|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Saturday, November 24, 2007

வளைகுடா தொழிலாளர்களுடன் அல் ஜஸீரா

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனுபவிக்கும் துன்பங்களை அல் ஜஸீராவின் ஆங்கில சானல் ஒளிபரப்ப துவங்கியுள்ளது. ' வியர்வை துளிகளும் கண்ணீர் கன்னங்களும்' என்ற புலனாய்வு தொடரின் முதல் எபிஸோடு கடந்த சனிக்கிழமையன்று ஒளிபரப்பானது.
வளைகுடாவில் வாழும் ஆசியத்தொழிலாளர்களின் துன்பங்களுக்காக முதன்முறையாக ஒரு சானல் கேமராவை தூக்கி செல்கிறது. ஜேம்ஸ் போக்ஸ் எனும் அல் ஜஸீரா ரிப்போட்டரின் தலைமையிலான குழு மூன்று மாதங்களாக பணியிடங்களிலும் தொழிலாளர்கள் தங்கும் கேம்புகளிலும் செய்த விசாரணையின் தொகுப்புதான் இந்த தொடராகும்.

இந்தியா, வங்கதேசம்,நேபாளம், இலங்கை,பாகிஸ்தான் போன்ற நாடுகளிலுள்ளவர்கள் இங்கு வருவதற்கு முன்பும் வந்த பிறகும் படும் துன்பங்கள் இதில் நேரடியாக காட்டப்படுகின்றன.

மிகமிக குறைந்த சம்பளத்தில் 50 டிகிரிவரை கொதிக்கும் வெயிலில் இவர்கள் இரத்தம் சிந்துகின்றனர். அடிப்படை வசதிகள் பெயரளவுக்குக் கூட இல்லாமல் நோய்கள் வெகுமதியாக கிடைக்கும் கேம்புகளில்தான் இவர்கள் தங்கள் வாழ்வை கழிக்கின்றனர்.
இவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்த தொழிலதிபர்கள் சிந்தித்ததுகூட கிடையாது. இவர்களை அனுப்பி வைக்கும் நாடுகளும் இந்த விஷயங்கள் பற்றி முழுமையாக அறிந்திருந்தும் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அதை கண்டுகொள்ள மறுக்கிறது என்பதையும் அல்ஜஸீரா சுட்டிக்காட்டுகிறது. ஏஜென்ஸிகளும் முதலாளியும்தான் இவர்களுடைய வியர்வையையும் உழைப்பையும் சுரண்டி கொழுக்கின்றனர். 2006- ல் மட்டும் யூ.ஏ.இ யில் 109இந்திய தொழிலாளர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள்.



செல்வகுமார் தங்கவேலு என்கிற இந்தியத்தொழிலாளி > தனக்காக யாரும் இரக்கப்பட வேண்டாம், துயரப்பட வேண்டாம் பொருளாதார பிரச்சனைக்கு தற்கொலை தான் தீர்வு என எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதின் குறிப்புகள் அல் ஜஸீராவிற்கு கிடைத்துள்ளன.

விஸாவிற்கும் டிக்கெட்டிற்கும் ஆன செலவுகளை ஈடுசெய்வதற்காக தொழிலாளிகளிடம் பிடித்தம் செய்வது சட்டப்படி குற்றமென்றபோதும் சர்வசாதாரணமாக இதை செய்கிறார்கள் என்று அல் ஜஸீரா கூறுகிறது. பணியிடங்களில் நடைபெறும் மரணங்கள் பற்றி பெரும்பாலும் விசாரணை செய்யப்படுவதில்லை. சமீபத்தில் கத்தாரில் சுவர் இடிந்து விழுந்து நான்கு தொழிலாளிகள் மரணமடைந்த சம்பவமும் ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டது.

இப்படியாக ஆசியத்தொழிலாளர்களின் துன்பங்கள் சர்வதேச மனித உரிமை கமிஷன் மற்றும் பத்திரிகைகளின் கவனத்திற்கு வந்திருக்கின்றன. பல வளைகுடா நாடுகளில் தொழிலாளர்களின் நலன்கருதி தொழிற் சட்டங்களில் புதிய பல விஷயங்களை உட்படுத்தும் நடவடிக்கை துவங்கியிருப்பதாகவும் ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொகுப்பு : முஹம்மது மாஹீன் , ரியாத்

0 Comments:

Post a Comment

<< Home