|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Saturday, December 08, 2007

110 கோடி மக்கள் பாதிக்கப்படுவது நியாயமா?

தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான கூட்டமைப்பும், பசுமைத் தாயகம் அமைப்பும் தமிழ்நாட்டில் புகையிலை கட்டுப்பாடு என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தின. இதில், சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத்துறை மந்திரி அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இதில், மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

ரஜினிக்கு கடிதம்
புகையிலை பழக்கத்தை ஒழிப்பதற்கு இந்த அமைப்புகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பாராட்டத்தக்கவை. புகையிலைக்கு எதிரான போராட்டத்தில் நான் இப்போது ஈடுபடவில்லை. 30 ஆண்டுகளாக புகையிலை பழக்கம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு டாக்டர் ராமதாஸ் குரல் கொடுத்து வருகிறார். அவரை பின்பற்றி நானும் 15 ஆண்டுகளாக இப்பழக்கத்துக்கு எதிராக போராடி வருகிறேன். இந்த பிரச்சினைக்காக முதன்முதலில் போராட்டம் நடத்தியது நாங்கள்தான். சினிமாவில் குடிப்பழக்கம், புகைப்பழக்கத்துக்கு எதிராக நாங்கள்தான் முதன்முதலில் போராட்டம் நடத்தினோம்.

எங்கள் போராட்டத்துக்கு பிறகு நடிகர் ரஜினி, புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். நான் தனிப்பட்ட முறையில் அவருக்கு இதற்காக கடிதம் எழுதினேன். புகைப்பிடிப்பதனால் படம் நன்றாக ஓடிவிடாது. இதற்கு சமீபத்தில் ரஜினி நடித்து திரைக்கு வந்து பெரும் வெற்றி பெற்ற சந்திரமுகி, சிவாஜி (இரண்டிலும் சிகரெட் பிடிக்கும் காட்சி இல்லை) ஆகிய படங்களே உதாரணம்.

நடிகர் விஜய்...

நடிகர் விஜய், மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. அவரை ஏராளமான ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள். அவர் தனது படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடித்து வருகிறார். அவருக்கு ஒரு அறிவுரை சொல்ல விரும்புகிறேன், அவர், சினிமாவில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சில இளம் ஹீரோக்கள் அரிவாளை தூக்கிக் கொண்டு வன்முறைக் காட்சிகளில் நடிக்கிறார்கள். அரிவாளை தூக்குவது ஸ்டைலாகி விட்டது. அவர்கள் அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவர்களைப் பார்த்து தமிழக இளைஞர்கள் கெட்டுப்போகிறார்கள். இளைஞர்களும் அரிவாள் தூக்கிக் கொண்டு வெட்டுக்குத்தில் இறங்கி வருகிறார்கள். சினிமாவில் இதுபோன்ற காட்சிகள் இடம்பெறுவதைத் தடுக்க பசுமை தாயகத்தினர், தணிக்கைக்குழு அதிகாரிகளை பார்த்து பேசி அவர்களுக்கு புரிய வைக்கவேண்டும்.

மந்திரி கையெழுத்து போட்டாலும்.....

நான் சுகாதாரத்துறை மந்திரியாக இருப்பதால் நினைத்தது நடந்துவிடும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், நான் கையெழுத்துப்போட்டால் அப்பணி ஒரு சதவீதம்தான் முடிந்ததாகத்தான் அர்த்தம். அடுத்த கட்டத்துக்கு போவதற்கு தடையாக சில மந்திரிகளே இருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு, சிகரெட் பாக்கெட்டுகளில் 50 சதவீத அளவுக்கு புகையிலைக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற வேண்டும் என்று நான் உத்தரவிட்டதும், அந்த அறிவிப்பினை திரும்பப் பெறவேண்டும் என்று கோரி, என்னை 4 முதல்-மந்திரிகள் நேரில் சந்தித்து பேசினார்கள். 150 எம்.பி.க்கள் நேரில் சந்தித்தார்கள். 7 முதல்-மந்திரிகள் எனக்கு கடிதம் எழுதினார்கள். இதனால், பீடித்தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என சிலர் கூறினார்கள். இந்தியாவில் 30 லட்சம் பேர்தான் இத்தொழிலில் ஈடுபட்டிருப்பார்கள். ஆனால், இவர்களுக்காக 110 கோடி மக்கள் பாதிக்கப்படுவது நியாயமா?

பயப்பட மாட்டேன்

இதுபோன்ற எதிர்ப்புகளுக்கு பின்னணியில், புகையிலை பொருட்கள் தயாரிப்பு முதலாளிகள் இருக்கிறார்கள். அவர்கள் தூண்டுதலின் பேரில் சில அரசியல்வாதிகள் செயல்படுகிறார்கள். ஆனால், எத்தனை எதிர்ப்பு வந்தாலும் பயப்படமாட்டேன். புகையிலை பொருள் விற்பனை மூலம் இந்தியாவில் உள்ள 3 பெரிய நிறுவனங்கள், 40 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார்கள். ஆனால் புகையிலை பொருள்களுக்கெதிரான விளம்பரங்கள், அதற்கான சிகிச்சை போன்றவற்றுக்காக ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடி செலவாகிறது. புகையிலை பொருள்களுக்கு எதிராக நாங்கள் மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது. பொதுமக்களும் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தவேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தை சரியாக பயன்படுத்தி அவர்கள் களத்தில் இறங்கலாம்.

அலுவலகங்களில் புகைபிடித்தால்.....

இன்னும் சில மாதங்களில் பணியிடங்களில் புகை பிடிப்பதற்கு தடை சட்டம் கொண்டு வரப்படும். அலுவலகத்தில் சிகரெட் பிடிக்க முடியாத நிலை ஏற்படும். அதற்கு உங்களது ஒத்துழைப்பு தேவை. சென்னையை புகையிலைப் பொருட்கள் இல்லாத நகரமாக மாற்ற தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

புகையில்லா சென்னை...

விழாவில் பேசிய, சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன், சென்னையை புகையிலை பொருள் இல்லாத நகரமாக விரைவில் மாற்றுவோம் என்று அறிவித்தார். காஞ்சி மாவட்டம் வாரணவாசி கிராமத்தை புகையில்லா கிராமமாக மாற்றிய பஞ்சாயத்து தலைவர் அ.வே.நாகராசனுக்கு அன்புமணி, பரிசு வழங்கினார்.

சண்டிகர் ïனியன் பிரதேசத்தில் தனியொருவராக போராடி மாநிலத்தையே புகையில்லா மாநிலமாக மாற்றிக் காட்டிய ஹேமந்த் கோஸ்வாமி, இரா.செந்தில் எம்.பி, பசுமைத்தாயகம் செயலாளர் அருள், நவின் வில்சன், விதுபாலா, ஜோசப்ராஜ் மற்றும் சிரில் அலெக்சாண்டர் ஆகியோர் பேசினர். மாநகராட்சி 10-வது மண்டலத் தலைவர் மு.ஜெயராமன் நன்றி கூறினார்.

Thanks...Dailythanthi.com

0 Comments:

Post a Comment

<< Home