|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, November 09, 2006

அமெரிக்க பாராளுமன்ற தேர்தல்: புஷ் கட்சி படுதோல்வி!!

அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் திருப்பம்:
ஜனாதிபதி புஷ் கட்சி படுதோல்வி
செனட் சபை தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் மீண்டும் வெற்றி



வாஷிங்டன், நவ.9-

அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபை, செனட் சபை மற்றும் மாகாண கவர்னர் தேர்தலில் ஜனாதிபதி புஷ்சின் குடியரசு கட்சி படுதோல்வி அடைந்தது. ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றார்.

அமெரிக்க தேர்தல்

அமெரிக்காவில் செனட் (மேல்சபை), மக்கள் பிரதிநிதிகள் சபை (கீழ் சபை) என்று இரு சபைகள் உள்ளது. செனட் சபையில் மொத்தம் 100 பேரும், காங்கிரஸ் என்று அழைக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் சபையில் 435 பேரும் உறுப்பினர்களாக உள்ளனர்.

செனட் சபையின் பதவி காலம் 6 ஆண்டுகள் ஆகும். மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

இந்த நிலையில் 2006-08ம் ஆண்டுக்கான மக்கள் பிரதிநிதிகள் சபை தேர்தல் (110-வது தேர்தல்) கடந்த 7-ந்தேதி நடந்தது. இதனுடன் சேர்த்து செனட் சபையின் 33 உறுப்பினர் பதவிகளுக்கும், 36 மாகாண கவர்னர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும் நடைபெற்றன. இதுதவிர அந்தந்த மாகாணங்களுக்கான நீதிபதிகளை தேர்வு செய்வதற்கும் தேர்தல் நடந்தது.

எதிர்க்கட்சி அமோக வெற்றி

நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் சார்ந்துள்ள ஜனநாயக கட்சி (எதிர்க்கட்சி) மக்கள் பிரதிநிதிகள் சபையின் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 435 இடங்களில், அந்த கட்சி 227 இடங்களில் வெற்றி வாகை சூடியது. இதன்மூலம் அந்த கட்சி அறுதிப் பெரும்பான்மை பலம் பெற்றது.

புஷ்சின் குடியரசு கட்சிக்கு 195 இடங்கள் மட்டுமே கிடைத்தது. 13 இடங்களில் முடிவு அறிவிக்கப்படவில்லை.

ஹிலாரி மீண்டும் தேர்வு

33 செனட் சபை உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தலில் ஜனநாயக கட்சி கூடுதல் இடங்களை கைப்பற்றியது. அந்த கட்சி புஷ் கட்சியின் வசம் இருந்த 4 இடங்களையும் பிடித்தது. இருப்பினும் இந்த தேர்தல் முடிவு மூலம் செனட் சபையில் குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் தலா 49 இடங்களை பெற்றுள்ளன. 2 இடத்தில் முடிவு அறிவிக்கப்படவில்லை.

செனட் தேர்தலில் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன், நிïயார்க்கில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் வரும் 2008-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கூறி உள்ளனர்.

இந்தியர் வெற்றி

ஜனநாயக கட்சி சார்பில் கெய்த் எலிசன் என்பவர் மின்னசோட்டாவில் வெற்றி பெற்றுள்ளார். இவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். அமெரிக்க வரலாற்றில் முஸ்லிம் ஒருவர் செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதன்முறை.

குடியரசு கட்சி சார்பில் செனட் சபை தேர்தலில் போட்டியிட்ட அமெரிக்க வாழ் இந்தியர் பாபி ஜிண்டால் அமோக வெற்றி பெற்றார். அவர் லூசியானாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பதிவான மொத்த வாக்குகளில் அவருக்கு 88 சதவீதம் வாக்குகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மாகாண கவர்னர்கள்

மாகாண கவர்னர் தேர்தலிலும் ஜனநாயக கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி வாகை சூடியது. 36 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், அந்தக் கட்சி ஏற்கனவே தன் வசம் இருந்த 14 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. மேலும் குடியரசு கட்சியின் வசம் இருந்த 6 இடங்களையும் கைப்பற்றியது. இதன்மூலம் மொத்தம் உள்ள 50 மாகாண கவர்னர் பதவிகளில், அந்தக் கட்சிக்கு தற்போது 28 இடங்கள் உள்ளன.

குடியரசு கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்களில் ஹாலிவுட் நடிகரும், கவர்னருமான அர்னால்டு ஸ்வாஷ்நேகர் முக்கியமானவர். அவர் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புஷ் அதிர்ச்சி

இந்த தேர்தல் முடிவுகள் புஷ்சுக்கு அதிர்ச்சி அளித்துள்ளன. இது ஈராக் பற்றிய அவரது கொள்கைகளுக்கு கிடைத்த தோல்வியாக கருதப்படுகிறது.

மேலும் இந்த தேர்தல் மூலம் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி மக்கள் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பலம் பெற்றும், செனட் சபையில் கூடுதல் பலம் பெற்றிருப்பதும் புஷ்சுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முக்கியமான விஷயங்களில் அவர் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.

இருப்பினும் இந்த தேர்தல் முடிவின் மூலம் புஷ் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை.

நன்றி: தினத்தந்தி

0 Comments:

Post a Comment

<< Home