|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Friday, July 20, 2007

ஆஸ்திரேலியாவின் புரட்டு வாதம் அம்பலம்

ஹனீப் சிம் கார்ட்- ஆஸி. புரட்டு வாதம் அம்பலம் பிரணாப்புடன் ஆஸி. அமைச்சர் போனில் பேச்சு.

ஜூலை 20, 2007

டெல்லி டாக்டர் முகம்மது ஹனீப் வழக்கு தொடர்பாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் டெளனர், மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

இங்கிலாந்து தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆஸ்திரேலிய போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஹனீப்.

அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று முதலில் கூறப்பட்டு வந்த நிலையில், விடுதலையாகி விடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட சூழ்நிலையில் திடீரென தீவிரவாதிகளுக்கு சிம் கார்டு கொடுத்தார் என்ற குற்றத்தை சுமத்தி அவரை சிறையில் தள்ளியது ஆஸ்திரேலிய போலீஸ்.

அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தபோது, அப்போதும் அவர் வெளியே வந்து விடாமல் தடுக்கும் பொருட்டு, விசாவை ரத்து செய்து குடியேற்றப் பிரிவு முகாமில் அடைத்தனர். பின்னர் தனிமைச் சிறையிலும் அவர் அடைக்கப்பட்டார்.


ஹனீப் விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் இந்த குழப்பமான நடவடிக்கைகளுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. ஹனீப்புக்கு ஆஸ்திரேலிய சட்டப்படி அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கும் கூறியிருந்தார்.

இந் நிலையில், நேற்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் டெளனர், மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது டெளனரிடம், ஆஸ்திரேலிய சட்டப்படி ஹனீப் வழக்கை நியாயமான, நேர்மையான முறையில் கையாள வேண்டும். அவருக்கான அனைத்து உரிமைகளும் கிடைப்பதை ஆஸ்திரேலிய அரசு உறுதி செய்ய வேண்டும்.

ஹனீப் எந்தவித துன்புறுத்தலுக்கும் ஆளாகக் கூடாது என்று அவரது குடும்பத்தினர் விரும்புகின்றனர். இதை ஆஸ்திரேலிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று டெளனரிடம் கூறினார் பிரணாப் முகர்ஜி.

ஹனீப் விவகாரம் தொடர்பாக இந்தியாவில் பெருகி வரும் அதிருப்தியை உணர்ந்தே ஆஸ்திரேலிய அரசு நேரடியாக இந்திய அரசுடன் பேச்சு நடத்தியதாக கூறப்படுகிறது.

இன துவேஷம் இல்லை - ஆஸி. தூதர்:

இதற்கிடையே ஹனீப் விவகாரத்தில் எந்தவித இன துவேஷத்திற்கும் இடமில்லை. ஆஸ்திரேலிய நாட்டுச் சட்டப்படிதான் அனைத்து நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன என்று இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் ஜான் மெக்கார்த்தி கூறியுள்ளார்.

இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தீவிரவாதம் மட்டுமே இப்போது பிரதானமாக பார்க்கப்படுகிறது. மற்றபடி ஹனீப் விவகாரத்தில் இன துவேஷம் எதுவும் இல்லை.

இங்கிலாந்து அதிகாரிகளின் கோரிக்கைப்படியே கைது நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய காவல்துறை மேற்கொண்டது. இங்கிலாந்து கோரிக்கையை எங்களால் நிராகரிக்க முடியாது. எனவேதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

டாக்டர் ஹனீப்பின் விசா ரத்து செய்யப்பட்டதில் இன வெறி எதுவும் இல்லை. இந்திய டாக்டர்கள் ஆஸ்திரேலியர்களால் மிகவும் மதிக்கப்படுகின்றனர். அவர்களது சேவை ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் அவசியம். இன்னும் மதிக்கப்படக் கூடியவர்களாக இந்திய டாக்டர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ளனர். இது தொடர வேண்டும் என்றே அரசும் விரும்புகிறது.

டாக்டர் ஹனீப் விவகாரம் தொடர்பாக இந்திய அரசும், இந்தியப் பிரதமரும் கவலை தெரிவித்திருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஒரு இந்தியர் பிரச்சினையில் சிக்கியுள்ளார் என்றால் அவருக்காக இந்திய அரசும், இந்தியப் பிரதமரும் கவலை கொள்வதில் வியப்பேதும் இல்லை.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் உரிமைகள், நலன் குறித்து இந்திய அரசு அக்கறை காட்டித்தான் தீர வேண்டும். எனவே இந்தியப் பிரதமரின் கருத்தை நாங்கள் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.

என்னைப் ெபாருத்தவரை டாக்டர் ஹனீப் மிகவும் நன்றாகவே நடத்தப்படுகிறார். ஆஸ்திரேலிய நாட்டுச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் அவருக்கு மறுக்கப்படவில்லை. சட்டப்படிதான் அவர் நடத்தப்படுகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார் மெக்கார்த்தி.

ஹனீப் வங்கிக் கணக்கை கேட்கும் ஆஸ்திரேலியா:

இதற்கிடையே, டாக்டர் ஹனீப்பின் இந்திய வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை ஆஸ்திரேலியா கோரியுள்ளது.

பெங்களூரில் உள்ள யுடிஐ வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில் ஹனீப் வைத்துள்ள வங்கிக் கணக்கின் முழு விவரங்கள், பணப் பரிமாற்ற விவரங்களை தந்து உதவுமாறு கோரி ஆஸ்திரேலிய அரசு வழக்கறிஞர் கடிதம் அனுப்பியுள்ளார்.

ஹனீப்புக்கு தீவிரவாத அமைப்புகளிலிருந்து பணம் ஏதும் அனுப்பப்பட்டதா என்பதை அறிய இந்த விவரங்களை ஆஸ்திரேலிய அரசு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் கடிதம் மத்திய வெளியுறவுத்துறை மூலமாக சிபிஐக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஹனீப்பின் மனைவி பிர்தோஸ், சகோதரர் சோயப் ஆகியோருக்கும் சில கேள்விகளைக் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஹனீப்பின் பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு, குடும்பப் பின்னணி, அவர் சம்பந்தப்பட்ட பிற தனிப்பட்ட தகவல்கள் அதில் கோரப்பட்டுள்ளன.



ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா செல்வதற்காக டிக்கெட் எடுத்த ஹனீப், திரும்பி வருவதற்கான டிக்கெட்டை எடுக்காதது ஏன் என்றும் ஆஸ்திரேலிய வழக்கறிஞர் ஒரு கேள்வி கேட்டுள்ளார்.

ஹனீப்-சிம் கார்டு சிக்கியது எப்போது

இதற்கிடையே, ஹனீப்பின் சிம் கார்டு சிக்கிய நேரம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது ஹனீப் தரப்புக்கு பெரும் ஆதரவான செய்தியாக அமைந்துள்ளது.

இங்கிலாந்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு தனது சிம் கார்டை ஹனீப் கொடுத்தார் என்பதுதான் ஆஸ்திரேலிய போலீஸாரின் குற்றச்சாட்டு.

ஹனீப்பின் சிம்கார்டு, கிளாஸ்கோ விமான நிலையத் தாக்குதலில் ஈடுபட்ட ஜீப்பிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய போலீஸார் தெரிவித்துள்ளனர். இதைத்தான் பிரிஸ்பேன் நீதிமன்றத்திலும் சனிக்கிழமை அவர்கள் தெரிவித்தனர்.

ஆனாஸ், சபீல் அகமது கிளாஸ்கோ விமான நிலையத்தின் மீது ஜீப் தாக்குதல் நடத்தியபோது ஹனீப்பின் சிம்கார்டு ஜீபபில் இல்லை என இங்கிலாந்து, ஆஸ்திரேலியத் தகவல்களை மேற்கோள் காட்டி ஆஸ்திரேலிய அரசு வானொலி தகவல் வெளியிட்டுள்ளது.

கிளாஸ்கோ தாக்குதல் சம்பவம் நடந்து 8 மணி நேரம் கழித்தே சபீல் அகமது கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடமிருந்து இரண்டு மொபைல் போன்கள் பிடிபட்டன. அதில் ஒன்றில் ஹனீப்பின் சிம் கார்டு இருந்துள்ளது.

எனவே கிளாஸ்கோ விமான நிலையத்தில் ஜீப் மோதி எரிந்து கொண்டிருந்தபோது அதில் ஹனீப்பின் சிம்கார்டு இருந்த செல்போன் கண்டுபிடிக்கப்பட்டதாக முன்பு கூறிய ஆஸ்திரேலிய காவலதுறையின் வாதம் பொய் என்பது நிரூபணமாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல், ஹனீப் தரப்பு வாதத்திற்கு வலுவூட்டுவதாக உள்ளது. இதுகுறித்து ஹனீப்பின் வழக்கறிஞர் பீட்டர் ரூஸோ கூறுகையில், இந்த முரண்பாடுகளை நாங்கள் நீதிமன்றத்தில் எடுத்து வைப்போம்.

இப்போதைக்கு எனது முக்கிய வேலை, எங்களது தரப்பு வாதத்திற்கு வலுவூட்டும் வகையிலான தகவல்களை சேகரிப்பது, கடுமையாக உழைப்பது மட்டுமே. ஆகஸ்ட் 8ம் தேதி வரும் விசாரணையின்போது எங்களது தரப்பு வாதங்களை ஆணித்தரமாக எடுத்து வைக்கவுள்ளோம் என்றார்.

ஆஸி.க்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்

இதற்கிடையே, ஹனீப் விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய அரசுக்கும், காவல்துறைக்கும் எதிர்ப்பு மேலும் வலுத்து வருகிறது.

ஆஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கை காரணமாக இந்தியாவுடனான உறவில் பெரும் பாதிப்பு ஏற்படும், வர்த்தகத் தொடர்புகள் கடும் சரிவை சந்திக்கும் என பல அமைப்புகள் எச்சரித்துள்ளன.

மேலும் ஹனீப்புக்கு ஆதரவு தெரிவித்து பிரிஸ்பேன், சிட்னி, மெல்போர்ன் ஆகிய நகரங்களில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஊர்வலம் நடத்தியுள்ளனர்.

தனக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய மக்கள் போராடி வருவதை அறிந்து ஹனீப் உணர்ச்சி வசப்பட்டு அழுது விட்டாராம்.

மேலும் ஹனீப்பை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் பிரேசரும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து சிறையில் ..

இதற்கிடையே, டாக்டர் ஹனீப் தொடர்ந்து உல்ஸ்டன் சீர்திருத்த மையத்தில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு முன்பு பிரிஸ்பேன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியபோது 10 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் உத்தரவாதத் தொகையை கட்டுமாறு கூறியிருந்தது.

இந்த நிலையில்தான் அவரது விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்தது. எனவே அவர் ஆஸ்திரேலிய அரசின் குடியுரிமை காவல் மையத்தில் அடைக்கப்படுவதைத் தவிர்க்க அந்த உத்தரவாத்த தொகையை கட்டவில்லை. இதனால் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு ஹனீப் வழக்கு குறித்த விவரங்களை ஆஸ்திரேலிய அதிகாரிகள் சரி வர கொடுப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

முறையான தகவல்கள் ஆஸ்திரேலியா தராமல் இழுத்தடிப்பதாக கூறப்படுவதால், ஆஸ்திரேலிய அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி தர இந்தியா முடிவு செய்துள்ளது.

மத்திய அமைச்சருடன் ஹனீப் குடும்பம் சந்திப்பு:

இந் நிலையில் பெங்களூர் வந்த வெளியுறவுத்துறை இணையைமச்சர் அகமதுவை முகமது ஹனீப்பின் குடும்பத்தினர் சந்தித்து அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரினர்.

ஹனீப்பின் மனைவி பிர்தெளஸ் ஆர்ஷியா உட்பட அவரது குடும்பத்தினர் அகமதுவை சந்தித்துப் பேசினர்.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய தூதரகம் டாக்டர் ஹனீப் அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக அமகது தெரிவித்தார்.

மேலும் ஹனீப்பின் மாமா இம்ரான் சித்திக் ஆஸ்திரேலியா செல்ல விசாவிற்காக காத்திருப்பதாகவும் அகமதுவுடன் அவர்கள் தெரிவித்தனர்.

சந்தோஷமாக இருக்கிறார் ஹனீப்:

இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹனீப் சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக அவரது வழக்கறிஞர் பீட்டர் ரூஸோ கூறியுள்ளார். ஹனீப்புக்குப் பிறந்துள்ள குழந்தையின் புகைப்படத்துடன் அவரது உறவினர் (மனைவியின் சகோதரர்) ஆஸ்திரேலியா வரவுள்ளதாகவும் ரூஸோ கூறியுள்ளார்.

0 Comments:

Post a Comment

<< Home