வரதட்சனைக்கு எதிராக முஸ்லிம் பெண்கள்!
வரதட்சணை வாங்குவதை எதிர்த்து
முஸ்லிம் பெண்கள் நடத்தும் தெருமுனை கூட்டங்கள்
டிசம்பர் 1-ந் தேதி முதல் 10 நாட்கள் நடைபெறும்
சென்னை, நவ.29-
வரதட்சணை வாங்குவதை எதிர்த்து முஸ்லிம் பெண்கள் நடத்தும் தெருமுனை கூட்டங்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது.
முஸ்லிம்களின் நிலை
சென்னையில் ஜமா அத்தே இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஏ.மும்தாஜ்பேகம், மத்திய சென்னை அமைப்பாளர் பாத்திமாஜலால் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
சமூகத்தின் அடித்தளமாக இருக்கின்ற குடும்ப அமைப்பை வலுபடுத்துவதற்காக இஸ்லாம் தெளிவான, தீர்க்கமான சிறப்பான வழிமுறைகளையும், நெறிமுறைகளையும் எடுத்துரைத்துள்ளது. ஆனால் இன்றைய நாளில் முஸ்லிம்களின் நிலைமை என்ன? இஸ்லாமிய குடும்பவியல் நெறிமுறைகள் குறித்து அறியாதவர்களாக இருக்கின்றனர்.
விழிப்புணர்வு பிரசாரம்
இஸ்லாம் மதத்திற்கு எதிராக வாழ்க்கை முறையை அமைத்து கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். முஸ்லிம் சமுதாயத்தில் வரதட்சணை வாங்குவது அதிகரித்துள்ளது. இதுமோசமான அறிகுறியாகும். இது வேதனை அளிக்கும் வகையில் உள்ளது. பெண்களுக்கு சொத்து உரிமை மறுக்கப்படுகிறது. தலாக் பற்றி சரியான புரிதலும், தெளிவும் இல்லாமல் போய் இருப்பதும் இதற்கு சான்றாகும்.
இஸ்லாம் வழங்கியுள்ள குடும்பவியல் நெறிமுறைகளை நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக ஜமா அத்தே இஸ்லாமிய ஹிந்த் பேரியக்கம் இஸ்லாமிய குடும்பவியல் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த பிரசாரத்தை வரும் டிசம்பர் 1-ந் தேதியில் இருந்து 10-ந் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ள இருக்கிறோம்.
தெருமுனை கூட்டங்கள்
மூன்று முக்கிய இலக்குகளை முன் நிறுத்தி இந்த பிரசாரத்தை மேற்கொள்கிறோம். ஒன்று, ஜமா அத்தே இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள், ஊழியர்கள் தங்கள் வாழ்வில் இஸ்லாமிய குடும்பவியல் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதாவது திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, வாரிசுசட்டங்கள், கணவன்-மனைவி உரிமைகள்-கடமைகள் சம்பந்தமான இஸ்லாமிய குடும்பவியல் நெறிமுறைகளை அவர்கள் நன்கு விளங்கி இருப்பதுடன் அவற்றின் அடிப்படையில் அவர்களின் வாழ்க்கை அமைய வேண்டும்.
இரண்டாவதாக இஸ்லாமியர்கள் திருக்குரானில் கூறிய கட்டளைகளை ஏற்று தங்கள் வாழ்வை அமைத்து கொள்ள வேண்டும். மூன்றாவதாக இஸ்லாமிய குடும்பவியல் நெறிமுறைகளையும் கட்டளைகளையும் நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே இந்த பிரசாரத்தின் நோக்கம் ஆகும். டிசம்பர் 2-ந் தேதி சென்னை புரசைவாக்கத்தில் சிறப்பு கருத்தரங்கம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
கோவை, சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சை, நெல்லை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய முக்கிய இடங்களில் கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள், ஆலோசனைக்கூட்டங்கள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளை பெண்களே நடத்துவார்கள்.
பிரசாரத்தின் போது குடும்பவியல் நெறிமுறைகள் விளக்குகின்ற சிற்றேடுகள் மக்களுக்கு விநியோகிக்கப்படும்.
எங்கள் அமைப்பு சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாகூரில் தெத்தி கிராமத்தில் அரசு அளித்த நிலத்தில் 100 வீடுகளை கட்டி கொடுத்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேட்டியின் போது தென் சென்னை அமைப்பாளர் கதீஜாகாஜா, சீமாமுஹ்சின், மகளிர் அணி உறுப்பினர் ஷாநாஸ்பேகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
நன்றி - தினத்தந்தி 29-11-2006
0 Comments:
Post a Comment
<< Home