|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Sunday, December 24, 2006

கருணாநிதி வீட்டு முன்பு ஜெயலலிதா சிலை!

? ஸ்ரீரங்கம் கோவில் எதிரில் ஈ.வெ.ரா. பெரியார் சிலை வைப்பது குறித்து முஸ்லிம்களின் நிலை எப்படி இருக்க வேண்டும்?

எஸ்.எம். முஹைதீன், சென்னை - 84

! இது குறித்து இஸ்லாத்தின் கருத்து மிகத் தெளிவானது. கடவுள்கள் என்று கருதப்படுபவர்களுக்கோ தலைவர்களுக்கோ சிலைகள் வைப்பது அறவே கூடாது என்பது தான் இஸ்லாத்தின் நிலை முஸ்லிம்களின் கருத்தும் இதுதான்.

கல்லுக்கு சக்தி உண்டா? என்று ஒருபுறம் பேசிக் கொண்டு இன்னொரு கல்லை மதிப்பது முரண்பாடானது என்பதில் இஸ்லாம் மிகத் தெளிவாகவுள்ளது.

பெரியாரை அவரது தொண்டர்கள் மதிப்பதை விட பல கோடி மடங்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம்கள் மதிக்கின்றனர். ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முஸ்லிம்கள் சிலை வைக்கவில்லை. யாரேனும் வைக்க முயன்றால் அதைத் தடுத்து நிறுத்தும் அளவுக்கு சிலை வைப்பதில் முஸ்லிம்கள் கடுமையான வெறுப்புக் கொண்டுள்ளனர்.

சிலைகள் வைக்கும் கலாச்சாரம் பெருகிய பிறகு, சிலைகள் பல்வேறு கலவரங்களுக்கு காரணமாக அமைவதையும் நாம் காண்கிறோம்.

சிலைகள் மூலம் தான் ஒருவரது புகழைத் தக்க வைக்க முடியும் என்பதும் மூட நம்பிக்கையே. சிலை வைக்கப்படாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளவுக்கு சிலை வைக்கப்பட்டவர்கள் புகழ் அடைய முடியவில்லை என்பதே இதற்குச் சான்றாகவுள்ளது.

தலைவர்களை மதிக்கிறோம் என்ற பெயரில் வைக்கப்பட்ட சிலைகள் தான் பிற்காலத்தில் கடவுள்களாகக் கருதப்பட்டன என்பது வரலாறு. இன்று தலைவர்களுக்கு வைக்கப்படும் சிலைகள் சில வருடங்களில் கடவுள்களாக மாறும் என்பதை மறுக்க முடியாது.

பெரியாருக்கோ வேறு எந்தத் தலைவருக்கோ கோவில் எதிரிலோ வேறு எந்த இடத்திலோ அறவே சிலை வைக்கக் கூடாது என்பது தான் முஸ்லிம்களின் நிலை என்பதை நாம் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கிறோம்.

அதே சமயம் இஸ்லாத்தின் மீது நம்பிக்கை உள்ள மக்கள் தான் அறிவுப் பூர்வமான இந்த நிலைப்பாட்டை ஏற்பார்கள். அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல் உணர்வுப் பூர்வமாக முடிவு எடுப்பவர்கள் இதை உணர மாட்டார்கள். ஏற்கவும் மாட்டார்கள்.

மார்க்கத்தின் அடிப்படையில் நமது கருத்து இதுதான் என்றாலும் மார்க்கத்தை ஏற்காதவர்கள் சிலை வைக்கும் விசயத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்பதற்கும் இஸ்லாம் வழிகாட்டுகிறது.

காய்தல் உவத்தல் இன்றி எல்லா நிலையிலும் முஸ்லிம்கள் நீதி வழுவாமல் நடந்து கொள்ள வேண்டும். தனக்கு எதை விரும்புகிறார்களோ அது போன்றதைத் தான் மற்றவர்களுக்கும் விரும்ப வேண்டும்.

இந்துக்கள் புனிதமாகக் கருதும் மிகப் பெரிய கோவிலின் எதிரில் அக்கோவிலையும் அதில் வைக்கப்பட்டுள்ள சாமி சிலையையும் கடுமையாக எதிர்த்த ஈ.வெ.ரா பெரியாரின் சிலையை நிறுவுவது அறிவுடமையாகாது. ஒருநாள் இல்லாவிட்டால் ஒரு நாள் இது பிரச்சனையை ஏற்படுத்தவே செய்யும்.

திருவல்லிக்கேணி பள்ளிவாசலின் அருகே விநாயகர் ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அதுபோல் இந்துக்கள் மட்டுமே நிறைந்து வாழும் பகுதியில் முஸ்லிம்களின் மத அடிப்படையிலான ஊர்வலங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இதற்கு என்ன காரணம்? தெருக்கள் அனைவருக்கும் பொதுவானது என்றாலும் நேர் எதிர் சிந்தனை கொண்ட இரு சாரார் மோதிக் கொள்ளும் வாசலை அடைக்க வேண்டும் என்பதால் தான் இவ்வாறு முடிவு எடுக்கப்படுகிறது. இதை முஸ்லிம்களாகிய நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

வீதிகள் அனைவருக்கும் சொந்தம் என்று காரணம் காட்டி திருவல்லிக்கேணி மசூதிக்கு முன்னால் விநாயகர் ஊர்வலம் நடத்துவதை நாம் ஏற்க மறுப்பதற்கு உள்ள எல்லா நியாயங்களும் ஸ்ரீரங்கம் கோவிலை வழிபடும் மக்களுக்கும் உள்ளன.

நாளை பள்ளிவாசலுக்கு எதிரில் அல்லது சர்ச்சுகளுக்கு எதிரில் தான் பெரியார் சிலை வைப்போம் என்று பிடிவாதம் பிடிக்க இது வழி வகுக்கும் என்பதையும் நாம் நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்.

பகுத்தறிவுப் பாதையில் வந்ததாகக் கூறிக் கொள்பவர்கள் இதை உணர்ச்சிப் பூர்வமாக அணுகாமல் விளைவுகளைக் கவனித்து அறிவுப்பூர்வமாக முடிவு எடுக்க வேண்டும்.

இந்த நாட்டில் ஒருவர் தனக்கு விருப்பமானவரின் சிலையை நிறுவிக் கொள்ளும் உரிமை படைத்துள்ளார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதை புரிந்து கொள்வதில் பெரும்பாலும் இந்திய மக்கள் தவறிழைக்கிறார்கள்.

ஒரு மனிதன் தனக்குச் சொந்தமான இடத்தில் சிலை நிறுவிக் கொள்ளலாம் என்பது தான் இதன் கருத்து. யாருக்கும் சொந்தமில்லாத அல்லது அனைத்து தரப்பினருக்கும் சொந்தமான அரசு இடத்தில் தனக்கு விருப்பமான சிலையை நிறுவிக் கொள்ளலாம் என்பது இதன் பொருளல்ல.

இதுபோன்ற பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது என்றால் எவரும் ஆட்சேபிக்காத போது தான் அரசு அதை அனுமதிக்க வேண்டும். இதுதான் நேர்மையான நியாயமான முடிவாகும்.

கருணாநிதியின் வீட்டு வாசலுக்கு எதிரில் ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டால் அதைக் கருணாநிதியால் ஒருக்காலும் சகித்துக் கொள்ள முடியாது. அதுபோல் ஜெயலலிதாவின் வீட்டு வாசலுக்கு முன் னால் கருணாநிதி சிலை வைக்கப்பட்டால் அதை ஜெயலலிதா சகிக்க மாட்டார். அப்படி வைக்கப்பட்டால் அது பல்வேறு பிரச்சனைகளுக்குத் தான் வழிவகுக்கும்.

அதுபோல் வீரமணியின் வீட்டுக்கு எதிரே விநாயகரின் சிலையை வைத்தால் அல்லது அவரிடமிருந்து பிரிந்து சென்ற வர்களின் சிலையை வைத்தால் அதை ஆதரித்து வீரமணியால் அறிக்கை வெளியிட முடியாது.

இதே அடிப்படையில் தான் ஸ்ரீரங்கம் விவகாரத்தை அரசு அணுகியிருக்க வேண்டும்.

ஸ்ரீரங்கத்தில் எவ்வளவோ இடங்கள் உள்ளன. பிரச்சனைக்கு வழிவகுக்காத இடத்தில் அவர்கள் சிலை வைக்க முடியும். அல்லது கோவிலுக்கு எதிரில் தான் வைப்போம் என்பதில் உறுதியாக இருந்தால் சொந்தப் பணத்தில் கோவிலுக்கு எதிரில் இடத்தை விலைக்கு வாங்கி அங்கே சிலை வைக்கலாம். சொந்த இடத்தில் சிலை வைப்பதை மற்றவர்கள் ஆட்சேபிக்கும் உரிமை கிடையாது.

திராவிடர் கழகத்தினர் கோவிலுக்கு எதிரே தான் சிலை வைப்போம் என்று பிடிவாதம் பிடித்து சிலை வைத்ததும், அரசாங்கம் இதற்கு அனுமதி அளித்ததும் அமைதியை விரும்பும் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத நியாயமற்ற நடவடிக்கையாகும்.

ஒருவரது நம்பிக்கையைப் புண்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்வதற்கு இது முன்னுதாரணமாகக் கொள்ள வழிவகுக்கும்.

கருணாநிதி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கலவரங்கள் தொடர்வதற்கு அவரது இதுபோன்ற விவேகமற்ற நடவடிக்கைகள் தான் கடந்த காலங்களில் காரணமாக அமைந்தன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

நன்றி - உணர்வு

0 Comments:

Post a Comment

<< Home