|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Saturday, July 07, 2007

Bismillah..
‘தலித்களைவிட மோசமான நிலையில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்’
கல்வி, வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்குத் தனி இடஒதுக்கீடு கேட்டு எழுந்த கோரிக்கை முழக்கங்கள், இப்போது போராட்டமாக உருவெடுத்திருக்கின்றன. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு மத்திய சிறைச்சாலைகள் இருக்கும் 8 மையங்களில் ' தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ' அமைப்பின் சார்பில் கடந்த 4 ம் தேதி ' சிறை நிரப்பும் போராட்டம்' நடந்து முடிந்திருக்கிறது. தமிழகம் முழுவதும் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் .




சென்னை கடற்கரை காந்தி சிலை அருகில் நடந்த போராட்டத்தில் 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் 'தின் தலைவர் பி.ஜெயினுல் ஆபிதீன் கலந்து கொண்டார். அன்று மாலை அவரது அலுவலகத்தில் அவரை சந்தித்தோம்.

''முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு என்பது நீண்ட காலமாகப் பேசப்பட்டு வரும் விஷயம்தானே... ஏன் இந்தத் திடீர் போராட்டம் ?''

''1954ம் ஆண்டிலிருந்தே இந்தக் கோரிக்கை முஸ்லிம்களால் எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இதற்காக முஸ்லிம்கள் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள் . எங்களுக்குப் புதிதாக இடஒதுக்கீடு வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. ஏற்கெனவே எங்களுக்கு அளிக்கப் பட்ட இடஒதுக்கீட்டைத்தான் மீண்டும் கேட்கிறோம்.

1919ல் இருந்து 1954 வரை முஸ்லிம்களுக்குத் தனி இடஒதுக்கீடு அமலில் இருந்தது . நீதிக்கட்சி ஆட்சியில் முஸ்லிம்களுக்கு 16 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஓமந்தூர் ராமசாமி ரெட்டி முதல்வராக இருந்தபோது இது 7 சதவிகிதமாகக் குறைந்தது. 1954ம் ஆண்டு காமராஜர் ஆட்சிக்கு வந்தபோது , முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்தார். அதைத் தொடர்ந்து முஸ்லிம்கள் ஆதரவை காங்கிரஸ் இழந்தது.

பிறகு, தி .மு.க . கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சி இருந்தபோது இந்த இடஒதுக்கீடு கோரிக்கையை எழுப்பியது. 'முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தருவோம் ' என்று 67ல் தி.மு .க. வாக்குறுதி கொடுத்தது. அது இன்றுவரை நிறைவேறவில்லை என்பதுதான் வேதனை !''

''ஆனால், அதன்பிறகு முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு , அதற்கான சலுகைகளைப் பெறுகிறார்களே ?''

''கொடுத்த வாக்குறுதியைத் தி. மு.க. நிறைவேற்றவில்லை. முஸ்லிம்களை ஏமாற்றுவதற்கான ஒரு ஏற்பாட்டைத்தான் அவர்கள் செய்தார்கள். 1973ல் 49 சதவிகிதமாக மொத்த இடஒதுக்கீடு இருந்தபோது, அதில் பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீடு 31 ஆக இருந்தது. அதில் 143 சாதிகள் சேர்க்கப்பட்டிருந்ததுடன், முஸ்லிம்களையும் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி சேர்த்தார்.

பெரும்பாலான இந்து சாதியினருடன் முஸ்லிம்கள் சேர்க்கப்பட்டதால் மைனாரிட்டியாக இருக்கும் எங்கள் சமூகத்தினர் போட்டிபோட முடியவில்லை. நூறு பேருக்கு வேலை கொடுக்கப்பட்டால் அதில் ஒரு முஸ்லிமுக்குத் தான் வேலை கிடைத்தது. இதனால் எங்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. ஆகவேதான் தி. மு.க. எங்களை ஏமாற்றிவிட்டது என்கிறோம்.

எம்.ஜி .ஆர். ஆட்சியிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு உயர்ந்ததே தவிர , அதனால் முஸ்லிம்களுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை...''

''இடஒதுக்கீடு தொடர்பாக 'நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. தீர்ப்பு வந்தபின் தருவோம்' என்று கருணாநிதியும் ஜெயலிதாவும் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்களே ?''

''இப்போது இருக்கிற 69 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பான வழக்குதான் நிலுவையில் இருக்கிறது. நாங்கள் கேட்கும் தனி இடஒதுக்கீட்டுக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை. 69 சதவிகிதத்தை அதிகப்படுத்தினால்தான் பிரச்னை. நாங்கள் கேட்பது, பிற்படுத்தப் பட்டோருக்கென இருக்கும் 20 சதவிகிதத்தில் உள் ஒதுக்கீடாக முஸ்லிம்களுக்குப் பிரித்துத் தர வேண்டும் என்பதுதான். இது அரசியல்வாதிகளுக்குத் தெரியாமல் இல்லை. கருணாநியும் ஜெயலலிதாவும் முஸ்லிம்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள்.

கேரளாவில் நீண்டகாலமாக முஸ்லிம்களுக்கென தனியாக 10 சதவிகித இடஒதுக்கீடு இருக்கிறது. அதேபோல் கர்நாடாகவில் நான்கு சதவிகிதம் இருக்கிறது . ஆந்திராவில் சில நடைமுறைகள் பின்பற்றப்படாததால், விஷயம் கோர்ட் வரை போய்த் தடை வந்தது . அந்த ஆந்திராவிலும் ஜூலை நான்காம் தேதி முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவிட்டது !''

''சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது பற்றி கமிஷன்கள் அமைக்கப்பட்டதே ..?''

''கடந்த ஜெயலலிதா ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் ஜனார்த்தனம் தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. தி.மு. க. ஆட்சிக்கு வந்தபிறகு, அந்த கமிஷன் மாற்றி அமைக்கப்பட்டது . இப்போது இருக்கும் கமிஷன் தலைவர் ராஜரத்தினம் தன் அறிக்கையை அரசுக்குத் தந்துவிட்டார். இதன்மீது 'விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று சட்டசபையில் சொன்னார் கருணாநிதி. ஆனால், அந்த வாக்குறுதியும் நிறைவேற்றப் படவில்லை.
'கேரளா , கர்நாடகா, ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு இருந்தால் நிச்சயம் அவசரச்சட்டம் போட்டாவது இங்கும் கொண்டுவருவோம் ' என்று இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் சொன்னார் கருணாநிதி . இப்போது அங்கெல்லாம் இடஒதுக்கீடு இருக்கிறது , இங்கே கொடுக்க என்ன தயக்கம் ?!''

''உங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?''

''கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் . திண்டுக்கல்லில் நடக்கும் எங்கள் பொதுக்குழுவில் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவது பற்றி முடிவெடுப்போம். சிறை நிரப்பும் போராட்டம் என்று நாங்கள் அறிவித்ததுமே , ஒவ்வொருவரும் தங்கள் சொந்த செலவில் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். எங்கள் சமூகப் பெண்களும் வீதிக்கு வந்து போராடியிருக்கிறார்கள்.

'தலித்களைவிட மோசமான நிலையில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்' என்று சச்சார் கமிட்டி அறிக்கை கொடுத்த பிறகும் மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதிலும் மத்திய அரசு மெத்தனம் காட்டுகிறது. ஆகவே , இனியும் எங்களை ஆட்சியாளர்கள் ஏமாற்ற நினைத்தால்... அதற்கான விளைவுகளை அவர்கள் சந்தித்தே தீரவேண்டும் '' என்று சீற்றத்துடன் முடித்தார்.

நன்றி - ஜூனியர் விகடன்.

0 Comments:

Post a Comment

<< Home