|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, October 18, 2007

காணவில்லை

ஏக இறைவனின் திருப்பெயரால் ...


பெயர் :வணக்கசாலிகள்

காணாமல் போன தேதி :12-10-2007

அடையாளம் :காணாமல் போன அன்று இறையச்சத்துடன் காணப்பட்டனர்.



கடந்த ரமலான் மாதம் முழுவதும் பள்ளிவாசலுக்கு வந்து கொண்டிருந்த முஸ்லிம்களை கடந்த 5 தினங்களாக காணவில்லை. அவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் (மறுமையில்) வழங்கப்படும். கண்டுபிடிப்பவர்கள் உடனடியாக அருகிலுள்ள பள்ளிவாசலில் அவரை ஒப்படைக்கும்படி அன்புடன் வேண்டுகின்றோம்.

இவண;
பிரிவால் வருந்தும் சகோதரர்கள்



இன்றைக்கு ஒவ்வொரு பள்ளிவாசலிலும் இத்தகைய போர்டு போடக்கூடிய சூழ்நிலைதான் ஏற்பட்டுள்ளது. ரமலான் மாதத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக பள்ளிவாசலுக்கு வந்தனர். சுபுஹூ தொழுகைக்கு கூட ஜூம்மாவை விட அதிகமான மக்கள் வந்தனர். எத்தனையோ புதுமுகங்கள். பெரியவர்,சிறியவர்,ஆண்கள்,பெண்கள் என அனைவருமே வணக்கசாலிகளாகி விட்டதால், அன்றாடம் பள்ளிக்கு வந்து ஐவேளை தொழுதுவந்தவர்களுக்குக்கூட பள்ளியில் இடமில்லாமல் போனது. அந்த அளவுக்கு மக்கள் கூட்டம் அலை மோதியது. ஏனென்றால், ரமலானில் செய்யக்கூடிய காரியங்களுக்கு அதிகமான நன்மைகள் கிடைக்கும் என அனைவரும் விளங்கி வைத்துள்ளனர்.

'யார் நம்பிக்கைக்கொண்டு நற்கூலியை எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹூரைரா (ரலி) ,நூல் : புஹாரி-37

எனவே ரமலானில் ஐவேளை தொழுகையிலும் தவறாது கலந்து கொண்டோம், இரவில் நன்மையை எதிர்பார்த்து தூக்கத்தை தியாகம் செய்தோம், விழித்திருந்து குர்ஆன் ஓதினோம், தான தர்மங்கள் செய்தோம், ஆனால் ரமலான் முடிந்த மறுதினமே அவற்றையெல்லாம் விட்டுவிடுகிறோம்!

அல்லாஹ் கூறுகிறான் :

நம்பிக்கை கொண்டோரே ! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டதுபோல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது . (திருக்குர்ஆன் 2:183,184)

இந்த வசனத்தில் நாம் இறையச்சம் உடையவர்களாகவேண்டும் என்பதற்காகவே நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்று இறைவன் கூறுகின்றான். அல்லாஹ் எதிர்பார்க்கக்கூடிய இறையச்சம் நம்மில் ஏற்பட்டுள்ளதா என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இறையச்சம் என்பது, இறை நம்பிக்கையாளனின் உயிர் நாடியாக இருக்க வேண்டும். அவனுடைய ஒவ்வொரு செயலிலும் எல்லா நேரங்களிலும் அது வெளிப்பட வேண்டும். ஒரு இறை நம்பிக்கையாளன் ரமலான் முழுவதும் நோன்பு நோற்றிருக்கும்போது, தீமையான பேச்சுக்களை பேசாமல், மோசடி செய்யாமல், தீமையான காரியங்களில் ஈடுபடாமல் அம்மாதம் முழுவதும் இறைவனை அஞ்சி நடக்க வேண்டும் என எண்ணி அனைத்து தீமைகளை விட்டும் விலகி இருக்கின்றான்.

ரமலான் முடிந்த பின் அவன் தீமையான காரியங்களை செய்யத் ;துவங்குவானானால் அந்த நோன்பானது அவனிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

இறையச்சம் என்பது இந்த ஒரு மாதத்திற்கு மட்டும்தான், அம்மாதம் முடிந்து விட்டால் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று இறைவன் கூறவில்லை. இறையச்சமானது வருடம் முழுமைக்கும் பொதுவானது தான். நாம் ரமலானில் எடுத்த பயிற்சியை வருடம் முழுவதும் பிரதிபலிக்கச் செய்ய வேண்டும். ரமலான் மாதத்தில் ஒருவன் நோன்பு நோற்றிருக்கும் போது அவனுக்கருகில், அவனுடைய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட, அவனுக்கு பிடித்தமான உணவுகள் இருக்கும். அவனுடைய மனைவி இருப்பாள். தான் விரும்பியதை அவன் செய்யலாம். யாரும் கேட்கப்போவதில்லை.
ஆயினும் நாம் இறைவனுக்காக நோன்பு வைத்துள்ளோம். அது நமக்கு தடுக்கப்படாத பொருளாக இருந்தாலும் இப்போது நமக்கு தடுக்கப்பட்டுள்ளது என்று விளங்கி, விலகி இருக்கின்றான். இறைவன் ஹலாலாக்கிய நம்முடைய பொருளாக இருந்தாலும் அதை இறைவன் தடுத்து விட்டான் என்பதால் அவனுக்கு அஞ்சி நாம் அதை தவிர்த்து இருக்கிறோம். அப்படியென்றால் அடுத்தவருடைய பொருள் நமக்கு ஒருபோதும் ஹலால் ஆகாது, எனவே நாம் யாரையும் ஏமாற்றக்கூடாது, யாருடைய பொருளையும் மோசடி செய்யக்கூடாது என்ற இறையச்சம் நம்மிடம் வரவேண்டும்.
இந்த இறையச்சம் வருவதற்காகத்தான் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளதாக இறைவன் குறிப்பிடுகின்றான். ஒரு முஸ்லிம் என்பவன் குறிப்பிட்ட இடம், குறிப்பிட்ட காலம், குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரம் இஸ்லாத்தை பின்பற்றி வாழ்ந்து பின்பு அவைகள் மாறும் போது தன்னுடைய வாழ்க்கையை மாற்றிக் கொள்பவராக இருக்கக்கூடாது. இஸ்லாத்தை உண்மை மார்க்கமாக ஏற்றுக்கொண்ட நாளிலிருந்து மரணிக்கும்வரை எந்த இடத்திலும் எக்காலத்திலும் எந்நேரத்திலும் எப்படிப்பட்ட சோதனைகளை சந்திக்கும் போதும், இஸ்லாத்தில் உறுதியாக இருக்கவேண்டும.;

அல்லாஹ், கூறுகின்றான் : 'எங்கள் இறைவன் அல்லாஹ்வே' என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி, அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் பற்றிய நற்செய்தியை பெற்றுக்கொள்ளுங்கள்! எனக்கூறுவார்கள். (திருக்குர்ஆன் 41:30)

குர்ஆனை நமக்கு ரமலானில் இறக்கி தந்து அம்மாதத்தில் நின்று வணங்க சொன்ன அதே அல்லாஹ்தான் உறுதியாகவும் இருக்க சொல்கிறான் .ரமலானில் தொழச்சொன்ன அல்லாஹ்வும் அவனது தூதரும் தான், ரமலான் அல்லாத காலங்களிலும் தொழச்சொல்லியிருக்கின்றார்கள். இறைநம்பிக்கையாளர்கள் எப்படிப்பட்டவர்களென்றால்

அச்சத்துடனும் எதிர்பார்ப்புடனும் தமது இறைவனை பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். (திருக்குர்ஆன் - 32:16)

(அவர்கள்) பொறுமையாளர்களாகவும் உண்மை பேசுவோராகவும் (இறைவனுக்கு) கட்டுப்பட்டோராகவும் (நல் வழியில்) செலவிடுவோராகவும் இரவின் கடைசி நேரத்தில் பாவமன்னிப்பு தேடுவோராகவும் (இருப்பார்கள் ) - (திருக்குர்ஆன் 3:17)

இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர். இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்பு தேடுவார்கள ; -(திருக்குர்ஆன் - 51:17,18) என்று அல்லாஹ் குறிப்படுகிறான்.

கடமையான தொழுகைக்கு பிறகு சிறந்த தொழுகை இரவில் தொழும் தொழுகையாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள ;.

அறிவிப்பவர் - அபுஹுரைரா, நூல் : முஸ்லிம்-1982

ஸலாமை பரப்புங்கள், ஏழைகளுக்கு உணவளியுங்கள், மக்கள் தூங்கும்போது தொழுங்கள் (இதனால்) சொர்க்கத்தில் நுழையுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள ;. அறிவிப்பவர் :அப்துல்லாஹ் பின் ஸலாம்(ரலி) நூல்:திர்மிதி-2409

இரவிலே நின்று வணங்குவதால் எத்தனையோ நன்மைகள் இருக்க அதில் ரமலானுக்கு மட்டும் என்ற முத்திரையை குத்தலாமா?

நபி(ஸல்)அவர்கள் என்னிடம் 'அப்துல்லாஹ்வே! இரவில் தொழும் வழக்கமுடையவர் திடீரென அதை விட்டதுபோல் ஆகிவிடாதீh'; என்று கூறினார்கள ;. அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ்(ரலி) நூல் : புஹாரி-1152

அதுபோல குர்ஆன் ரமலானில் இறக்கப்பட்டதால் அம்மாதத்தில் குர்ஆனை ஆர்வத்துடன் ஓதுகின்றோம். ஆனால் அதற்கு பின் அதை பரண்மேல் வைத்து விடுகின்றோம். குர்ஆனை எப்பொழுது ஓதினாலும் நன்மை உண்டு என்பது நமக்கு தெரியும். ஆனால் ஏறிட்டும் பார்ப்பதில்லை.

அல்லாஹ்வின் அருள்மறையான திருக்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஒருவர் ஓதினால் அவருக்கு ஒரு நன்மை உண்டு. அந்த ஒரு நன்மை பத்து மடங்கு கொண்டதாகும். அலிஃப்,லாம்,மீம் ஒரு எழுத்து என்று நான் கூறமாட்டேன். மாறாக,அலிஃப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்து என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள ;. அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) ,நூல் : திர்மிதி-2910

இன்று தொலைக்காட்சி நம்மை ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. டி.வி இல்லையேல் வாழ்க்கையே இல்லையென்ற அளவிற்கு மிகப்பெரிய தாக்கத்தை அது ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் பாங்கு சொல்வது கூட தெரியாமல் சினிமா, சீரியலில் மூழ்கி கிடக்கின்றோம். ஆனாலும் நம்மில் பலர் நோன்பு நேரங்களில் சினிமா, சீரியல் பார்ப்பதை தவிர்க்கிறோம். ஏனெனில்,

'யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விட வில்லையோ, அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) , நூல் : புஹாரி 1903

ஆனால் ரமலான் முடிந்ததும் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து விடுகின்றோம். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ரமலானில் மட்டும்தான் பொய்யான காரியங்களை விட்டும் தடுத்துள்ளார்களா!

ரமலானில் நம்மை கண்காணித்த அல்லாஹ் என்றென்றும் நம்மை கண்காணிப்பவன் என்ற எண்ணம் எப்பொழுதும் நம்மில் இருக்க வேண்டும். ரமலானில் மட்டும் அவன் டுயூட்டி பார்த்துவிட்டு ஓய்வெடுக்க போய்விடுவதில்லை என்பதை நினைவில் கொண்டு ரமலானில் செய்த வணக்க வழிபாடுகளையும் நற்காரியங்களையும் வருடம் முழுவதும் தொடர்ந்து செய்ய வல்ல இறைவனை பிரார்த்திப்போம் !

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார்தான் பரிpந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதை தவிர. அவனது ஆசனம் வானங்களையும் பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்கு சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன். (திருக்குர்ஆன் -2:255)

- முஹம்மது மாஹீன்

0 Comments:

Post a Comment

<< Home