ரசிகர் மன்ற முட்டாள்களே!- ராமதாஸ் விமர்சனம்
திருவண்ணாமலை: நடிகர், நடிகையர்களின் ரசிகர் மன்றங்களை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
திருவண்ணாமலையில் நடந்த விழாவில் ராமதாஸ் பேசுகையில்,
இளைஞர்களை கெடுப்பது சினிமாதான். இதன் மூலம் தான் சின்ன வயசிலேயே வன்முறை, செக்ஸ், பழிவாங்குதல் அனைத்தும் ஊசியில் மருந்தை செலுத்துவது போல் அவர்களின் மூளையில் திணிக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட செயல்களுக்கு அறியாத கிராமத்து இளைஞர்கள் பலரும், படித்த இளைஞர்கள் கூட ரசிகர் மன்றம் என்ற பெயரில் தங்கள் வாழ்க்கையை கெடுத்து வருகின்றனர். இதன் மூலம் தான் சம்பாதிக்கும் பணத்தை இழந்து தெருவில் நிற்போர் இன்று பலர். எந்தவொரு நடிகர், நடிகையாவது அவர்கள் பெயரில் ஆரம்பிக்கும் ரசிகர் மன்றத்திற்கு பண உதவி செய்கிறார்களா?
மசாலா படம்னு சொல்றாங்க. ஆனால் அதைப் போய் பார்த்தால் ஒருத்தன் 100 பேரையும் 1,000 பேரையும் அடிக்கிறான். அட எங்கேய்யா 100 பேரை ஒருத்தன் அடிக்கிறான். 100 பேர் சேர்ந்து தான் ஒருத்தனை அடிப்பாங்க. ஆனால் அப்படி காட்டினால் படத்தில நடிக்கிறவனோட பிழப்பு அதோகதி தான்.
கற்பழிப்பு சீன்களையும் விளக்கமாக காட்டுவதும் இந்த சினிமாவில்தான். இதெல்லாம் போதாதுன்னு இப்போ டி.வி. சீரியல்கள் எல்லாம் இரட்டை அர்த்தம் உள்ள கதையைத்தான் காட்டுகிறார்கள். அதைக் காட்டி குடும்பத்தில் இருக்கும் எல்லோரையும் கெடுக்கிறாங்க.
சினிமாவில் ஹீரோவாக நடிப்பவன் தான் தான் ஒரு மிகப்பெரிய அறிவாளி என காட்டி கொள்கிறான். இந்த அறிவாளி ஏன் சமூகத்தில் வெளியே வந்து நல்ல செயல்களை செய்யக் கூடாது.? அப்படி செய்தால் தனக்கு ரசிகர் மன்றம் யார் வைப்பார்கள்?
ஆகவே ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருப்பதற்கு பதில் நான் ஒரு முட்டாள் என நெற்றியில் எழுதி ஒட்டிக் கொள்ளலாம் என்றார்.
சில நாட்களுக்கு முன், குறும்படம் மற்றும் ஆவணப்படம் தயாரிப்போர் கூட்டத்திலும் சினிமாக்காரர்கள் ஒன்றும் அறிவு ஜீவிகள் கிடையாது என்று பேசினார் ராமதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
<< Home