|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Saturday, November 18, 2006

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்குமா?

சச்சார் குழு சிபாரிசு பிரதமரிடம் தாக்கல்.

புதுடெல்லி, நவ.18-

முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலை குறித்த சச்சார் குழுவின் சிபாரிசு அறிக்கை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

முஸ்லிம்களின் வாழ்க்கை நிலைமை

இந்தியாவில் முஸ்லிம்களின் நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த மார்ச் மாதம், டெல்லி ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையில் 7 பேர் கொண்ட குழு ஓன்றை மத்திய அரசு அமைத்தது.

இந்த குழு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வாழும் முஸ்லிம்களின் வாழ்க்கை நிலைமை குறித்து ஆய்வு செய்தது. மத்திய-மாநில அரசு துறைகளுடன் கலந்து ஆலோசித்து முக்கிய தகவல்களை திரட்டியது. வல்லுனர்கள் தயாரித்துள்ள ஆய்வுக் கட்டுரைகளையும் பரிசீலித்தது. பல்வேறு நிலைகளில் வாழும் மக்களின் கருத்துக்களையும் கேட்டு அறிந்தது.
அறிக்கை தாக்கல்

சச்சார் குழுவின் அறிக்கை நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி சச்சார் பிரதமரை சந்தித்து அறிக்கையை வழங்கினார்.

அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

பின்தங்கிய நிலை

இதர சமுதாயத்தினருடன் ஒப்பிடுகையில், இஸ்லாமிய சமுதாயத்தினர் சற்றே பின்தங்கி உள்ளனர். சமுதாயத்தில் நலிவடைந்தவர்களாகவும், அதிக எழுத்தறிவு இல்லாதவர்களாகவும் கல்வி வாய்ப்பு இழந்தவர்களாகவும் பொது மற்றும் தனியார் துறைகளில் குறைந்த எண்ணிக்கையில் பணிபுரிபவர்களாகவும் உள்ளனர். சுய தொழில் புரிவதற்கான வங்கிக் கடனுதவியும் இவர்களுக்கு போதிய அளவில் கிடைக்கவில்லை. நகர்ப்புறங்களில் வாழும் பெரும்பாலான இஸ்லாமிய ஏழைகளுக்கு குடிசைப்பகுதி மட்டுமே கிட்டுகிறது. எனினும் பல்வேறு மாநிலங்களிலும் மண்டலங்களிலும் வாழும் இஸ்லாமிய சமுதாயத்தினரின் வாழ்க்கையில் சிறிய முன்னேற்றங்கள் கண்டுள்ளன.
எனவே இவர்களுடைய வாழ்க்கை தரம், பொருளாதாரம் முன்னேறுவதற்கும், இவர்களுக்கு போதிய கல்வியும் கிட்டுவதற்கான திட்டங்களை அரசு வடிவமைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இட ஒதுக்கீடு

நீதிபதி சச்சார் கூறுகையில் அறிக்கை ஒருமித்த கருத்துடன் தயாரிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது போன்றவை தொடர்பான சிபாரிசு செய்யப்பட்டு உள்ளதா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, இதுபற்றி அரசாங்கம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

பிரதமர் அறிக்கை

இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் வாழும் இஸ்லாமிய சமுதாயத்தினரின் சமுதாய, பொருளாதார, கல்வித் தரத்தை பற்றிய ஆதாரப்பூர்வமான விரிவான தகவல்கள் இதுவரை திரட்டப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட நிலையில் வாழும் சமுதாயத்தினர் மேம்பாடு காண்பதற்கு இத்தகைய தகவல் தேவை. இத்தகைய சமுதாயத்தினருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் ஏற்றத் தாழ்வையும் அளவிட தக்க ஆய்வுகள் நடத்தப்படுவது அவசியம் ஆகும்.

மாபெரும் முயற்சி

இந்தியாவில் பல சமுதாயத்தினரும் ஒருங்கே வாழ்கின்றனர். நாட்டில் மதசார்பின்மையும் தேசிய ஒருமைப்பாடும் நிலைத்து வளர்கிறது. இஸ்லாமிய சமுதாயத்தினரைப் பற்றிய அறிக்கையை தயாரித்ததற்காக நீதிபதி ராஜிந்தர் சச்சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இஸ்லாமிய சமுதாயத்தினர் சமூக, பொருளாதார, கல்வி மேம்பாடு காண்பதற்கு விரிவான ஆலோசனைகள் நடத்தப்படும். சமுதாயத்தில் சமத்துவம் வளர்வதற்கு இது ஒரு மாபெரும் முயற்சியாகும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

நன்றி - தினத்தந்தி.

0 Comments:

Post a Comment

<< Home