|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Sunday, June 22, 2008

பெட்ரோல் கதை

கடனை திருப்பிச் செலுத்த முடியாதவர்களுக்கு எல்லாம் அமெரிக்க வங்கிகள் அடித்துப் பிடித்து கடன் கொடுத்துவிட்டு அதற்கான பெரும் விலையை இப்போது தந்து கொண்டிருக்கின்றன.

'சப்-பிரைம்' லோன்கள் என்ற பெயரில் தரப்பட்ட கடன்கள், குறிப்பாக வீடுகள் வாங்க தரப்பட்ட கடன்கள் திரும்பி வரவில்லை.

இப்படி வராமல் போன பல நூறு பில்லியன் டாலர் மதிப்பிலான கடன்களால் அமெரிக்காவின் பல வங்கிகள் நடு்த் தெருவுக்கு வந்துவிட்டன.

அத்தோடு சேர்ந்து கொண்டது அமெரிக்க பொருளாதார தேக்கம். அதன் அடுத்த விளைவு டாலர் மதிப்பின் வீழ்ச்சி. உலக அளவில் பல நாட்டு கரன்சிகளுக்கு எதிரான டாலரின் விலை 20 முதல் 30 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுவிட்டது. இதனால் அமெரிக்க பொருளாதாரத்தில் மேலும் சரிவு.

இப்படியாக அடிமேல் அடி வாங்கி வரும் தங்கள் சந்தையை நிலை நிறுத்த அமெரிக்கர்களுக்கு கிடைத்த கடைசி ஆயுதம் தான் கச்சா எண்ணெய்.

உலகின் தேவையில் கிட்டத்தட்ட 80 சதவீதத்துக்கும் மேல், கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்து அதை ஏற்றுமதி செய்வது என்னவோ செளதி அரேபியா, வெனிசுவேலா, ஈரான், அல்ஜீரியா, யுஏஇ, குவைத் உள்ளிட்ட OPEC (Organization of Petroleum Exporting Countries) நாடுகளாக இருக்கலாம்.ஆனால், இந்த கச்சா எண்ணெயின் வர்த்தகம் நடப்பது அமெரிக்காவிலும் லண்டனிலும் தான். குறிப்பாக அமெரிக்காவின் வால் ஸ்டீரிட்டில் தான் (நம் ஊர் மும்பை புரோக்கர்கள் நிறைந்த தலால் ஸ்டீரிட் மாதிரி). விலை நிர்ணயிக்கப்படுவது டாலரில் தான்.

(இத்தனைக்கும் உலகில் பெரிய அளவில் அமெரிக்காவிலும் பெட்ரோலிய 'ரிசர்வ்' உண்டு. அதை அவர்கள் வெளியே விற்பதில்லை. செளதியிடம் வாங்கிக் கொண்டு பதிலுக்கு கொஞ்சம் பணம், நிறைய போர் விமானங்கள்-ராக்கெட்களை தந்து விடுகிறார்கள், பணத்துக்கு பணம் மிச்சம்.. கூடவே அமெரிக்க தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கு லாபம்!)

இந்த புரோக்கர்கள் தான் நாம் திண்ணும் உப்பில் ஆரம்பித்து நாம் அணியும் பனியன் வரை விலையை நிர்ணயம் செய்கின்றனர்.

பங்குச் சந்தை வர்த்தம் என்பதே ஒரு கணிப்பு தான். உண்மையை சொன்னால் 'பெட்டிங்' தான்.. உதாரணத்துக்கு ஒன்றே ஒன்று...

சீனாவில் ஒலிம்பிக் வருதா, அங்கு ஸ்டேடியங்கள் கட்ட இரும்பு அதிகமாக பயன்படுத்தப்படப் போகிறது, இதனால் இரும்பு நிறுவனங்களின் லாபம் அதிகமாகும், இதனால் இரும்பு நிறுவன பங்குகளில் அதிகம் முதலீடு செய்யுங்கோ.. என்று இவர்கள் 'கிளப்பிவிட்டால்' இரும்பு நிறுவனங்களுக்கு ஜாக்பாட் தான். ஒரே நாளில் அவர்களது பங்கு மதிப்பு பல பில்லியன் கூடிவிடும்.

(எதிர்பார்த்தபடி அந்த நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கவில்லை என்றால் அதன் பங்கு மதிப்புகள் மடமடவென சரியும். புரோக்கர்களின் கூவலை நம்பி பணம் போட்டவர்கள் தலையில் துண்டு மிஞ்சும். அது வேறு கதை)

இப்படித்தான் கச்சா எண்ணெயின் விலையையும் அமெரிக்க-இங்கிலாந்து புரோக்கர் நிறுவனங்கள் கூவிக் கூவியே கூட்டிவிட்டுவிட்டன.

குறிப்பாக கோல்ட்மேன் சேக்ஸ், சிட்டி குரூப் (நம்ம சிட்டி பாங்க்), ஜே.பி. மோர்கன் சேஸ், மோர்கன் அண்ட் ஸ்டான்லி ஆகிய நான்கு நிறுவனங்கள் தான் கச்சா எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளில் மிக அதிகமாக முதலீடுகளை தள்ளிவிட்டவர்கள்.

இந்த நிறுவனங்களை 'financial companies' என்று அழைப்பதற்கு பதில் 'oil traders' என்றே அன்புடன் அழைக்கலாம். அந்த அளவுக்கு தங்கள் தொழிலையே கச்சா எண்ணெய்யை சார்ந்து மாற்றி அமைத்துக் கொண்டுவிட்டன.

கச்சா எண்ணெய் விலை கன்னாபின்னாவென உயர்வதற்கு கடவுளைத் தவிர வேறு யாருக்காவது காரணம் தெரியும் என்றால் அது இந்த நான்கு பேராகத் தான் இருக்க முடியும்.

விலை ஏன் உயர்கிறது என்று தெரியாமல் OPEC நாடுகளே திக்குமுக்காடிக் கொண்டிருப்பதும், விலை உயர்ந்தாலும் இந்த நாடுகளுக்கு நயா பைசா லாபம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நான் முன்பே சொன்னது போல பங்குச் சந்தையே ஒரு 'பெட்டிங்' தான். இன்று கச்சா எண்ணெய் விலை என்னவாக இருக்கும் என்று காலையில் புரோக்கர் நிறுவனங்கள் பெட்டிங்கை ஆரம்பித்தால் மாலையில் அந்த நிறுவன சிஇஓக்களும் சிஎப்ஓக்களும் வீடு போவதற்குள் பெட்ரோலியத்தின் விலை பீப்பாய்க்கு மேலும் சில டாலர்கள் உயர்ந்திருக்கும்.

விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம்.. விலையைக் கூட்டிவிட்ட புரோக்கர் நிறுவனங்களுக்கு கமிஷன்.

இப்படியாகத் தான் speculative trading காரணமாக கச்சா எண்ணெய் விலை விண்ணை நோக்கி போய்க் கொண்டே இருக்கிறது. இதை தடுப்பதை விட்டுவிட்டு OPEC உடனே எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் அமெரிக்க எரிசக்தித்துறை அமைச்சர் சாம் போட்மேன்.

எதற்காக கூடுதலாக உற்பத்தி செய்ய வேண்டும்.. அப்படி என்ன திடீரென தேவை அதிகரித்துவிட்டு.. உற்பத்தியை அதிகரித்தாலும் எங்களுக்கு என்ன லாபம் என்று கேட்கின்றன எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள்.

எண்ணெய் விலையை உயர்த்தும் நிதி நிறுவனங்கள்- உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இடையி்ல் சிக்கித் தவிப்பது ஒவ்வொரு சொட்டு பெட்ரோலையும் இறக்குமதி செய்து வாழ்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகள்.

இந்த OPEC, புரோக்கர்கள், சாம் போட்மேன் கதையை எல்லாம் எப்படி சமானிய மக்களுக்கு புரிய வைப்பது என்று தெரியாமல் பிரதமர் மன்மோகன் சிங்கும் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் விழி பிதுங்கிப் போய் நிற்கின்றனர்.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் விலைவாசியும் உயர, மக்கள் வெறுப்பேற, இனியும் சமாளிக்க முடியாது.. பேசாமல் நாமே ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்று முடிவு செய்து தான் அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தையே கையில் எடு்த்து இடதுசாரிகளை காங்கிரஸ் வெறுப்பேற்றுகிறதோ என்னவோ.

அடுத்த முறை பெட்ரோல் பங்குக்குள் நுழையும்போது இந்த 'பெட்ரோல் கதை'யை ஒரு முறை யோசித்துப் பாருங்கள்.. இனி தெரு முக்குக்கு போக எல்லாம் காரையோ பைக்கையோ எடுக்க மாட்டீர்கள்...


நன்றி
தட்ஸ்தமிழ்.காம்

0 Comments:

Post a Comment

<< Home