|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, July 26, 2007

ராஜீவ் காந்தி படுகொலையைத் தடுத்திருக்க முடியும்

Bismillah...



முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுவதற்கு முன்பு, விடுதலைப் புலிகள் குறித்த முக்கியத் தகவல்களை ஜெர்மனி உளவுத்துறை இந்திய உளவுப் பிரிவுக்கு (ஐபி) அளித்தது. ஆனால் அதை அது சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதை நாம் உரிய முறையில் கவனித்திருந்தால் ராஜீவ் காந்தி படுகொலையைத் தடுத்திருக்க முடியும் என்று முன்னாள் 'ரா' உயர் அதிகாரி பி.ராமன் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டு உளவு விவகாரங்களைக் கவனிப்பதற்காக ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங் (ரா) என்ற உளவுப் பிரிவு உள்ளது. உள்நாட்டு உளவுப் பணிகளை இன்டலிஜென்ஸ் பீரோ (ஐபி) கவனித்து வருகிறது.

ரா அமைப்பின் கூடுதல் செயலாளராக பணியாற்றியவர் ராமன்.

'The Kaoboys of RAW - Down the Memory Lane' என்ற நூலை தற்போது எழுதியுள்ளார் ராமன். இந்த நூலில் ரா , ஐபியின் பல்வேறு தோல்விகள், குளறுபடிகளைப் புட்டுப் புட்டு வைத்துள்ளார்.

குறிப்பாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையைத் தவிர்த்திருக்க முடியும் என்று அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபியின் குளறுபடியால்தான் ராஜீவ் காந்தி கொலையைத் தடுக்க முடியாமல் போய் விட்டதாகவும் ராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

தனது நூலில் ராமன் கூறியிருக்கும் சில முக்கிய அம்சங்களின் சாராம்சம்:

ராஜீவ் காந்தி கொலை:

ஜெர்மனி உளவுப் பிரிவிலிருந்து விடுதலைப் புலிகளின் புதிய சதித் திட்டம் குறித்து ரா அமைப்புக்கு தகவல்கள் வந்தன. விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒரு வெடிகுண்டு நிபுணர் அடிக்கடி தமிழகம் வந்து செல்வதாக அந்தத் தகவல் கூறியது. உடனடியாக இந்தத் தகவலை ஐபியிடம் ரா வழங்கியது.

ஆனால் ஐபி அந்தத் தகவலுக்கு முக்கியத்துவம் தரவில்லை. கிடப்பில் போட்டு விட்டது. அந்த அமைப்பு சற்று கவனம் செலுத்தியிருந்தால், ஜெர்மனி உளவுப் பிரிவிடமிருந்து கூடுதல் தகவல்களை சேகரித்திருக்க முடியும். அதன் மூலம் ராஜீவ் காந்தியைக் கொல்லும் சதித் திட்டம் குறித்தும் தெரிய வந்திருக்கும். படுகொலையையும் தவிர்த்திருக்க முடியும்.

ஐபியின் தோல்வியால்தான் ராஜீவ் காந்தி படுகொலையை நம்மால் தடுக்க முடியாமல் போய் விட்டது.

வழக்கமாக இதுபோன்ற முக்கியத் தகவல்கள் ஐபிக்கு வழங்கப்படும்போது அவற்றை பரிசீலிப்பார்கள். அந்த வேலையைக் கூட அவர்கள் செய்யாமல் அலட்சியமாக இருந்தனர்.

சென்னைக்கு அடிக்கடி ஒரு விடுதலைப் புலிகள் அமைப்பின் வெடிகுண்டு நிபுணர் வருவதாக கிடைத்துள்ள தகவலை நாம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என நான் யோசனை கூறினேன். ஆனால் கேட்கக் கூட ஐபி அதிகாரிகள் தயாராக இல்லை.

ஐபி அதிகாரிகள் தீவிரம் காட்டியிருந்தால் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைத் தாக்குதல் குறித்த முழு விவரமும் நமக்குக் கிடைத்திருக்கும்.

1971ம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் வெடித்தபோது இதுபோன்ற ஒரு முக்கியச் செய்தியை ரா கொடுத்தது. இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்ததால், இந்திய விமானப்படையின் மேற்குப் பிராந்தியம் மீதான தாக்குதலை தடுக்க முடிந்தது.

பிரதமர் அலுவலகத்தில் ஊடுறுவிய பிரெஞ்சு உளவுப் பிரிவு:

பிரெஞ்சு நாட்டு உளவுப் பிரிவு 1980களில் இந்தியப் பிரதமர் அலுவலகத்திற்குள் ஊடுறுவி பல முக்கிய உளவுத் தகவல்களை திருடியது.

பிரதமர் அலுவலகத்திற்குள் எப்படியோ ஊடுறுவிய பிரெஞ்சு உளவுப் பிரிவு, ரா மற்றும் ஐபி ஆகிய உளவுப் பிரிவுகள், பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமருக்கு அனுப்பி வைத்திருந்த பல முக்கிய உளவுத் தகவல்களை திருடியது.

பின்னர் இவற்றை அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் உளவுப் பிரிவுகளுடன் பகிர்ந்து கொண்டது.

பல முக்கிய உளவுத் தகவல்களை இதுபோல பிரெஞ்சு உளவுப் பிரிவு திருடியுள்ளது.

அந்த சமயத்தில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, அமெரிக்காவுக்கு எதிரான போக்குக் கொண்டவர் என்பதால், இந்தியா தொடர்பான பல முக்கிய உளவுத் தகவல்களை அமெரிக்காவின் சிஐஏ பல்வேறு வழிகளில் பெற்று வந்தது.

1987ம் ஆண்டுதான் சிஐஏவின் இந்த திருட்டுத்தனத்தை ஐபி கண்டுபிடித்தது. சென்னையில் உள்ள ரா அலுவலகத்திலிருந்துதான் ரகசியத் தகவல்கள் கசிந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பல முக்கியத் தகவல்கள் குறிப்பாக இலங்கை தொடர்பான பல முக்கியத் தகவல்கள், இலங்கை விவகாரத்தில் ராவின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை சிஐஏ ரகசியமாக பெற்று வந்ததும் தெரிய வந்தது.

அந்த சமயத்தில் நமது உளவுப் பிரிவின் பலம் மிகவும் பலவீனமானதாக இருந்தது. உதாரணமாக, ஐ.நா. உதவியிலான ஒரு திட்டத்தின் கீழ் பணியாற்ற வந்த ஒரு ஆஸ்திரேலியப் பெண்மணி, டெல்லியில் பணியில் இருந்த 'ரா' அதிகாரி ஒருவருடன் வசித்து வந்தார். இதை கண்டுபிடிக்கவே ராவுக்கு பல காலம் பிடித்தது. அந்த அளவுக்கு நமது உளவுப் பிரிவு பலவீனமாக இருந்தது.

போபர்ஸ் ஊழல் வழக்கு:

போபர்ஸ் ஊழல் வழக்கில் சில மூத்த சிபிஐ அதிகாரிகளின் நம்பகத்தன்மையும், விசாரணை போக்கும் சந்தேகத்திற்குட்பட்டதாக இருந்தது.

போபர்ஸ் விசாரணையில் ஈடுபட்டிருந்த சில மூத்த சிபிஐ அதிகாரிகள், புகாருக்கு ஆளான இந்துஜா சகோதரர்களுடன் மதிய விருந்தில் கலந்து கொண்டதை நான் அறிவேன். ஒருமுரை இருமுறை அல்ல பலமுறை இவர்கள் இந்துஜா சகோதரர்களுடன் விருந்துண்டுள்ளனர். இந்த விருந்துகள் எல்லாம் போபர்ஸ் ஊழல் சர்ச்சை வெடித்து பரபரப்பாக இருந்த காலகட்டத்தில் நடந்தது.

இந்த ஊழல் விவகாரத்தின் உண்மைகளை மறைக்க முன்னாள் பிரமர் ராஜீவ் காந்தி சிபிஐக்கு நெருக்கடி கொடுத்தார். இந்த முயற்சிகளில் அவர் நேரடியாகவே இறங்கினார். போபர்ஸ் ஊழல் விவகாரத்தை வெளியில் கொண்டு வந்தவரான முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு எதிராக இந்த விவகாரத்தைத் திருப்பவும் அவர் தீவிரமாக முயன்றார்.

ராஜீவ் காந்தியின் வலியுறுத்தல் காரணமாகவே காங்கிரஸ் கட்சியின் எம்.பியான சங்கரானந்த் தலைமையில் கூட்டு நாடாளுமன்றக் குழு போடப்பட்டது.

இந்தக் குழு விசாரணை அதிகாரிகளுடன் ஜெனீவா, லண்டன் ஆகிய நகரங்களுக்குச் சென்றது. அங்கு போபர்ஸ் ஊழல் விவகாரத்தில் லஞ்சம் கைமாறியது குறித்து ஒன்றுமே தெரியாத அல்லது வெகு சுமாரான தகவல்களைத் தெரிந்தவர்களை மட்டுமே இந்தக் குழு சந்தித்தது. இந்த விவகாரம் குறித்து முழு விவரமும் தெரிந்தவர்களை இந்தக் குழு சந்திக்கவே இல்லை.

பிரதமர் அலுவலகத்தில் இருந்த சில அதிகாரிகளின் துணையுடன் ராஜீவ் காந்தியே இந்த மறைப்பு முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். அந்த அதிகாரிகள் தற்போதும் கூட பிரதமர் அலுவலகத்தில் உள்ளனர். இவர்களில் சிலர் ஐபியில் உள்ளனர், சிலர் வெளிநாட்டுத் தூதரகங்களில் பணியாற்றி வருகின்றனர்.

ஊழல் விவகாரம் குறித்து உண்மையான முறையில் சிபிஐ விசாரணை நடத்தவில்லை.

இந்துஜா சகோதரர்களின் பெயர் தீவிரமாக அடிபட்டுக் கொண்டிருந்த நிலையில் மூத்த சிபிஐ அதிகாரிகள் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர். அதை துண்டித்துக் கொள்ள அவர்கள் முன்வரவில்லை. இந்துஜா சகோதரர்களுடன் சேர்ந்து விருந்துகளிலும் கலந்து கொண்டார்கள்.

அதை விட முக்கியமாக ஜெனீவாவுக்கு விசாரணைக்காகச் சென்ற சிபிஐ அதிகாரிகள் பிரகாஷ் இந்துஜா, ஸ்ரீசந்த் இந்துஜா ஆகியோரோடு ஜெனீவா ஹோட்டலில் விருந்து சாப்பிட்டதை நான் நேரிலேயே பார்த்தேன்.

பாக். அதிபர் அலுலகத்தில் உளவு பார்த்த ரா:

பாகிஸ்தான் அதிபராக ஜெனரல் யாஹ்யா கான் இருந்தபோது அவரது அலுவலகத்தில் ரா உளவு பார்த்தது.

1971ம் ஆண்டு நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் யாஹ்யா கான் தீட்டிய ஒரு மிகப் பெரும் திட்டம் ராவுக்குத் தெரிய வந்தது. பாகிஸ்தான் விமானப்படை இந்தியாவின் மேற்குப் பிராந்திய விமானப்படை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப் போவதாக அந்தத் தகவல் தெரிவித்தது.

அதை உடனடியாக தெரிவித்து இந்திய விமானப்படையை உஷார்படுத்தினோம். ஆனால் பாகிஸ்தான் விமானப்படை எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை. இதையடுத்து நாங்கள் கூறிய உளவுத் தகவலை நிராகரித்தது இந்திய விமானப்படை. இருப்பினும் டிசம்பர் 4ம் தேதி வரை உஷார் நிலையில் இருந்தது விமானப்படை.

டிசம்பர் 3ம் தேதி இரவு (அன்றுதான் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூண்டது) பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது. ஆனால் அந்தத் தாக்குதல் தோல்வியில் முடிந்தது. நாங்கள் சொன்ன தகவலால் மேற்குப் பிராந்திய தலைமையகம் பெரும் தாக்குதலிலிருந்து தப்பியது.

சிஐஏவிடம் பயிற்சி:

ரா அதிகாரிகளும், சிஐஏ உளவுப் பிரிவினரும் பல கட்டங்களில் இணைந்து செயல்பட்டுள்ளனர். உண்மையில் பல ரா அதிகாரிகளுக்கு சிஐஏதான் பயிற்சி அளித்தது. இங்கிலாந்தின் எம்ஐ6 உளவு அமைப்பும் ரா அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்துள்ளது.

இப்படிப் பல பரபரப்பு தகவல்களைக் கொண்டதாக ராமனின் புத்தகம் உள்ளது. அணல் பறக்கும் பல உண்மைகளை, குற்றச்சாட்டுக்களை, ரகசியங்களை போட்டு உடைத்துள்ளார் ராமன்.

இந்தியப் பிரதமர் அலுவலகத்திலேயே பிரெஞ்சு உளவுப் பிரிவு உளவு பார்த்ததாக அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்புதான் முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங், பிரதமர் அலுவலகத்தில் ஒரு கருப்பு ஆடு இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். அந்த கருப்பு ஆடு, இந்திய அணு ஆயுத ரகசியங்களை அமெரிக்காவுக்கு வழங்கியதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசியல் தலைவரான ககர் அயூப் கான் ஒரு புதிய தகவலை வெளியிட்டார். 60களில் இந்திய பாதுகாப்பு ரகசியங்களை இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் பாகிஸ்தானுக்கு வழங்கியதாக அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதை விடப் பயங்கரமான ரகசியங்களை ராமன் தனது நூலில் விலாவாரியாக விவரித்துள்ளார்.

ஏற்கனவே இதுபோன்ற பரபரப்புத் தகவல்கள் அடங்கிய நூலை முன்னாள் ரா அதிகாரி ஒருவர் வெளியிட்டார். ஆனால் அந்த நூலை மத்திய அரசு தடை செய்து விட்டது. இந்த மாத இறுதியில் ராமனின் நூல் வெளியாகவுள்ளது. இந்த நூலுக்கும் தடை வருமா என்று தெரியவில்லை.

இந்த நூல் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டாம் வடக்கம் கூறுகையில், இதில் உள்ள தகவல்கள் அனைத்தும் கற்பனையானவை. புத்தகத்தை விற்க என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் உண்மை என்னவென்றால் நமது உளவுப் பிரிவு வலுவாகவே உள்ளது என்பதுதான் என்றார்.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகமும் ராமன் நூலில் கூறப்பட்டுள்ள தகவல்களை நிராகரித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

ராமனைப் பற்றியும் அவரது பின்னணி குறித்தும் எங்களுக்குத் தெரியும். எனவே அந்த நூலில் உள்ளது குறித்து கருத்துக் கூற தேவையில்லை என்றார்.
Thanks...thatstamil

0 Comments:

Post a Comment

<< Home