|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Monday, October 08, 2007

அமெரிக்க நெருக்குதலால் ஈரானுடன் பேசவில்லை': சீதாராம் யெச்சூரி

கோல்கத்தா, அக். 1: அமெரிக்காவின் நெருக்குதலால்தான் ஈரானிடமிருந்து இந்தியா விலகிக்கொண்டிருக்கிறது, எரிவாயுவைக் குழாய்ப்பாதை மூலம் இந்தியாவுக்குக் கொண்டுவருவது குறித்து ஈரானுடன் அதனால்தான் பேசவில்லை என்று மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டுகிறார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் ""கணசக்தி'' என்ற பத்திரிகையில் இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரையில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு எரிவாயுவை குழாய்ப்பாதை மூலம் கொண்டுவரும் திட்டம் குறித்து கடந்த சில ஆண்டுகளாகத் தீவிரமாக பேசப்பட்டது. பாகிஸ்தானும் இதில் ஆர்வம் காட்டியது.

ஈரானிலிருந்து குழாய் வழியாக எரிவாயுவைக் கொண்டுவரும்போது, போக்குவரத்துச் செலவு கணிசமாக மிச்சப்படும்; அதிக அளவில் எரிவாயுவைப் பெற முடியும்.

எரிவாயுவைப் பயன்படுத்துவது அதிகரித்தால் கச்சா பெட்ரோலியத்தை வாங்குவதையும் குறைத்துவிட முடியும். இதனால் இந்தியாவுக்குக் கணிசமான அன்னியச் செலாவணி மிச்சப்படும்.

பாகிஸ்தானுக்கும் குழாய்ப்பாதையை பொறுப்பாக பார்த்துக் கொள்வதற்காக காவல் கூலியும், பராமரிப்புத் தொகையும் ஆண்டுதோறும் கணிசமாகக் கிடைக்கும். அதே குழாய்ப் பாதையை பாகிஸ்தானும் பயன்படுத்தி எரிவாயுவைப் பெறலாம். திட்டத்துக்கு ஆகும் செலவை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளலாம் என்று பேசி முடிவு செய்யப்பட்டது.

ஆனால், எரிவாயுவின் விலையை இறுதி செய்யும் கட்டத்தில் சிறிது கருத்து வேறுபாடு தோன்றியது. இந்தியா கூறிய தொகையைவிட அதிகத் தொகையை ஈரான் கேட்டது. இந் நிலையில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் உறவு மோசமடையத் தொடங்கியது. அதே சமயம், அணுசக்தி உடன்பாட்டுக்காக அமெரிக்காவுடன் இந்தியா நெருங்கிச் செல்ல ஆரம்பித்தது.

ஈரானை பயங்கரவாத நாடு என்றே அழைக்கத் தொடங்கியுள்ள அமெரிக்கா, அந்நாட்டுடன் பொருளாதார உறவு வைத்துக்கொள்வதும், அதற்குப் பண ஆதாயம் கிடைக்கும் வகையில் செயல்படுவதும் சரியல்ல என்று இந்தியாவிடம் நேரடியாகவே கூறியது.

இந்நிலையில் செப்டம்பர் 24-ம் தேதி தெஹ்ரானில் இந்த குழாய்ப்பாதை தொடர்பான பேச்சு தொடங்கியது. அதில் ஈரானும் பாகிஸ்தானும் மட்டுமே கலந்துகொண்டன. இந்தியா பங்கேற்கவில்லை.

அத்துடன் சர்வதேச அணுவிசை ஏஜென்சி மூலம் ஈரானுடைய அணு நிலையங்களைத் தீவிரமாக சோதனைசெய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றிய தீர்மானங்களை ஆதரித்து ஒரு முறை அல்ல இருமுறை வாக்களித்துள்ளது மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. இவையெல்லாம், வெளியுறவுக் கொள்கை விஷயத்தில் அமெரிக்காவின் மனம் கோணாதபடி இந்தியா நடக்க ஆரம்பித்ததன் அடையாளமே. அணுசக்தி உடன்பாட்டால் நமது இறையாண்மை அடகு வைக்கப்படும் என்பதையே இவை உணர்த்துகின்றன.

அதே சமயம், அமெரிக்காவுக்கு மிகவும் நட்பு நாடான பாகிஸ்தான், ஈரானுடன் இந்த ஒப்பந்தத்தை வெகுசாதாரணமாகச் செய்துகொண்டிருக்கிறது. அவர்களுக்கில்லாத அச்சமும், தயக்கமும் நமக்கு ஏன் என்று கட்டுரையில் வினவியுள்ளார் சீதாராம் யெச்சூரி.

0 Comments:

Post a Comment

<< Home