|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, December 28, 2006

நாட்டின் வளர்ச்சியின் பங்கு முஸ்லிம்களை அடையவில்லை!!

வளர்ச்சித் திட்டங்களில் முஸ்லிம்களுக்கு உரிய பங்களிப்பு கிடைக்க அரசு உறுதி: தலித் - சிறுபான்மையினர் மாநாட்டில் மன்மோகன் பேச்சு


புதுதில்லி, டிச. 28:

நாட்டின் வளர்ச்சியில் உரிய பங்கு முஸ்லிம்களை சென்றடையவில்லை. இந்த சமத்துவமற்ற நிலையைப் போக்குவதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதி எடுத்துள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற தலித் சிறுபான்மையினர் சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய மன்மோகன் சிங் மேலும் கூறியதாவது:

முஸ்லிம்களை திருப்திபடுத்தும் நோக்கில் மத்திய அரசு நடந்துகொள்வதாக பாஜக குற்றம்சாட்டுகிறது. ஆனால் நாட்டின் வளர்ச்சியில் அனைத்து சமுதாயத்தினருக்கும் சம பங்கு கிடைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலைமைகள் பற்றி சச்சார் கமிட்டி அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து சமூகத்தினருக்கும் உரிய வாய்ப்பு, வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டியது ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசின் கடமையாகும்.

மற்றவர்களைக் காட்டிலும் சில சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக. சீக்கியர்களும் ஜைன மதத்தைச் சேர்ந்தவர்களும் நாட்டின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கு சிறப்பான பங்காற்றியுள்ளனர்.

சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்சினைகளைக் காட்டிலும் தலித்துகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மிகவும் மாறுபட்டது. தலித்துகள் இன்னமும் பாகுபாட்டுடன் தான் நடத்தப்படுகின்றனர். தீண்டாமையும் நிறவெறியும் ஒரே மாதிரியான கொடுமைகள். தீண்டாமை என்பது சமூகப் பாகுபாடு மட்டுமல்ல மனித சமுதாயத்துக்கே களங்கம் ஏற்படுத்துவது.

அரசியல் சாசனம் மற்றும் சட்ட ரீதியாக தலித்துகளுக்கு பாதுகாப்பும் ஆதரவும் தரப்பட்டு 60 ஆண்டுகள் கழிந்த பின்னரும் நாட்டின் சில பகுதிகளில் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடு இருக்கத்தான் செய்கிறது. இத்தகைய அநீதிகளுக்கு எதிராக அரசியல், சமூக, கலாசார மற்றும் அறிவுபூர்வமான போராட்டம் தொடர வேண்டும்.

சமூக, பொருளாதார ரீதியிலும் கல்வித் தரத்திலும் தலித்துகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அரசு உண்மையான அக்கறையுடன் செயல்பட உறுதிபூண்டுள்ளது. அதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் எடுக்கும்.

தலித்துகள் மற்றும் பழங்குடிகளின் முன்னேற்றத்துக்கான அநேக நடவடிக்கைகளையும் கடந்த 2 இண்டுகளாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுத்து வருகிறது என்றார் மன்மோகன். மன்மோகன் சிங் கலந்துகொண்ட இந்த மாநாட்டுக்கு மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி ஏற்பாடு செய்திருந்தது.

முன்னாள் பிரதமர்கள் வி.பி. சிங், ஐ.கே. குஜ்ரால் உள்ளிட்டோரும் இம்மாநாட்டில் பங்கேற்றனர். (முன்னதாக, சச்சார் கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, 'வாழ்க்கைத் தரம் உயர வளர்ச்சித் திட்டங்களில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை தரப்படும்' என்று மன்மோகன் சிங் பேசியதற்கு பாஜகவினர் கடும் ஏதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது).

நன்றி – தினமணி 28-12-2006

0 Comments:

Post a Comment

<< Home