|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Saturday, July 21, 2007

கடவுளின் பெயரால் தன்னையே துன்புறுத்துதல்

Bismillah...

மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் மனிதர்கள் பல வகைகளிலும் தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்கின்றனர்.

பக்தியின் பெயரால் மக்கள் தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்வதை மதவாதிகள் ஊக்குவிக்கின்றனர்.

''மனிதனைத் துன்பத்தில் ஆழ்த்தும் நடவடிக்கைகள் எப்படி அர்த்தமுள்ளவையாக இருக்கும்?'' என்று சிந்தனையாளர்கள் நினைக்கின்றனர்.

நெருப்பை வளர்த்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அதில் நடந்து செல்லுதல்

நாக்கிலும், கன்னங்களிலும் சிறு ஈட்டியைக் குத்திக் கொள்ளுதல்

சாட்டையால் தம்மைத் தாமே அடித்துக் காயப்படுத்திக் கொள்ளுதல்

குளிரிலும், வெயிலிலும் செருப்பு கூட அணியாமல் கால் நடையாக வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லுதல்

வெடவெடக்கும் குளிரில், குளிர்ந்த நீரில் குளித்து விட்டு ஈரத்துணியுடன் கோவிலைச் சுற்றி வருதல்

கரடு முரடான தரைகளில் ஆண்களும், பெண்களும் உருளுதல்

தமது தலையில் தேங்காய் உடைத்து காயப்படுத்திக் கொள்ளுதல்

படுத்திருக்கும் பெண்கள் மீது பூசாரி நடந்து செல்லுதல்

சிறுவர்களை மண்ணுக்குள் உயிருடன் புதைத்து விட்டு வெளியே எடுத்தல்

இயற்கையான உணர்வுகளுக்கு எதிராகத் துறவறம் பூணுதல்

ஆடைகளையும் துறந்து விட்டு நிர்வாணமாக அலைதல்

இன்னும் இது போன்ற நடவடிக்கைகளின் காரணமாகவே 'மதங்கள் அர்த்தமற்றவை' என்று சிந்தனையாளர்கள் விமர்சனம் செய்கின்றனர்.

கருணையே வடிவான கடவுள் மனிதனைத் துன்புறுத்துவதில் இன்பம் காண்பவனா?

''மற்றவர்களால் தனக்குத் துன்பங்கள் ஏற்படக் கூடாது என்று கவனமாகச் செயல்படும் மனிதன் தனக்குத் தானே தீங்குகளை மனமுவந்து வரவழைத்துக் கொள்கின்றானே? இந்த அளவுக்கு மனிதனின் சிந்தனயை மதங்கள் மழுங்கடித்து விட்டனவே?'' என்று சிந்தனையாளர்களுக்கு ஏற்படும் கோபத்தின் விளைவு தான் 'மதங்கள் அர்த்தமற்றவை' என்ற விமர்சனம்.

இஸ்லாம் மார்க்கம் இது போன்ற எந்த நடவடிக்கைகளையும் ஆதரிக்கவில்லை.

ஆதரிக்காதது மட்டுமின்றி இவற்றைக் கடுமையாகவும் இஸ்லாம் எதிர்க்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்து மக்கள் தமக்கு துன்பங்கள் நேரும் போது தமது ஆடைகளைக் கிழித்துக் கொள்வார்கள். தமது கன்னத்தில் அறைந்து கொள்வார்கள். இந்தச் செயலைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரிக்கை செய்தார்கள்.

கன்னங்களில் அடித்துக் கொள்பவனும், சட்டைகளைக் கிழித்துக் கொள்பவனும், மடத்தனமான வார்த்தைகளைக் கூறுபவனும் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்லர்.

நூல்: புகாரி 1297, 1298, 3519

தன்னைத் தானே ஒருவன் வேதனைப்படுத்திக் கொண்டால் அவனுக்கும், இஸ்லாத்துக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகப் பிரகடனம் செய்தார்கள்.

ஒரு முதியவர் தனது இரு புதல்வர்களால் நடத்திச் செல்லப்பட்டதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள். ''ஏன் இவர் நடந்து செல்கிறார்?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். ''நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்து விட்டார்'' என விடையளித்தனர். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''இவர் தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது'' என்று கூறி விட்டு வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு அவருக்குக் கட்டளையிட்டார்கள்.

நூல்: புகாரி 1865, 6701.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் (பள்ளிவாசலில்) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் வெளியில் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவரைப் பற்றி விசாரித்த போது ''அவரது பெயர் அபூ இஸ்ராயீல்; (நாள் முழுவதும்) உட்காராமல் வெயிலில் நிற்பதாகவும், எவரிடமும் பேசுவதில்லை எனவும், நோன்பு நோற்பதாகவும் இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்'' என்று மக்கள் கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''அவரைப் பேசச் சொல்லுங்கள்! நிழலில் அமரச் சொல்லுங்கள்! நோன்பை மட்டும் அவர் முழுமைப்படுத்தட்டும்'' என்று கட்டளை பிறப்பித்தார்கள்.

நூல்: புகாரி 6704

கடவுளின் அன்பைப் பெறலாம் என்பதற்காக இது போன்ற சிறிய அளவிலான துன்பத்தைக் கூட தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறி விட்டார்கள்.
Thanks..onlinepj

0 Comments:

Post a Comment

<< Home