|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Tuesday, July 10, 2007

Bismillah...
மரண தண்டனையை எதிர்நோக்கும் இலங்கைப் பெண்ணைக் காப்பாற்றுவதற்காக சவுதி மன்னர் தலையிட வேண்டும் என்று கோரிக்கை




சவுதி அரேபியக் குழந்தையைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, மரண தண்டனையை எதிர்நோக்கும் மூதூர் பெண்ணை மீட்பதற்கான இறுதிக் கட்ட முயற்சிகள் நடக்கின்றன.

சவுதி அரேபியாவில் 4 மாத குழந்தையைக் கொன்றதாகக் கூறி, இலங்கையைச் சேர்ந்த இளம் முஸ்லிம் பணிப்பெண்ணான, ரிசானா நபீக் அவர்களுக்கு, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த மாதம் மரண தண்டனை விதித்தது.

அவர் மேன்முறையீடு செய்வதற்கு அவருக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்தக் காலக்கெடு இன்னும் ஒரு வாரத்தில் முடியவுள்ளது.

அவர் இப்போது தண்டனையை எதிர்நோக்குகிறார்- சவுதி அரேபியாவைப் பொறுத்தவரை மரண தண்டனை என்பது சிரச்சேதத்தின் மூலமே நிறைவேற்றப்படும்.

இவருடைய இந்த வழக்கை சர்வதேச அபய நிறுவனமும், ஹாங்கொங்கை தளமாகக்கொண்டு செயற்படும், ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவும் கையில் எடுத்துள்ளன.
அந்தக் குழந்தைக்கு பால் புகட்டும் போதே மூச்சுத் திணறல் ஏற்பட்டது என்றும், அதனை அந்தப் பெண்ணால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்றும், ரிசானா கூறுவதாக இந்த அமைப்புகள் கூறுகின்றன.

அந்தப் பெண்ணுக்கு இந்த விவகாரம் நடைபெற்ற முழுக் காலப்பகுதிக்கும் எந்தவிதமான சட்ட பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

அதுமாத்திரமன்றி, மிகவும் முக்கியமான ஒரு விடயம் என்னவென்றால், அந்தக் குழந்தை இறந்த சம்பவம் நடந்தபோது, இந்தப் பணிப்பெண் பராயத்துக்கு வராதவராகவே இருந்தார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இவரை இந்தப் பணிக்கு ஏற்பாடு செய்துகொடுத்த வேலைவாய்ப்பு ஏற்பாட்டாளர்கள், அவருக்கு போலியான ஆவணங்களை ஏற்பாடு செய்து, அவருக்கு 6 வயது அதிகமாகக் காட்டியிருந்தனர் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், அவரது பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அப்போது அவருக்கு 17 வயது மாத்திரமே என்று கூறுகிறது. ஆனால், இந்த பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்த விடயத்தில் சவுதி அரசர் தலையிட வேண்டும் என்று இந்தப் பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் கோருகிறார்கள்.

இந்த பெண் மேன்முறையீடு செய்வதற்கான காலக்கெடு ஜூலை 16 ஆம் திகதி முடியும் முன்னதாக, அந்தப் பெண்ணின் சார்பில் இலங்கை அரசும் மேன்முறையீடு செய்யவுள்ளது.
THANKS...BBC

0 Comments:

Post a Comment

<< Home