டிசம்பர்-06, மௌலவி பி.ஜே ஆற்றிய உரை.
கடந்த 06-12-2006 அன்று சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாபர் மஸ்ஜித் இடிப்பை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்ற மௌலவி பி.ஜெய்னுல்ஆப்தீன் அவர்கள் ஆற்றிய உரை.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பிற்குறிய சகோதரர்களே, முஸ்லிம்கள் ஏன் இப்படி ஒன்று திரண்டு எழுச்சியோடு போராடுகிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கக்கூடிய மாற்றுமத சகோதரர்களே, பத்திரிக்கையாளர்களே, உளவுத்துறை நண்பர்களே..
பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 14 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையிலும் முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு இந்த நாட்டிலே அரசியல் சாசனம் சொல்கிறபடி சமஉரிமை நடைமுறையில் இருக்கிறதா என்பதற்கு பாபர் மஸ்ஜித்தான் ஒரு மிகப்பெரிய அளவுகோலாக முஸ்லிம்களாகிய எங்களால் கருதப்படுகிறது.
மும்பையிலே நடந்த குண்டு வெடிப்பு வழக்கு விசாரிக்கப்பட்டு அதில் 100 பேர் குற்றவாளிகள் என்று இப்பொழுது தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த குண்டு வெடிப்பிற்கு முன்னால் மும்பையிலே ஒரு கலவரம் நடந்தது. பாபர் மஸ்ஜித் இடிப்பையொட்டி நடத்தப்பட்ட அந்த கலவரத்திலே மும்பை குண்டுவெடிப்பில் பலியானவர்களை விட பல மடங்கு முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். அதற்கு இன்னும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அந்த கலவரம் 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் நாள் பாபரி பள்ளிவாசல் இடிக்கப்பட்டதை ஒட்டித்தான் அன்று மும்பையிலே நடந்தது.
1992-லே பள்ளிவாசல் இடிக்கப்பட்டதற்காக போடப்பட்ட வழக்கு என்ன ஆனது? அதற்கு பின்னால் நடந்த குற்றங்களுக்கெல்லாம் நீதிமன்றம் தண்டனை அளிக்கிறது. உடனடியாக தீர்ப்புகள் அளிக்கப்படுகிறது. அதே போல குஜராத்திலே ஒரு கோவிலிலே தாக்குதல் நடத்தியதற்காக தொடரப்பட்ட வழக்கிலும் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு அளிக்கப்படுகிறது. முஸ்லிம்களுடைய பிரச்சனை என்று வரும்போது மட்டும் அரசாங்கமும், நீதிமன்றங்களும் தொடர்ந்து மந்தமாக, ஓரவஞ்சனையாக, பாரபட்சமாக நடந்து வருவதை நாங்கள் தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம்.
பாபர் மஸ்ஜிதுடைய பிரச்சனையை எடுத்துக்கொண்டால் 450 ஆண்டுகளாக அது பள்ளிவாசலாக இருந்தது. 450 ஆண்டுகளும் அந்த பள்ளியிலே தொழுகை நடந்தது. 450 ஆண்டு கால அந்த பாரம்பரியமிக்க அந்த பாபர் மஸ்ஜிதிலே 1948-ம் ஆண்டு இரவோடு இரவாக ஒரு கும்பல் புகுந்து ராமர், லெட்சுமனர், சீதையுடைய 3 சிலைகளை கொண்டு போய் உள்ளே வைக்கிறார்கள். இந்த சிலைகளை அத்துமீறி வைத்ததற்காக அன்றைய காலகட்டத்திலேயே அப்போதைய காவல்துறையிலே புகாரும் பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கையும் (FIR) போடப்பட்டிருக்கிறது.
1948-ல் போடப்பட்ட அந்த எப்.ஐ.ஆர்-க்கு இன்றைய தேதிவரை தீர்ப்பு வழங்கப்படவில்லை. 1948-ல் போடப்பட்டு 2006-வரை தீர்ப்பளிக்கப்படவில்லை என்று சொன்னால் இந்த நாட்டிலே முஸ்லிம்கள் நேர்மையாக, நியாயமாக நடத்தப்படுகிறார்களா? அன்றைக்கு சிலையை வைத்துவிட்டு மத்தியில் ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு இருந்தது. அயோத்தி இருக்கும் உத்தரபிரதேச மாநிலத்திலும் கூட கோவிந்தவல்லபபந்த் என்பவர் தலைமையிலே காங்கிரஸ் அரசுதான் இருந்தது. மத்தியிலும் காங்கிரஸ் அரசு, மாநிலத்திலும் காங்கிரஸ் அரசுதான் அன்றைய காலத்தில் இருந்தது.
பள்ளிவாசலில் சட்டவிரோதமாக சிலைகளை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அன்றைய காங்கிரஸ் அரசு அந்த சிலைகளுக்கு பூஜை நடக்க வேண்டாமா என்று சொல்லி பள்ளியின் பூட்டை திறந்து விட்டு அந்த சிலைகளுக்கு பூஜை செய்வதற்கு அனுமதியும் அளித்தது. இவை அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில்தான் நடந்தது. ராஜிவ்காந்தியுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த அயோத்தியிலிருந்துதான் பிரச்சாரத்தை ஆரம்பிப்பேன் என்று சொல்லி பொதுமக்களுக்கும் பூஜை செய்வதற்காக அந்த வழிபாட்டுத்தலத்தை திறந்து விடுகிறார்கள்.
1992-ம் ஆண்டு சட்டவிரோதமாக நரசிம்மராவுடைய ஆட்சியிலே போலிஸ் பாதுகாப்போடும், ரானுவத்துடைய ஒத்துழைப்போடும் அந்த பாபரி மஸ்ஜித் இடிக்கப்படுகிறது. யார் இடித்தார்கள் என்பது உலகத்திற்கே தெரியும். அவர்கள் ரதயாத்திரை நடத்தினார்கள், கடப்பறையால்தான் கரசேவை செய்வோம், மண்வெட்டியால்தான் கரசேவை செய்வோம் என்று வெளிப்படையாக அறிவித்தார்கள். நீதிமன்ற உத்தரவை மீறி அரசியல் சாசனத்தையும் மீறி உலகத்திற்கே தெரிகிற வகையிலே படை திரட்டிக்கொண்டுபோய் இந்த நாட்டிலே சட்டத்தை காலில் போட்டு மிதித்துவிட்டு இடித்த அந்த சங்க்பரிவார கும்பலுக்கு இந்த நாட்டிலே வழங்கப்பட்ட தண்டனை என்ன?
அத்வானிக்கு நீதிமன்றம் அளித்த தண்டனை என்ன தெரியுமா? ஒரே ஓருநாள் அடையாளத்திற்காக அவருடைய சொந்த வீட்டிலே சிறைவாசம் வைக்கப்படுகிறார். அப்படியென்றால் உச்சநீதிமன்றத்துடைய உத்தரவுகளை மீறிய அனைவருக்கும் இப்படி ஒருநாள் சிறைவாசம் கொடுக்கப்படுமா? அப்படியென்றால் இங்கு என்ன தகவலை நாம் பெறுகிறோம், சட்டம் ஆள் பார்த்து பாய்கிறது. முஸ்லிம்களுடைய பிரச்சனை என்று சொன்னால் சட்டம் ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது, அது நடைமுறைக்கு வருவதில்லை. தொடர்ச்சியாக அடுக்கடுக்காக முஸ்லிம்களாகிய எங்களுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது.
பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட அந்த நேரத்திலே இந்த நாட்டிலே பிரதமர் என்று ஒருவர் இருந்தாரா? இருக்கவில்லை, ஓடி ஒழிந்திருந்தார். பத்திரிக்கையாளர்கள் தொடர்புகொள்கிறார்கள். பிரதமர் எங்கே என்று தெரியவில்லை. பல கட்சி தலைவர்கள் தொடர்பு கொள்கிறார்கள், பிரதமர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. முஸ்லிம் தலைவர்கள் எல்லாம் தொடர்பு கொள்கிறார்கள், பிரதமர் எங்கே என்று தெரியவில்லை. பள்ளியை இடித்து முடிக்கிறவரை இந்த காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் ஓடி ஒளிந்து கொண்டார். இடித்து முடிக்கட்டும், அதுவரை இந்த பிரச்சனை நம்மிடம் வரக்கூடாது என்று தலைமறைவாகி இருந்தார். இடித்து முடிக்கும்வரை இந்த நாட்டிலே ஒரு பிரதமர் இல்லை என்ற ஒரு கேவலமான ஒரு நிலையை நரசிம்மராவ் ஏற்படுத்தினார்.
இடித்து முடித்தவுடன் வெளியே வந்த நரசிம்மராவ் என்ன சொன்னார்? எந்த இடத்திலே பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதோ அதே இடத்தில் மஸ்ஜிதை கட்டித்தருவோம் என்று சொன்னார். 1992-லே அளிக்கப்பட்ட வாக்குறுதி, 2006 முடியும் தருவாயில்கூட நிறைவேற்றப்படவில்லை. நிறைவேற்றப்படாமல் இருந்தால்கூட மனம் பொருத்துக்கொள்ள முடியும், ஆனால் பள்ளிவாசல் கட்டித்தருவோம் என்று வாக்குறுதி அளித்த மூன்றே நாட்களில் தற்காலிக கோவில் கட்டப்படுகிறது. அந்த தற்காலிக கோவில் இன்று 14 ஆண்டுகளாக இருந்து கொண்டும் இருக்கிறது. அப்படியானால் இந்திய முஸ்லிம்களைப்பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக நாம் எந்த தீமையை செய்தாலும் அவர்கள் ஊமையாக இருப்பார்கள். எந்த ஒரு அநீதிக்கு எதிராகவும் முஸ்லிம்கள் குரல் கொடுக்க மாட்டார்கள், களமிறங்கி போராட மாட்டார்கள், நியாயத்திற்காக போராட மாட்டார்கள் என்று இப்படியெல்லாம் தப்புக்கணக்கு போட்டுக்கொண்டுதான் அன்றைக்கு இருந்தவர்களும் இருந்தார்கள். இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.
கடந்த பாராளுமன்ற தேர்தலிலே நாமும் அவர்களை மன்னிதிருந்தோம், ஏனெனில் கடந்த கால தவறுகளுக்கு காங்கிரஸ் பொதுக்குழுவில் மன்னிப்பு கேட்டிருந்தார்கள், அதற்கு முந்திய பாராளுமன்ற தேர்தலில் நரசிம்மராவை தூக்கி வெளியே கடாத்தினார்கள், அதனால் நாமும் அவர்களை நம்பி மன்னித்திருந்தோம். மன்னித்ததோடு மட்டுமல்லாமல் மீண்டும் ஆட்சியிலும் அமர வைத்தும் இருக்கிறோம். இவர்கள் ஆட்சியில் அமர்ந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த இரண்டு ஆண்டிலே அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சியினரும் பாபர் மஸ்ஜித் கட்ட வேண்டும் என்பதை உறுதியான கொள்கையாக கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
அப்படியிருக்க இந்த இரண்டு ஆண்டுகளில் பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைப்பதற்காக இந்த காங்கிரஸ் அரசு ஒரு முயற்சியும் செய்யவில்லை. பாபர் மஸ்ஜிதை நம்மிடம் தருவதற்கான ஒரு அறிகுறியும் தென்படவில்லை. அதற்கு மாற்றமாக மூன்றடுக்கு ரானுவ பாதுகாப்பு போட்டு அதை கோவிலாகவே தக்க வைப்பதற்கு நாங்கள் ஆவண செய்வோம் என்று சொல்லி இந்த மன்மோகன் சிங்குடைய காங்கிரஸ் அரசு 4 மாதத்திற்கு முன்பு உச்ச நீதிமன்றத்திலே மனு தாக்கல் செய்கிறது. அப்படியானால் இந்த காங்கிரஸ் அரசின் நிலை என்னவாக இருக்கிறது? முஸ்லிம்களுக்கு நியாயம் வழங்க இவர்கள் தயாராக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
இந்த அநீதியை முறியடிக்க வேண்டுமானால் நம்முடைய போராட்டத்தை இன்னும் வீரியமாக நாம் எடுத்துச்செல்ல வேண்டும். நம்முடைய இந்த போராட்டங்கள் போதுமான அளவு இல்லை என்று இந்த காங்கிரஸ் அரசு கணக்கு போடுகிறது. இன்றைய தினம் இங்கு நாம் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருக்கிறோம், எந்த அமைப்பும், எந்த கட்சிகளும் செய்யாத அளவிற்கு தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களிலே நம்முடைய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பிலே ஆர்பாட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
இவ்வளவிற்கு பிறகும் இந்த காங்கிரஸ் அரசு அசைந்து கொடுக்கவில்லையானால், கூட்டணி கட்சிகளுடைய ஒருமித்த கருத்துக்களை இந்த நல்ல சந்தர்ப்பத்தில் பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகாரம் காணவில்லையானால், பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்பட வில்லையானால் மொத்த நாடும் குலுங்குகிற வகையிலான ஒரு போராட்டத்தை இந்த அரசு சந்திக்க வேண்டிவரும் என்று எச்சரித்து, மத்திய காங்கிரஸ் அரசு பாபர் மஸ்ஜித் விசயத்திலே போடுகிற இரட்டை வேசத்தை கலைத்து துரிதமாக முஸ்லிம்களிடம் பாபர் மஸ்ஜித் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்த போராட்டத்தில் மூலமாக தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி - WIN TV
வெளிச்சத்திற்காக எழுத்துருவில் முத்துப்பேட்டையார்.
0 Comments:
Post a Comment
<< Home