|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Friday, December 08, 2006

முத்துப்பேட்டையில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கைது!

முஸ்லிம்களின் உணர்வுகள் உரசிப்பார்க்கப்படும் ஊர்வலங்களுக்கு மட்டுமே அரசு அனுமதி!

நீதி கோரும் முஸ்லிம்களின் ஊர்வலங்களுக்கு அனுமதி மறுப்பு!!

என்றுதான் மாறுமோ இந்த அவலம்!!!


முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பாபர் மஸ்ஜித் இடித்த தினமான நேற்று கண்டனம் தெரிவிக்கும் வகையில் முத்துப்பேட்டை சுங்க இலாகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய தீர்மானித்திருந்தனர். அதன்படி முறையாக போலீசாரிடம் அனுமதி கோரியும் இருந்தனர்.

சட்டம் ஒழுங்கிற்கு பாதகம் ஏற்படும் வகையிலும், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் வினாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்ற போர்வையில் முஸ்லிம்களின் உணர்வுகளை உரசிப்பார்க்கும் சங்க்பரிவார கும்பல்களின் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி பலப்பரிட்சை பார்க்கும் காவல் துறை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நியாயமான டிசம்பர் 06 ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்க மறுத்தது. இருந்த போதிலும் சொன்னபடி குறிப்பிட்ட நேரத்தில் காவல்துறையின் தடையை மீறி ஊர்வலம் நடைபெறும் என்று முத்துப்பேட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது.

அதனடிப்படையில் நேற்று காலை சரியாக 11:15 மணிக்கு ஆசாத் நகரில் இருந்து ஊர்வலமாக புறப்பட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தயாரானார்கள். மாவட்ட தலைநகர் திருவாரூரில் பிரத்தியேக கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்ந்த போதும் திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் ஏ.அன்சாரி அவர்கள் இந்த ஊர்வலத்திற்கு தலைமை ஏற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முத்துப்பேட்டை அவருடைய சொந்த ஊராக இருப்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த ஊர்வலத்திற்கு தலைமை ஏற்றார்.

எதிர்பார்த்தது போலவே காவல் துறையினர் தங்கள் மனசாட்சிக்கு விரோதமாக, கடமை தவறி காரியம் செய்தனர். ஊர்வலத்தில் வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 2 திருமண மண்டபகங்களில் தங்க வைக்கப்பட்டனர். மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

ஊர்வலத்தில் கலந்து கொண்டு கைதான ஒருவர் கருத்து கூறுகையில்..

சட்டவிரோதமாக 400 ஆண்டு கால பழமை வாய்ந்த, வரலாற்று சிறப்புமிக்க பாபர் மஸ்ஜிதை இடித்தவர்கள் இந்த நாட்டில் எதையும் எந்த நேரத்திலும் செய்ய முடிகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று கொக்கரிக்க முடிகிறது. பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போதே இதுபற்றி தெளிவாக அவர்களால் பேச முடிகிறது. இதையெல்லாம் கண்டிக்க திராணியற்றவர்களாகவே நமது ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள் என்பது கண்கூடு. ஆனால் அநீதி இழைக்கப்பட்ட முஸ்லிம்கள் தங்கள் உணர்வுகளை ஜனநாயக முறையில் வெளிப்படுத்த இந்த அரசும், அரசு இயந்திரங்களும் கட்டுப்பாடுகளையும், தடைகளையும் பிறப்பிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.

சுதந்தர இந்தியாவை கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகித்த முஸ்லிம்களின் உணர்வுகள் ஆட்சியாளர்களின் மௌனங்களால் எள்ளிநகையாடப்படுகிறது. பாபர் மஸ்ஜித் தொடர்பான வழக்குகளை துரிதமாக நடத்தாமல் தாமதப்படுத்துவதால் இந்திய முஸ்லிம்களுக்கு நீதி வெளிப்படையாக மறுக்கப்படுகிறது. இந்தப்போக்கை அரசியல்வாதிகளும், அரச இயந்திரங்களும் மாற்றிக்கொள்ளாதவரை அவர்கள் தங்களை ஒரு ஜனநாயகவாதி என்று சொல்லும் தகுதியை இழந்தவர்களாகத்தான் முஸ்லிம்களின் பார்வையில் தெரிவார்கள். தெரிகிறார்கள்.

போராட்ட களத்தின் புகைப்படங்களை காண கீழே சொடுக்கவும்.

தொகுப்பு - 1

தொகுப்பு - 2

தொகுப்பு - 3

வெளிச்சத்திற்காக முத்துப்பேட்டையிலிருந்து முத்துப்பேட்டையார்.

0 Comments:

Post a Comment

<< Home