|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, December 07, 2006

மேட்டுப்பாளையத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்!
ஏராளமான ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் கைது!!

மேட்டுப்பாளையத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் கைது செய்யப்பட்டனர்.

அரசு இயந்திரங்களின் உருட்டலும், தவ்ஹீத் ஜமாஅத்தினரின் தனியாத தாகமும்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தெளிவாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பஸ் நிலையம் முன்பு டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேட்டுப்பாளையம் தாசில்தார் ஆர்.மல்லிகாராணி போலீசாரின் பாதுகாப்பு பணியை பார்வையிடுகிறார் என்றும் தகவல். மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அதிகாரி அண்ணாதுரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு வண்டிகளும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இவைகளை கண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் மிரளுவார்கள் என்று அரசு இயந்திரங்கள் தப்புக் கணக்கிட்டிருந்தனர். இந்த உருட்டல் மிரட்டல்களையெல்லாம் கண்டு பலக்கப்பட்டுப்போன தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் காலை 10 மணிக்கு அல்லாஹ் அக்பர், அல்லாஹ் அக்பர் என்ற சங்க நாதத்துடன், பச்சை, வெள்ளை, கருப்பு கொடியை ஏந்தியவர்களாக மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் முன்பு குவியத்தொடங்கினார்கள். ஆட்சியாளர்களின் செவி வழியாக அவர்களின் உள்ளங்கள் மிரளும் வகையில் ஜனநாயக முறையிலான கோசங்களை எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டார்கள்.

ஆர்ப்பாட்டம் தொடங்கியதும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் துணை சூப்பிரண்டு ஜி.பி.ஆறுமுகம் (பெரியநாயக்கன்பாளையம்), துரைசாமி (நாமக்கல்) ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வர மூர்த்தி சப்-இன்ஸ்பெக்டர் மரியதாஸ் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சுற்றிவளைத்து கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் கலந்து கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனம் மூலம் கல்யாண மண்டபத்திற்கு கொண்டு சென்றார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர துணைத்தலைவர் ஹபிபுல்லா தலைமை தாங்கினார். செயலாளர் இப்ராஹிம் முன்னிலை வகித்தார். நகர துணைத்தலைவர் அப்துல் ரசீத் ஆர்ப்பாட்டத்தை துவங்கி வைத்தார்.

எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் எங்கள் இறை இல்லமான பாபரி மஸ்ஜிதை மீட்காமல் விடமாட்டோம் என்று கூறி ஏராளமானோர் ஆண்கள், சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தையுடன் பெண்கள் கலந்து கொண்டது பார்ப்பவரின் உள்ளத்தை கவர்ந்திழுத்தது.

ஆட்சியாளர்களின் செவிப்புலன்கள் இன்னும் எத்தனை காலங்களுக்குத்தான் பரிசோதிக்கப்படாமல் இருக்கப்போகிறதோ?

வெளிச்சத்திற்காக மேட்டுப்பாளையத்திலிருந்து நிஸா மைந்தன்.

0 Comments:

Post a Comment

<< Home