயினால் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்பட்டு விடுவார். அதிலிருந்து அவர் தப்ப முடியாது.


பட்டாசில் சல்பர் டை ஆக்ஸைடு சேர்மானங்கள் கலந்திருக்கின்றன. எனவே அது வெடிக்கும் போது அவற்றின் புகை மூக்கின் வழவழப்புப் பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மூக்கின் அருகிலுள்ள குழிகளில் நீர் கோர்த்து, சளி பிடித்தல், மூக்கடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. சளி அடைப்பு நோய் உள்ளவர்களது நுரையீரலின் கதையை முடிக்கும் அளவுக்கு இதன் வீரியம் அமைந்துள்ளது.


பச்சிளம் குழந்தைகள் கூட, சாதாரண மூச்சுத் திணறல் முதல் நிமோனியா வரையிலான நோய்களால் மிகப் பெரும் அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.


மருத்துவர்களின் வெறும் ஆய்வு அடிப்படையில் அல்ல! அனுபவ அடிப்படையில் தெரிவிக்கின்ற இந்தச் செய்தியை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.


இந்தப் பட்டாசுப் புகை சுற்றுப்புறச் சூழலை மட்டுமல்லாது நம்முடைய சுவாசப் பையையும் மாசுபடுத்தி, சேதப்படுத்தி விடுகின்றது என்பதை நாம் நன்கு விளங்கிக் கொள்கிறோம்.


பட்டாசு வெடிப்பதால் நாம் இரண்டு பாவங்களைச் செய்கிறோம். ஒன்று நம்மை நாமே அழித்துக் கொள்வது, மற்றொன்று, நாம் மற்றவர்களை அழிப்பது.


இந்த இரண்டு பாவங்களும் ஒரு சேர பட்டாசில் அமைந்திருக்கின்றன.


உங்களையே கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.


அல்குர்ஆன் 4:29


உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.


அல்குர்ஆன் 2:195


நம்மை நாமே அழித்து, மற்றவர்களையும் அழிக்கும் இந்தப் பாவங்களை நாம் ஒரு போதும் செய்யக் கூடாது என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகின்றது.


இன்று பட்டாசினால் கை, கால், கண்கள் பறி போகின்றன. எத்தனையோ பேருக்குக் கண் பாதிக்கப்பட்டுள்ளது. கை, கால் முடமாகியிருக்கின்றது. பறி போன கண்ணை, கை, கால்களை யாராவது திருப்பித் தர முடியுமா?


பட்டாசில் உருவாகும் நெருப்புக்கு, இது உயிருள்ளது, உயிரில்லாதது என்று பிரித்துப் பார்க்கும் ஆற்றல் உள்ளதா?


ஏன் நெருப்புடன் இப்படி ஒரு விளையாட்டு?


மனித உயிருக்கும் உடைமைக்கும் இன்ன பிற உயிரினத்திற்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் ஊறு விளைவிக்கும் இந்தத் தீயுடன் இப்படி ஒரு விபரீத விளையாட்டை நம்முடைய குழந்தைகள் விளையாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் மிகப் பெரும் பொறுப்பும் கடமையுமாகும்.


திடுக்கிடும் தொட்டில் குழந்தைகள்


பட்டாசுகள் வெடிப்பதால் இது வரை கண்ட இடையூறுகள் மட்டுமின்றி இன்னும் பல்வேறு இடையூறுகளும் உள்ளன.


வெடிச் சத்தம் கேட்டவுடன் நாம் வளர்க்கும் கோழி போன்ற பறவையினங்களும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் அஞ்சி நடுங்குகின்றன; அலறித் துடிக்கின்றன. தொட்டிலில் தூங்கும் குழந்தைகள் வெடிச் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்து அழுகின்றன; அதிர்ச்சியடைகின்றன.


இப்படி எல்லா இனத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் இந்தக் காரியத்தை ஒரு போதும் முஸ்லிம் சமுதாயம் செய்யக் கூடாது.


''பிற முஸ்லிம்கள் எவரது நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிம் ஆவார். மேலும் எவர் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டதை விட்டும் ஒதுங்கிக் கொள்கிறாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: புகாரி 10


வெடியின் விளைவுகளையும் விபரீதங்களையும் மாற்று மத நண்பர்களுக்கும் விளக்கி, அவர்களையும் இந்தத் தீமையை விட்டுத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இந்தப் பொறுப்பையுடைய நாமே இந்தக் காரியத்தைச் செய்யலாமா?


வீணாகச் செலவழிக்கும் போது, ''காசைக் கரியாக்காதே!'' என்று வழக்கத்தில் சொல்வதுண்டு! ஆனால் இன்று நம்முடைய குழந்தைகளுக்கு வெடியை வாங்கிக் கொடுத்து விபத்தைத் தேடிக் கொடுக்கிறோம் என்பது ஒரு புறமிருக்க, காசை எப்படிக் கரியாக்க வேண்டும் என்ற பாடத்தையும் கற்றுக் கொடுக்கிறோம்.
அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.


அல்குர்ஆன் 102:8


பொருளாதாரம் என்பது ஓர் அருட்கொடை! அந்த அருட்கொடையை எப்படிச் செலவழித்தோம் என்பது பற்றி விசாரிக்கப்படுவோம் என்ற பயம் நமக்கு வர வேண்டும்.


''ஓர் அடியான் தனது வாழ்நாளை எப்படிக் கழித்தான்? கல்வியை எப்படிச் செயல்படுத்தினான்? அவனுடைய பொருளை எங்கிருந்து சம்பாதித்தான்? அதனை எப்படிச் செலவழித்தான்? தன்னுடைய இளமையை எப்படிக் கழித்தான்? என்று விசாரிக்கப் படாமல் மறுமை நாளில் அவனது பாதம் நகராது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூ பர்ஜா (ரலி)
நூல்: திர்மிதீ 2341


இந்த ஹதீஸின் படி பட்டாசு வகைக்காக செலவழித்த பணங்காசுக்கு நாம் பதில் சொல்லாமல் மறுமையில் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
Thanks...Onlinepj.com

Sunday, December 09, 2007

தமிழர்களின் கடல்கடந்த தியாகம்

Bismillah..
சவுதி அரேபியாவின் மிகப் பெரும் மருத்துவமனையான ரியாதிலுள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி-யில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மூன்றாவது முகாம் ஆகும் ..

வந்தாரை வாழவைக்கும் தமிழக மக்கள் செல்லுமிடமெல்லாம் மக்களை வாழவைத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தோடு நிறுத்திவிடாமல் உலகம் முழுவதும் தங்கள் தியாக பணிகளை செய்து வருகின்றனர். அந்தவகையில் சவுதி அரேபியாவில் வந்து உழைத்து அந்நாட்டு வளர்ச்சியில் பெரும்பங்காற்றிவரும் நம் தமிழ்மக்கள் அந்நாட்டு மக்களின் உயிர்காக்கும் பணிகளிலும் சேவையாற்றி வருகின்றனர் .

07-12-07- வெள்ளிக்கிழமையன்று ரியாதில் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்திருந்தது. அன்றையதினம் மருத்துவ மனை முழுவதும் தமிழ்க் குரல்களாகவே ஒலித்துக் கொண்டிருந்தது. 300- க்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் கலந்து கொண்டனர். நேரமின்மை காரணமாக 220 பேர் பதிவு செய்யப்பட்டு 169 பேரிடம் இரத்தம் பெறப்பட்டது. ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் .

மருத்துவ மனை இரத்தவங்கியின் முதன்மை மருத்துவர் திரு.ஃபத்தூஹ் அல் ஆலம் அவர்கள் கூறும்போது 100-க்கும் அதிகமானோர் இரத்தம் வழங்கியதில் சவுதி அரேபியாவிலேயே இதுதான் முதல் முறையாகும். இந்திய மக்களை அதுவும் தாமிலியா (தமிழ் மொழி பேசுபவர்கள்) மக்களை நினைத்து நான் பெருமையடைகிறேன். இங்கே வழங்கப்பட்ட இரத்தம் உலகம் முழுவதிலிருந்தும் ஹஜ் செய்ய வந்திருக்கும் ஹாஜிகளில் தேவைப்படுவோருக்காக பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார் .

இரத்தவங்கி ஒருங்கிணைப்பாளர் திரு.பதர் அல் ஸாபிரின் அவர்கள் , மதியம் 2 மணியிலிருந்து இரவு 8 மணி வரை காத்திருந்து தானம் செய்வதில் இந்த மக்கள் போட்டி போடுவதை பார்க்கும்போது எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது என்று கூறினார் .

தீவிரவாதம் மூலம் இரத்தம் சிந்துவது தான் இவர்களின் வரலாறு என்று பத்திரிகைகளெல்லாம் சித்தரித்துக் கொண்டிருக்கும் வேளையில் அது தவறு இரத்தம் கொடுத்து வாழவைப்பதுதான் எங்கள் உண்மை வரலாறு என்பதை இனியாவது பத்திகைகள் கூறினால் அதன்மூலம் அனைத்து மதத்தினரிடமும் ஒற்றுமையும் நல்லிணக்கமும் ஏற்படும் என்று இந்த நிகழ்சியை ஏற்பாடு செய்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. முஜிஃபுர் ரஹ்மான் தெரிவித்தார் .

மொத்தத்தில் தமிழர்களின் தியாகம் இன்று உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகின்றது .

Saturday, December 08, 2007

110 கோடி மக்கள் பாதிக்கப்படுவது நியாயமா?

தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான கூட்டமைப்பும், பசுமைத் தாயகம் அமைப்பும் தமிழ்நாட்டில் புகையிலை கட்டுப்பாடு என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தின. இதில், சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத்துறை மந்திரி அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இதில், மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

ரஜினிக்கு கடிதம்
புகையிலை பழக்கத்தை ஒழிப்பதற்கு இந்த அமைப்புகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பாராட்டத்தக்கவை. புகையிலைக்கு எதிரான போராட்டத்தில் நான் இப்போது ஈடுபடவில்லை. 30 ஆண்டுகளாக புகையிலை பழக்கம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு டாக்டர் ராமதாஸ் குரல் கொடுத்து வருகிறார். அவரை பின்பற்றி நானும் 15 ஆண்டுகளாக இப்பழக்கத்துக்கு எதிராக போராடி வருகிறேன். இந்த பிரச்சினைக்காக முதன்முதலில் போராட்டம் நடத்தியது நாங்கள்தான். சினிமாவில் குடிப்பழக்கம், புகைப்பழக்கத்துக்கு எதிராக நாங்கள்தான் முதன்முதலில் போராட்டம் நடத்தினோம்.

எங்கள் போராட்டத்துக்கு பிறகு நடிகர் ரஜினி, புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். நான் தனிப்பட்ட முறையில் அவருக்கு இதற்காக கடிதம் எழுதினேன். புகைப்பிடிப்பதனால் படம் நன்றாக ஓடிவிடாது. இதற்கு சமீபத்தில் ரஜினி நடித்து திரைக்கு வந்து பெரும் வெற்றி பெற்ற சந்திரமுகி, சிவாஜி (இரண்டிலும் சிகரெட் பிடிக்கும் காட்சி இல்லை) ஆகிய படங்களே உதாரணம்.

நடிகர் விஜய்...

நடிகர் விஜய், மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. அவரை ஏராளமான ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள். அவர் தனது படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடித்து வருகிறார். அவருக்கு ஒரு அறிவுரை சொல்ல விரும்புகிறேன், அவர், சினிமாவில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சில இளம் ஹீரோக்கள் அரிவாளை தூக்கிக் கொண்டு வன்முறைக் காட்சிகளில் நடிக்கிறார்கள். அரிவாளை தூக்குவது ஸ்டைலாகி விட்டது. அவர்கள் அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவர்களைப் பார்த்து தமிழக இளைஞர்கள் கெட்டுப்போகிறார்கள். இளைஞர்களும் அரிவாள் தூக்கிக் கொண்டு வெட்டுக்குத்தில் இறங்கி வருகிறார்கள். சினிமாவில் இதுபோன்ற காட்சிகள் இடம்பெறுவதைத் தடுக்க பசுமை தாயகத்தினர், தணிக்கைக்குழு அதிகாரிகளை பார்த்து பேசி அவர்களுக்கு புரிய வைக்கவேண்டும்.

மந்திரி கையெழுத்து போட்டாலும்.....

நான் சுகாதாரத்துறை மந்திரியாக இருப்பதால் நினைத்தது நடந்துவிடும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், நான் கையெழுத்துப்போட்டால் அப்பணி ஒரு சதவீதம்தான் முடிந்ததாகத்தான் அர்த்தம். அடுத்த கட்டத்துக்கு போவதற்கு தடையாக சில மந்திரிகளே இருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு, சிகரெட் பாக்கெட்டுகளில் 50 சதவீத அளவுக்கு புகையிலைக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற வேண்டும் என்று நான் உத்தரவிட்டதும், அந்த அறிவிப்பினை திரும்பப் பெறவேண்டும் என்று கோரி, என்னை 4 முதல்-மந்திரிகள் நேரில் சந்தித்து பேசினார்கள். 150 எம்.பி.க்கள் நேரில் சந்தித்தார்கள். 7 முதல்-மந்திரிகள் எனக்கு கடிதம் எழுதினார்கள். இதனால், பீடித்தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என சிலர் கூறினார்கள். இந்தியாவில் 30 லட்சம் பேர்தான் இத்தொழிலில் ஈடுபட்டிருப்பார்கள். ஆனால், இவர்களுக்காக 110 கோடி மக்கள் பாதிக்கப்படுவது நியாயமா?

பயப்பட மாட்டேன்

இதுபோன்ற எதிர்ப்புகளுக்கு பின்னணியில், புகையிலை பொருட்கள் தயாரிப்பு முதலாளிகள் இருக்கிறார்கள். அவர்கள் தூண்டுதலின் பேரில் சில அரசியல்வாதிகள் செயல்படுகிறார்கள். ஆனால், எத்தனை எதிர்ப்பு வந்தாலும் பயப்படமாட்டேன். புகையிலை பொருள் விற்பனை மூலம் இந்தியாவில் உள்ள 3 பெரிய நிறுவனங்கள், 40 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார்கள். ஆனால் புகையிலை பொருள்களுக்கெதிரான விளம்பரங்கள், அதற்கான சிகிச்சை போன்றவற்றுக்காக ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடி செலவாகிறது. புகையிலை பொருள்களுக்கு எதிராக நாங்கள் மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது. பொதுமக்களும் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தவேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தை சரியாக பயன்படுத்தி அவர்கள் களத்தில் இறங்கலாம்.

அலுவலகங்களில் புகைபிடித்தால்.....

இன்னும் சில மாதங்களில் பணியிடங்களில் புகை பிடிப்பதற்கு தடை சட்டம் கொண்டு வரப்படும். அலுவலகத்தில் சிகரெட் பிடிக்க முடியாத நிலை ஏற்படும். அதற்கு உங்களது ஒத்துழைப்பு தேவை. சென்னையை புகையிலைப் பொருட்கள் இல்லாத நகரமாக மாற்ற தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

புகையில்லா சென்னை...

விழாவில் பேசிய, சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன், சென்னையை புகையிலை பொருள் இல்லாத நகரமாக விரைவில் மாற்றுவோம் என்று அறிவித்தார். காஞ்சி மாவட்டம் வாரணவாசி கிராமத்தை புகையில்லா கிராமமாக மாற்றிய பஞ்சாயத்து தலைவர் அ.வே.நாகராசனுக்கு அன்புமணி, பரிசு வழங்கினார்.

சண்டிகர் ïனியன் பிரதேசத்தில் தனியொருவராக போராடி மாநிலத்தையே புகையில்லா மாநிலமாக மாற்றிக் காட்டிய ஹேமந்த் கோஸ்வாமி, இரா.செந்தில் எம்.பி, பசுமைத்தாயகம் செயலாளர் அருள், நவின் வில்சன், விதுபாலா, ஜோசப்ராஜ் மற்றும் சிரில் அலெக்சாண்டர் ஆகியோர் பேசினர். மாநகராட்சி 10-வது மண்டலத் தலைவர் மு.ஜெயராமன் நன்றி கூறினார்.

Thanks...Dailythanthi.com

Wednesday, December 05, 2007

குர்பானி

Bismillah..

என்னுடைய இறiவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன் மகனைத் தந்தருள்வாயாக என்று இப்ராஹிம் (அலை) துஆ செய்தார். எனவே நாம் அவருக்கு சகிப்புத் தன்மை மிக்க ஒரு மகனைக் கொண்டு நற்செய்தி கூறினோம்.

பிறகு (அம்மகன்) அவருடன் நடமாடக் கூடிய (வயதை அடைந்த) போது, அவர் கூறினார் என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாக கனவு கண்டேன். இதைப் பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக! (இஸ்மாயில் அலை) கூறினார், என்னருமை தந்தையே! உங்களுக்கு கட்டளையிடப்பட்டதை செய்யுங்கள், அல்லாஹ் நாடினால் என்னைப் பொருமையாளனாகக் காண்பீர்கள் என்று பதிலளித்தார். ஆகவே அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிபட்டு (இப்ராஹிம் அலை) மகனை பலியிட முகம் குப்புறக் கிடத்திய போது நாம் அவரை இப்ராஹிம் என்றழைத்தோம். திடமாக நீர் கண்ட (கனவை) மெய்ப்படுத்தினீர், நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம்.
(அல்-குர்ஆன் 37:100 – 107)

குர்பானியின் நோக்கம்

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் குர்பானியின் மாமிசங்களோ அவற்றின் ரத்தங்களோ அல்லாஹ்வை சென்றடைவதில்லை, மாறாக உங்களிடம் உள்ள இறை அச்சம் தான் அவனை சென்றடையும்.
(அல்-குர்அன் 22:37)

இறைவனுக்காக அறுத்து பலியிட்டு அதனுடைய இறைச்சிகளை ஏழைகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதும், இறைவன் கட்டளையிட்டால் நான் எந்த தியாகத்தையும் செய்ய தாயார் என்ற உணர்வை பெறுவதும் தான் குர்பானியின் நோக்கமே தவிர கடவுளுக்கு படைப்பது அல்ல என்ற கருத்து மேற்கூறிய வசனம் மூலம் நமக்கு தெரியவருகிறது. மற்ற நாட்களில் செய்யும் நல்லறத்தை விட துல்ஹஜ் மாதம் 10ம் நாட்களில் செய்யப்படும் நல்லறங்கள் சிறப்புக்குரியதாகும்.

அல்லாஹ்விடம் அதிக நன்மை பெற்றுத்தரக்கூடியதாகவும் இருக்கின்றன என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரழி) புகாரி முஸ்லிம்.

அரஃபா தினத்தில் நோன்பு நோர்ப்பது முந்தைய மற்றும் அடுத்து இரண்டு வருட பாவங்களையும் மன்னிக்கும் என நபி(ஸல்) அவர்கள் சுறினார்கள்.
அறிவிப்பவர் அபுகதாதா (ரழி) நூல் : திர்மிதி இப்னு மாஜா.

மேற்கூறிய ஹதீஸ்களை நடைமுறைப்படுத்தக்கூடிய முஸ்லிம்களாக நம்மை அல்லாஹ் ஆக்குவானாக!

குர்பானி கொடுப்பவர் செய்யக் கூடாதவை

உங்களில் எவரேனும் குர்பானி கொடுக்க எண்ணினால் அவர் துல்ஹஜ் பிறை கண்டதிலிருந்து அறுத்து முடியும் வரை தன் நகங்களையும், முடிகளையும் களையாது இருக்க வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் உம்முஸலமா (ரழி) நூல்கள் : திர்மிதி நஸயி.

குர்பானி கொடுக்கப்பட வேண்டிய நாட்கள்

அய்யாமுத் தஷ்ரிக் முழுவதும் அறுப்பதற்கு ஏற்ற நாட்களாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் ஜுபைர் இப்னு முத்இம் (ரழி) நூல்கள் : இப்னு ஹிப்பான்.

அய்யாமுத் தஷ்ரிக் என்பது 11,12,13 ஆகிய நாட்களைக் குறிக்கும். எனவே துல்ஹஜ் பிறை 10,11,12,13 ஆகிய 4 நாட்கள் குர்பானி கொடுக்கலாம்.

குர்பானி பிராணிகள்

நபி (ஸல்) அவர்கள் உயர்தரமான கொம்புகள் உள்ள ஆட்டை குர்பானி கொடுத்தார்கள். வாய், கால்கள், கண்கள் ஆகியவை கறுப்பு நிறமாக அந்த ஆடு இருந்தது. அறிவிப்பவர் : அபூஸயீத் (ரழி) நூல்கள் : திர்மிதி, அபுதாவூத் நஸயீ, இப்னுமாஜா.

1. ஆடு, மாடு, ஓட்டகம் ஆகியவையே குர்பானி பிராணிகள் ஆகும்.
2. மாடு, ஒட்டகம் முதலிய பிராணிகளை 7 நபர்கள் கூட்டாக சேர்ந்து குர்பானி கொடுக்கலாம்.

குர்பானி பிராணிகள் வயது

ஒட்டகம் 5 வயதும், மாடு 2 வயதும், ஆடு ஒரு வயதும், பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

குர்பானி கொடுக்க கூடாத பிராணிகள்

1. கொம்பில் பாதி ஒடிந்த பிராணி 2. காது அறுபட்டது 3.தெளிவாக தெரியும் மாறுதல்கள் உள்ளவை 4. தெளிவாக தெரியும் நோய் உள்ளவை 5. பிறவியிலேயே நொண்டியாக உள்ள பிராணி 6. இடைபட்ட காலத்தில் எலும்பு முறிந்துவிட்ட நொண்டி 7. காது இல்லாதவை 8. கொம்பு இல்லாதவை 9. பார்வை இல்லாதவை 10. தானாக எழுந்து நடக்க முடியாத பலவீனமானவை, இவைகளை கண்டிப்பாக குர்பானி கொடுக்கக் கூடாது.

குர்பானி அறுக்கும் நேரம்

தொழுகைக்கு முன்பு அறுத்தவர் தனக்கே அதை அறுத்துக் கொண்டார். தொழுகை;கு பின்பு அறுத்தவர் தன் குர்பானியை நிறைவேற்றியவர் ஆவார். முஸ்லிம்களின் வழிமுறையை பேணியவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜுன்தூப் இப்னு ஸுப்யான் (ரழி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்.

ரியாத் மாநகரில் நடைபெறவிருக்கும் மாபெரும் இரத்த தான முகாம்


Bismillah...

இம்முகாமில் தானம் செய்யும் முதல் நூறு பேரின் இரத்தம், இவ்வருடம் புனித ஹஜ் பயணிகளில் அவசர இரத்த உதவி தேவைப்படுவோருக்காக வழங்கப்படவுள்ளது.

கொடை வள்ளல்களே! அணி திரண்டு வாரீர்!! உயிர் காக்கும் இரத்த தானம் செய்வீர்!!! அல்லாஹ்வின் அருளைப் பெறுவீர்.

உயிர்காக்கும் இரத்த தானமும் நன்கொடைக்குச் சமமான நல்லறமே!

உதிரம் கொடுத்து உயிர் காப்போம் என அன்புடன் அழைக்கிறது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ரியாத் மண்டலம்.
இடம்:

KING FAHD MEDICAL CITY, Riyadh

நாள்:

07-12-2007 வெள்ளிக்கிழமை
நேரம்:

மாலை 2 மணி முதல் 6 மணி வரை


தொடர்புக்கு..

050 2016 177, 050 2182 931, 050 0747 443


Thanks...WWW.TNTJ.NET