|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Tuesday, November 14, 2006

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அவசியம்!

முஸ்லிம் சமுதாயத்தினரிடையே இக்கோரிக்கை வலுத்து வருகிறது: மொய்லி

புது தில்லி, நவ. 13: கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரைவிட மிகவும் பின்தங்கிய நிலையில் முஸ்லிம்கள் இருப்பதால் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டுச் சலுகை அளிப்பது அவசியம் என்று கர்நாடக முன்னாள் முதல்வரும் மூத்த அரசியல்வாதியுமான வீரப்ப மொய்லி கருத்து தெரிவித்தார்.

இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ய நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்புக்குழுவின் தலைவரும், நிர்வாக சீர்திருத்தக்குழு தலைவருமான மொய்லி நீண்ட அரசியல் அனுபவமும் நிர்வாகத் திறமையும் மிக்கவர். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மொய்லி, கர்நாடகத்தில் முதல்வராக இருந்தபோது முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீட்டுச் சலுகை கிடைக்க வழி செய்தார்.

கர்நாடகம் முன்னோடி:

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களில் சமுதாய ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின் தங்கிய நிலையில் உள்ளவர்களைப் போலவே முஸ்லிம்களும் இருந்ததால், அந்தப் பிரிவுக்கான இட ஓதுக்கீட்டை அளவை அதிகரித்து, அதில் முஸ்லிம்களுக்கு சலுகையை வழங்கினார். இதனால் கர்நாடக மாநில மக்கள் தொகையில் 11 சதவீதமாக இருந்த முஸ்லிம்களில் 4 சதவீத பேர் சலுகை பெற்றனர்.

அம்பேத்கர் ஆதரவு:

இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு நாடுகள் பிரிவதற்கு முன்னதாக, அரசியல் சட்டத்தை வகுப்பதற்கான சிறப்புக் கூட்டத்தில் பேசிய அம்பேத்கர் முஸ்லிம்களின் பின் தங்கிய நிலைமையைச் சுட்டிக்காட்டி அவர்களுக்கும் இட ஓதுக்கீட்டுச் சலுகைகள் அளிக்க வேண்டும் என்றார். ஆனால் மத அடிப்படையில் பாகிஸ்தான் என்ற தனி நாடு ஏற்பட்டு, அது ரத்தக்களரியில் முடிந்ததால், இந்தியாவில் தங்கிய முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தேவை என்று யாரும் வலியுறுத்தவில்லை. இதை அப்போதே செய்து, அரசியல் சட்டத்திலும் சேர்த்திருந்தால் முஸ்லிம்கள் முன்னேற்றம் அடைந்திருப்பர் என்று வீரப்ப மொய்லி சுட்டிக்காட்டினார்.

முக்கியத்துவம்:

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து மொய்லி கூறுவது முக்கியத்துவம் வாய்ந்தது. ஏன் ஏன்றால் முஸ்லிம்களின் பின் தங்கிய நிலைமையைச் சுட்டிக்காட்டிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவர்களும் முன்னேற்றம் அடைய நடவடிக்கைகள் தேவை என்று மத்திய ஆட்சியாளர்களை வலியுறுத்தியிருக்கிறார். நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் சமச்சீரான வளர்ச்சியை எட்ட சிறுபான்மைச் சமூகத்தவருக்கு இட ஓதுக்கீட்டுப் பலன்கள் கிடைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் பேசியிருக்கிறார்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டுச் சலுகை தருவதை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக, பாமக, ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக் ஜனசக்தி போன்ற தோழமைக் கட்சிகளும் ஆதரிக்கின்றன.

முஸ்லிம் சமுதாயத்தினரிடையே இக்கோரிக்கை வலுத்து வருகிறது. அவர்களுடைய சமூக, பொருளாதார நிலைமையை ஆராய நீதிபதி ராஜீந்தர் சச்சார் தலைமையில் மத்திய அரசு தனி குழுவை நியமித்துள்ளது. இக்குழுவின் பரிந்துரை கிடைத்ததும் சிறுபான்மைச் சமூக மக்களுக்கு, அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டுச் சலுகையை மத்திய அரசு அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நன்றி - தினமணி.

0 Comments:

Post a Comment

<< Home