குடும்பக்கட்டுப்பாடு - குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்
உலகில் பெரும்பாலான நாடுகள் மனித உற்பத்தியை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அதிக சந்ததிகள் பெறுவதால் ஏற்படும் அசௌகரியங்களையும் பிரச்சாரம் செய்து வருகின்றன. விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி கரு வளராமலிருக்கவும், வளர்ந்த கருவைச் சிதைக்கவும் பல சாதனங்களையும் உருவாக்கியுள்ளன. குடும்பக்கட்டுப்பாடு என அறிமுகப்படுத்தப்படும் இந்தத் திட்டத்துக்கு முஸ்லிம்கள் எந்த அளவு ஒத்துழைக்கலாம்? இதனை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.
குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும், குழந்தைகள் உருவாவதை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளவும் இன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நவீன முறைகள் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்ததில்லை. அன்றைய மக்கள் குழந்தைகள் உருவாகாமலிருக்கவும், குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும் ஒரு முறையை மட்டும் கையாண்டு வந்தனர். அதாவது இல்லறத்தில் உச்ச நிலைக்கு வரும் போது ஆண்கள் தங்கள் விந்துவை வெளியே விட்டு விடுவார்கள். இதுதான் அன்றைய மக்களிடம் அறிமுகமான ஒருமுறை. அரபு மொழியில் இந்தச் செயல் 'அஸ்ல்' எனக் கூறப்படுகிறது. இந்த 'அஸ்ல்' என்ற காரியத்திற்கு மார்க்கம் எந்த அளவு அனுமதி வழங்குகிறது என்பதை நாம் அறிந்து கொண்டால் குடும்பக்கட்டுப்பாடு பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும்.
''நாங்கள் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த காலத்தில், 'அஸ்ல்' செய்து வந்தோம்'' என்று ஜாபிர்(ரலி) அவர்கள் தெரிவிக்கும் செய்தி, புகாரி, முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நபி(ஸல்) அவர்களின் காலத்திலேயே நபித்தோழர்களும் 'அஸ்ல்' செய்துள்ளனர். அதை அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் தடை செய்யாமல் இருந்திருந்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இது நடந்தாலும் நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் அவர்களின் கவனத்திற்கு இது வராமல் இது நிகழ்ந்திருக்கக் கூடும் என்று எண்ணுவதற்கு இடமில்லை. ஏனெனில் ''நாங்கள் அஸ்ல் செய்து கொண்டிருந்தோம். இந்தச் செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்படியிருந்தும் எங்களை அவர்கள் தடுக்கவில்லை.'' என்று ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு செய்தி முஸ்லிம் எனும் நபிமொழித் தொகுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனக்கு ஒரு அடிமைப் பெண் இருக்கிறாள். அவள் கர்ப்பமடைந்து விடுவாளோ என நான் அஞ்சுகிறேன் என்று நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் கேட்டார். இதற்கு நபி(ஸல்) அவர்கள், ''நீ விரும்பினால் 'அஸ்ல்' செய்து கொள். (ஆனால்) அவளுக்கென்று விதிக்கப்பட்டது அவளை அடைந்தே தீரும்'' என்று கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கும் செய்தி முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸில் அந்த மனிதர் 'அஸ்ல்' செய்ய அனுமதி கேட்கவில்லை. குழந்தை பெறாமலிருக்க, தான் என்ன செய்ய வேண்டும் என்றே கேட்கிறார். நபி(ஸல்) அவர்கள் தாங்களே முன்வந்து 'அஸ்ல்' செய்து கொள் என்று அவருக்குச் சொல்லித் தருகிறார்கள். அதே நேரத்தில் இறைவனின் விதி ஒன்று உண்டு. அதை மாற்றிவிட இயலாது என்ற அடிப்படை உண்மையையும் போதிக்கிறார்கள்.
விதியை நம்புவது என்பது 'அஸ்ல்' என்ற பிரச்சினைக்கு மட்டும் உரியதன்று. எல்லாப் பிரச்சினைக்கும் விதியை நம்புதல் பொதுவாக அவசியம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. நோய் நீங்க வேண்டும் என்பதற்காக மருந்து உட்கொள்கிறோம். இறைவனின் விதி வேறுவிதமாக இருந்தால் அதையும் இந்த மருந்து மாற்றிவிடும் என்று நம்பக் கூடாது. இது போல் தான் இந்தப் பிரச்சினையும்.
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'நான் என் மனைவியிடமிருந்து 'அஸ்ல்' செய்து வருகிறேன்' என்று கூறினார். எதற்காக 'அஸ்ல்' செய்கிறாய்? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் என் குழந்தை விஷயத்தில் நான் அஞ்சுகிறேன் என்று கூறினார். (அதாவது என் மனைவி முதல் குழந்தைக்கு பாலூட்டும் காலத்தில் அவளுடன் உறவு கொண்டு அவள் மீண்டும் கற்பிணியானால் முதல் குழந்தைக்கு ஏதும் கேடு நேரிடுமோ என்று அவர் அஞ்சுகிறார்) அப்போது நபி(ஸல்) அவர்கள் ''இது ஏதும் கேடு விளைவிக்கும் என்றால் ரூம், பாரசீக மக்களுக்குக் கேடு செய்திருக்குமே'' என்று கூறினார்கள். இதை உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவிக்க முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.
இந்த ஹதீஸில் ஒரு மனிதர் வந்து 'அஸ்ல்' செய்வதற்காக கூறிய காரணத்தை மட்டுமே நபி(ஸல்) அவர்கள் மறுக்கிறார்கள். இந்தக் காரணத்திற்காக 'அஸ்ல்' செய்ய வேண்டியதில்லை. இதனால் எந்தப் பாதகமும் எற்படாது என்று பாரசீக மக்களை மேற்கோள்காட்டி விளக்கம் தருகிறார்கள். 'அஸ்ல்' என்பது அறவே கூடாது என்றால் என்ன காரணத்திற்காக 'அஸ்ல்' செய்கிறாய் என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டிருக்க மாட்டார்கள். அவர் கூறிய காரணத்தை மட்டும் மறுத்திருக்க மாட்டார்கள்.
பால் கொடுக்கும் பெண்களைக் கர்ப்பிணியாக்குவதைத் தடுக்கலாம் என்று நான் கருதினேன். பின்னர் ரூம், பாரசீக மக்களைக் கண்டேன். இதனால் அவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டதாக இல்லை. எனவே தடை செய்யவில்லை. (ஹதீஸின் கருத்து) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் மக்கள் 'அஸ்ல்' பற்றிக் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அஸ்ல்' என்பது குழந்தைகளை மறைமுகாக உயிருடன் புதைப்பது போன்றதாகும் என்று கூறினார்கள். இது அஹ்மத், முஸ்லிம் ஆகிய நூற்களில் பதிவாகியுள்ளது.
இந்த ஒரு ஹதீஸ் மட்டும் 'அஸ்ல்' செய்வதைக் கண்டிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஏனைய ஹதீஸ்கள் அனைத்தும் 'அஸ்ல்' செய்வதை அனுமதிக்கும் விதமாக அமைந்துள்ளன. இப்படி முரண்பட்ட கருத்துக்களை இரண்டு ஹதீஸ்களுமே அறிவிக்கின்றன. இரண்டு ஹதீஸ்களுமே ஆதாரப்பூர்வமானவையாகவும் அமைந்துள்ளன. இந்த நிலையில் இரண்டையும் இணைத்து நாம் ஒரு முடிவுக்கு வர கடமைப்பட்டுள்ளோம்.
அனுமதிக்கும் வகையிலமைந்த ஹதீஸ்களின் அடிப்படையில் 'அஸ்ல்' செய்ய அனுமதி உண்டு என்ற முடிவை நாம் பெறலாம். கண்டனம் செய்து வருகின்ற ஹதீஸ் 'அஸ்ல்' அவ்வளவு நல்லதல்ல என்ற பொருளிலேயே கூறியிருக்க வேண்டும். அறவே கூடாது என்றிருந்தால் பல சந்தர்ப்பங்களில் அதை அனுமதித்திருக்க மாட்டார்கள்.
'அஸ்ல்' போன்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் குடும்பக் கட்டுப்பாடுகள் கூடும் என்றே மேற்கூறிய ஆதாரங்கள் அடிப்படையில் நாம் முடிவு செய்ய வேண்டும். இப்போதையக் குடும்பக் கட்டுப்பாட்டில் இரண்டு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒன்று தற்காலிகமாக குழந்தை பெறுவதை நிறுத்திக் கொண்டு தேவைப்படும் போது அதற்காக முயற்சித்தல். மற்றொன்று குழந்தை பெறும் தன்மையை நிரந்தரமாக நீக்கிக் கொள்வது. இந்த இரண்டில் முதல் வகையான கட்டுப்பாடு முறை மட்டுமே அனுமதிக்கப்பட முடியும். 'அஸ்ல்' என்பது அந்த வகையில் அமைந்துள்ளது தெளிவாகின்றது. மற்றொரு முறை 'அஸ்ல்' என்ற முறையோடு ஒட்டி வராததால் அதை அனுமதிக்க எவ்வித அடிப்படையுமில்லை.
இறைவன் வழங்கிய அருட்கொடையை நிரந்தரமாக அழித்துக் கொள்ள மனிதனுக்கு உரிமையில்லை. பல நபித்தோழர்கள் ஆண்மை நீக்கம் செய்து கொள்ள அனுமதி கோரிய போது, நபி(ஸல்) அவர்கள் மறுத்ததற்குப் பல சான்றுகள் உள்ளன. ஆணுறை, காப்பர் டி போன்ற சாதனங்களைப் பயன்படுத்திட தடை ஏதும் இல்லை. தடுப்பதற்கான அடிப்படைகளும் இல்லை. அதே நேரத்தில் இதைத் தவிர்ப்பதே நல்லது என்தையும் நாம் மறந்து விடலாகாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் அதை கண்டித்தும் இருக்கிறார்கள்.
குடும்பக்கட்டுப்பாடு எனும் பெயரில் நடக்கும் இன்னொரு கொடுமையும் நாட்டிலே நிலவுகின்றது. கரு உருவான பின் அதைக் கலைத்து விடும் இந்தக் கொடுமை இஸ்லாத்தில் அறவே அனுமதி இல்லை.
உயிருடன் புதைக்கப்பட்ட சிசுக்கள் (மறுமையில்) என்ன குற்றத்திற்காகப் புதைக்கப்பட்டனர் என்று விசாரிக்கப்படுவர்.
(அல்குர்ஆன் 81:8,9)
உங்கள் குழந்தைகளை, வறுமைக்குப் பயந்து கொலை செய்யாதீர்கள்.
(அல்குர்ஆன் 6:151)
இதுபோன்ற வசனங்கள், உருவான குழந்தைகளை அழிப்பதற்கு தடையாக உள்ளன. இது அல்லாத விதமாக தற்காலிகமான முறையில் குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளத் தடையேதும் இல்லை.
Thanks: http://www.onlinepj.com/
0 Comments:
Post a Comment
<< Home