|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Wednesday, September 05, 2007

நோன்பு திறக்கும் போது ஓதும் துஆ ஆதாரப்பூர்வமானதா?

ஏகனின் திருப்பெயரால்..
நோன்பு திறக்கும் போது அல்லாஹும்ம லக சும்து என்று தொடங்கும் துஆவை தமிழக முஸ்லிம்கள் பரவலாக ஓதி வருகின்றனர்.

நோன்பு கால அட்டவனையிலும் இந்த துஆவை அச்சிட்டு விநியோகம் செய்து வருகின்றனர்.

பெரும்பாலான பள்ளிவாசல்களிலும் நோன்பு துறக்கும் போது இமாம்கள் இந்த துஆவை சப்தமிட்டு மக்களுக்கு கூறி, இதை சொல்ல வைக்கின்றனர்.

அதனால் பெரும்பாலான தமிழக முஸ்லிம்கள் நோன்பு துறக்கும் போது இந்த துஆவை ஓதும் வழக்கமுடையோராக உள்ளனர்.

இந்த துஆவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதியதாக சில நூல்களில் பதிவு செய்யப்பட்டுடிருக்கின்றது. இதனடிப்படையில் தான் இமாம்கலால் இந்த துஆ பிரபல்யமாக்கப்பட்டது.

இந்த துஆ பல்வேறு அறிவிப்பாளர்கள் வழியாக பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அவை அனைத்துமே பலவீனமானவையாக உள்ளன.

முஆத் பின் ஸஹ்ரா அறிவிக்கும் ஹதீஸ்

அல்லாஹும்ம லக சும்து என்று தொடங்கும் துஆவை நபிகள் நாயகம் (ஸல்) ஓதியதாக முஆத் பின் ஸஹ்ரா என்பவர் அறிவிக்கும் செய்தி அபுதாவுத், பைஹகி உள்ளிட்ட சில நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை அறிவிக்கும் முதல் அறிவிப்பாளராகிய முஆத் பின் ஸஹ்ரா என்பவர் நபித்தோழர் அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சந்திக்காத ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பாக அறிவிப்பதை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

இது தவிர இந்த அறிவிப்பில் அடுத்தடுத்த அறிவிப்பாளர்களும் பலவீனமானவர்களாக உள்ளனர்.

இப்னு அப்பாஸ் அறிவிக்கும் செய்தி

இந்தக் கருத்துடைய ஹதிஸ் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்ரானியின் கபீர் உட்பட சில நூல்களில் இந்த அறிவிப்பு பதிவாகியுள்ளது.

இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துல் மாலிக் பின் ஹாரூன் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று ஹதிஸ்கலை அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

எனவே இதையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.

அனஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி

இதே கருத்து அனஸ் (ரலி) அவர்கள் வழியாகவும் தப்ரானியின் அவ்ஸத், தப்ரானியின் ஸகீர் ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான தாவுத் பின் ஸபர் கான் என்பவர் பலவீனமானவர் என்று ஹதீஸ்களை அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

எனவே மேற்கண்ட துஆவை நோன்பு திறக்கும் போது ஓத வேண்டும் என்பது நிரூபிக்கப்படவில்லை என்று நாம் கூறிவருகின்றோம்.

தஹபள்ளமவு... என்று ஆரம்பிக்கும் துஆ!

இந்த நிலையில் நோன்பு துறக்கும் போது தஹபள்ளமவு என்று தொடங்கும் துஆவை ஓதுவது நபிவழி என்று நாம் கூறினோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அபுதாவுத், ஹாகிம், பைஹகி, தாரகுத்னி ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட துஆவை நாம் ஓதி வருமாறு கூறினோம். நமது உரைகளிலும் கட்டுரைகளிலும், நூல்களிலும் இதைக் தெரிவித்தோம்.

எதனடிப்படையில் இதை ஆதாரமாக ஏற்றோம் என்பதை முதலில் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

இந்த செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்து விட்டு பின்வருமாறு கூறுகிறார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மர்வான் பின் ஸாலிம், அவரிடமிருந்து அறிவிக்கும் ஹுஸைன் பின் வாகித் ஆகிய இருவரும் அறிவிக்கும் ஹதீஸ்களை புகாரி, முஸ்லிம் ஆகிய இரு அறிஞர்களும் ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிடுகிறார்.

ஹாகிம் நூலை மேற்பார்வை செய்த ஹதீஸ் கலை அறிஞர் தஹபி அவர்களும் இதை வழி மொழிந்துள்ளார்கள்.

மேற்கண்ட இரண்டு அறிவிப்பாளர்களும் புகாரி, முஸ்லிம் நூல்களில் ஆதாரமாகக் கொள்ளப்பட்டிருப்பதாக ஹாகிம், தஹபி ஆகியோர் கூறியதன் அடிப்படையில் தான் இதை நாமும் வழிமொழிந்தோம்.

புகாரி, முஸ்லிம் ஆகியோர் ஒருவரை ஆதாரமாக கொள்வதென்றால் அவரது நம்பகத் தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் தான் ஏற்பார்கள். பலவீனமானவர்களையோ, யாரென்று அறியாதவர்களையோ அவர்கள் ஆதாரமாகக் கொள்வதில்லை.

இதில் பெரும்பாலான அறிஞர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. புகாரியின் சில அறிவிப்பாளர்கள் பற்றி சிலர் விமர்சனம் செய்திருந்தாலும் அதற்கு தக்க பதிலும் அளிக்கப்பட்டுள்ளது.

ஹாகிம், தஹபி ஆகிய இருவரும் மேற்கண்ட இரண்டு அறிவிப்பாளர்கள் பற்றி புகாரி முஸ்லிமில் இடம் பெற்றவர்கள் எனக் கூறுவதை நம்பித் தான் இதை ஆதாரப்பூர்வமானது என்று கூறினோம்.

மேலும் இதைப் பதிவு செய்துள்ள தாரகுத்னி அவர்களும் இதை ஹசன் எனும் தரத்திலமைந்த ஹதீஸ் என்று சான்று அளித்துள்ளார்கள்.

ஆனால் ஹாகிம், தஹபி, தாரகுத்னி ஆகியோரின் கூற்றுக்கள் தவறு என்பது மறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் அறிவிக்கும் எந்த ஹதிஸும் புகாரியிலும், முஸ்லிமிலும் இல்லை.

ஹாகிம், தஹபி ஆகியோர் தவறான தகவலைத் தந்துள்ளார்கள். புகாரி, முஸ்லிம் நூல்களில் மர்வான் அல்அஸ்பர் என்பார் அறிவிக்கும் ஹதீஸ் தான் புகாரியில் இடம் பெற்றுள்ளது. மர்வான் பின் ஸாலிம் அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் இல்லை. மர்வான் அல் அஸ்பர் என்பவரை மர்வான் பின் ஸாலிம் என்று ஹாகிம், தஹபி ஆகியோர் தவறாக விளங்கி இருக்கலாம் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறுவது மறு ஆய்வின் போது நமக்கு தெரியவருகின்றது.

மேலும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரை பற்றி வேறு எந்த அறிஞராவது குறிப்பிட்டுள்ளாரா என்று ஆய்வு செய்ததில் இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாறு கூறியதாக தெரியவில்லை. (இப்னு ஹிப்பானை பின்பற்றி இமாம் தஹபீ அவர்கள் மட்டும் இவர் நம்பகமானவர் என்று கூறப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.)

இப்னு ஹிப்பான் அவர்கள் யாரென்று தெரியாதவர்களை நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். அவரது பார்வையில் நம்பகமானவர் என்றால் யாராலும் குறை கூறப்படாதவறாக இருக்க வேண்டும். யாரென்றே தெரியாதவர்களை யாருமே குறை கூறி இருக்க முடியாது. இதனால் யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர்கள் பட்டியலில் இடம் பெறச் செய்து விடுவார்.

இதை அனைத்து அறிஞர்களும் நிராகரிக்கின்றனர்.

வேறு எந்த அறிஞரும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையை உருதிப்படுத்தவில்லை.

எனவே யாரென அறியப்படாத மர்வான் வழியாக இது அறிவிக்கபப்படுவதால் இது நிரூபிக்கப்பட்ட நபிமொழி அல்ல.

இதனடிப்படையில் நோன்பு துறக்க தனியாக எந்த துஆவும் இல்லை என்பது நமது மறு ஆய்வில் தெரிகிறது.

சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்ற நபிமொழிக் கேற்ப (புகாரி-5376) பிஸ்மில்லாஹ் கூறுவது தான் சரியான நடைமுறையாகும்.


ஏற்கனவே ஒரு கருத்தைச் சொல்லிவிட்டால் அது தவறு என்று தெரிந்த பின்னர், அதில் பிடிவாதமாக இருப்பதும் பொருந்தாத காரணம் கூறி நியாயப்படுத்துவதும் இறையச்சத்துக்கு எதிரானதாகும். நமது கௌவரத்தை விட மார்க்கம் முக்கியமானது என்ற அடிப்படையில் தெளிவுபடுத்துகிறோம்.

நாம் அல்லாஹ்வுக்கு அஞ்சுவோமே தவிர மனிதர்களுக்கு அஞ்சவில்லை என்பதால் இது பற்றி யார் கிண்டல் செய்தாலும் நமக்கு கவலையில்லை.

மார்க்கம் சம்பந்தமான திருத்தம் என்பதால் இதை ஒவ்வொருவரும் தமக்கு தெரிந்த நண்பர்களுக்கு எப்;படியாவது சேர்த்து விடும் பொறுப்பை நிறைவேற்றி நன்மையை அடைந்து கொள்ளுங்கள்!
நன்றி...ஆன்லைன்பிஜெ

0 Comments:

Post a Comment

<< Home