|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Monday, November 13, 2006

தெரியாதவர்கள் தெரிந்து கொள்வோம்!

தெரிந்தவர்கள் சொல்லுங்கள், தெரியாதவர்கள் தெரிந்து கொள்வோம்!

இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனுக்கு அமெரிக்காவின் கைப்பாவை நீதிமன்றம் 5.11.2006 அன்று தூக்குத் தண்டனை விதித்துள்ளது.

1982ல் துஜைல் நகருக்கு சதாம் சென்றபோது அவரைக் கொலை செய்ய முயற்சி நடைபெற்றது. அச்சம்பவத்தின் தொடர்பாக 148 பேர் கொல்லப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்காவின் கைப்பாவை நீதி மன்றம் சதாமுக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளது. அவர் மீதான இதர வழக்குகளிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த காலங்களில் பல்வேறு நாடுகளில் அவற்றை ஆண்ட தலைவர்கள் இதுபோன்ற தண்டனைகளுக்கு ஆளானது உண்டு. அத்தகைய வரலாற்று நிகழ்வுகளில் சிலவற்றை இங்கே நாம் தெரிந்து கொள்வோம்.

தூக்கிலிடப்பட்ட பாகிஸ்தான் அதிபர்:

பாகிஸ்தானில் இருந்து வங்க தேசம் தனி நாடாகப் பிரிந்ததும் யாஹியாகானுக்குப் பதிலாக பூட்டோ அதிபர் ஆனார். 1977 ஜூலையில் ஜியாவுல் ஹக் ராணுவப் புரட்சி செய்து, ஆட்சியைப் பிடித்தார். பூட்டோவைக் கைதும் செய்தார்.

பூட்டோ இருந்தால் என்றைக்கும் தனக்கு ஆபத்து என ஜியா எண்ணினார். 1974ல் தனது அரசியல் எதிரியான கசூரியின் தந்தையைக் கொன்றதாக பூட்டோ மீது வழக்குப் பதிவு செய்தார்.

அவசரகதியில் விசாரணை நடத்தப்பட்டு, 18.3.1978ல் பூட்டோவுக்கு லாகூர் உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. அத்தண்டனையை 18.2.1979ல் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

பூட்டோவைத் தூக்கிலிட வேண்டாம் என எல்லா நாடுகளும் விடுத்த வேண்டுகோளை ஜியா செவிமடுக்கவில்லை. 4.4.1979ல் ராவல்பிண்டியில் பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.


எகிப்து அதிபர் சுட்டுக் கொலை:

எகிப்து நாட்டை 1955ல் குடியரசாக அறிவித்தவர் நாசர். 1967ல் இஸ்ரேலுடன் நடைபெற்ற போரில் எகிப்து தோல்வி அடைந்தது. இதனால் மனம் உடைந்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட நாசர் 1970ல் காலமானார்.

அவரையடுத்து, அதிபரான சதாத், 1973ல் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினார். ஏற்கெனவே தாங்கள் இழந்திருந்த பகுதிகளை மீட்டார். நாட்டின் கௌரவத்தையும் காப்பாற்றினார்.

அதேநேரத்தில், 1977ல் இஸ்ரேலுக்கு அவர் சென்று, அந்நாட்டுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார். அவருக்கும், இஸ்ரேல் அதிபர் மனாச்சிம் பெகினுக்கும் சமாதானத்துக்கான நோபல் பரிசு 1978ல் கிடைத்தது.

இஸ்ரேலுடன் சதாத் சமரசம் செய்து கொண்டது இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. 6.10.1981ல் ராணுவ அணிவகுப்பை சதாத் பார்வையிட்டபோது, தீவிரவாதிகள் சுற்றி வளைத்து, அவரை சுட்டுக் கொன்றனர்.

நாட்டை விட்டே மன்னரை துரத்திய மதத் தலைவர்:

ஈரானில் 1979ல் புரட்சி வெடித்து, மன்னர் ''ஷா''வின் அரண்மனையை புரட்சிக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர். தன்னைக் காப்பாற்றும்படி அமெரிக்காவிடம் ''ஷா'' முறையிட்டார். அமெரிக்கா அனுப்பிய விமானத்தில் ஏறி, அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்று அங்கு தஞ்சம் புகுந்தார்.

1.2.1979ல் கொமேனி ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ''ஷா''வுக்கு அடைக்கலம் தரக் கூடாது என அமெரிக்காவுக்குக் கண்டனம் தெரிவித்தார்.

அமெரிக்காவில் சில காலம் இருந்து விட்டு, எகிப்தில் ''ஷா'' தஞ்சம் அடைந்தார். அங்கேயே நோய்வாய்ப்பட்டு இறந்தும் போனார்.

அமெரிக்காவால் தூக்கிலிடப்பட்ட ஜப்பான் பிரதமர் டோஜோ:

இரண்டாவது உலகப் போரின்போது அமெரிக்க துறைமுகத்தைத் தாக்கி, அந்நாட்டை ஜப்பான் பிரதமர் டோஜோ சண்டைக்கு இழுத்தார். அப்போரில் ஜப்பானின் மீது இரு முறை அணுகுண்டுகளை அமெரிக்கா வீசி, பேரழிவை ஏற்படுத்தியது.

போரின் முடிவில் ஜப்பான் தோல்வியைக் கண்டதால், டோஜோவின் மீது மக்கள் வெறுப்பை உமிழ்ந்தனர். போரில் வென்ற நேச நாடுகளின் படைகள் டோஜோவைக் கைது செய்யச் சென்றபோது அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். அம்முயற்சியில் அவர் தோல்வியுற்றார்.

அவரைக் குற்றவாளி ஆக்கி, தூக்குத் தண்டனை விதித்தனர். 23.12.1948ல் அவர் தூக்கிலிடப்பட்டார்.

நடுரோட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட இத்தாலி சர்வாதிகாரி:

இரண்டாவது உலகப் போரின் முடிவில் தோல்வி அடைந்ததால் இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினியை ஃபாசிஸ்ட் கட்சித் தலைமை பதவி நீக்கம் செய்து, காவலில் வைத்தது.

அங்கிருந்து ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரின் உதவியுடன் வடக்கு இத்தாலிக்கு முசோலினி தப்பிச் சென்றார். எனினும், புரட்சிப் படையினரால் ஆபத்து ஏற்படும் என்று தெரிந்ததும், தனது குடும்பத்தினருடன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார்.

வழியிலேயே புரட்சிப் படையினர் முசோலினியையும், அவரது காதலி கிளாரா உள்ளிட்டவர்களையும் கைது செய்தனர். 28.4.1945ல் நடுத் தெருவில் அவர்களை நிற்க வைத்து, துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றனர்.

மிலான் நகரில் தெரு விளக்குக் கம்பங்களில் அவர்களின் சடலங்கள் தொங்க விடப்பட்டன. பின்னர் சடலங்களைப் புதைத்தனர்.

0 Comments:

Post a Comment

<< Home