|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, July 26, 2007

அற்புதமான விருந்தோம்பல்


நபி (ஸல்) அவர்களும், அவர்களின் அன்புமிக்க தோழர்களும் அகழ்ப் போரின் போது, தற்காப்புக்காக வேண்டி அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள். அப்போது, கருங்கற்பாறை ஒன்று தென்பட்டது. உடனே, நபித்தோழர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து : 'இதோ, கருங்கற்பாறை தென்படுகிறது என்றார்கள். அப்போது,பசி தாங்க முடியாமல் நபியவர்கள் தமது வயிற்றில் கற்களை கட்டியிருந்தார்கள். அவர்கள் அனைவரும் மூன்று நாட்களாக உண்ண எந்த உணவும் இல்லாமல்,கடுமையான பசியிலே இருந்தார்கள். அந்த நிலையிலும் நபியவர்கள் கோடாறியை எடுத்து,அப்பாறை மீது அடித்தார்கள். அப்பாறை தூள் தூளாகியது.

அவ்வேளை, ஜாபிர் (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து,வீட்டுக்குச் சென்று வர அனுமதி கேட்டார்கள். நபியவர்களும் அனுமதி வழங்கினார்கள். அவர், தனது வீட்டுக்குச் சென்று தனது மனைவியிடத்தில்: நபியவர்கள் மிகுந்த பசியோடு இருப்பதைக் கண்டேன். அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவி;ல்லை. அவர்களுக்கு விருந்தளிக்க ஏதாவது உணவு நமது வீட்டில் உள்ளதா? என்று கேட்டார்கள். அதற்கு மனைவி: எம்மிடத்தில் கோதுமை மாவும் ஓர் ஆடும் உள்ளது என்றார்கள். உடனே, ஜாபிர் (ரழி) அவர்கள்: ஆட்டை அறுத்து, உரித்து கறி சமைக்க அடுப்பில் வைத்து விட்டு, கோதுமையை அரைத்து மாவாக்கினார். ஆட்டு இறைச்சிக் கறி அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் போது, மனைவியிடம் ரொட்டி சுடுமாறு சொல்லி விட்டு, நபியவர்களிடம் விரைவாக வந்தார்கள்.;

'அல்லாஹ்வின் தூதரே! எனது வீட்டில் குறைந்த அளவு உணவு உள்ளது. எனவே, உங்களுடன் இருவரை மட்டும் அழைத்துக் கொண்டு எனது வீட்டுக்கு வாருங்கள்' என்று கூறினார். எந்தளவு உணவு உள்ளது? என நபியவர்கள் கேட்டார்கள். ஜாபிர் (ரழி) அவர்கள் உணவின் அளவைக் கூறினார்கள்.

அதற்கு நபியவர்கள்: 'நன்று, உணவு அதிகமாகவே உள்ளது. நான் வரும் வரை ஆட்டுக் கறி உள்ள சட்டியை அடுப்பை விட்டு இறக்க வேண்டாம். ரொட்டி சுடும் ஓட்டையும் அடுப்பை விட்டு இறக்க வேண்டாம் என்று உங்கள் மiவியிடம் சென்று கூறிவிடவும்' என்று ஜாபிர் (ரழி) அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

நபியவர்கள், தம்மோடு அகழ் யுத்தத்திற்கு வந்திருந்த அனைவரையும் ஜாபிர் (ரழி) அவர்களின் வீட்டுக்கு விருந்துண்ண அழைத்துக்கொண்டு சென்றார்கள். இதைக் கண்ட ஜாபிர் (ரழி) அவர்கள் தனது மனைவியிடம்: நீ இன்று வசமாக மாட்டிக்கொண்டாய்! நபியவர்கள் தனது தோழர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு வருகின்றார்கள் என்று கூறினார். அதற்கு மனைவி: உங்களிடம் நபி (ஸல்) அவர்கள் உணவின் அளவைப் பற்றி கேட்டார்களா? என்று விசாரித்தார். அதற்கு ஜாபிர் (ரழி) அவர்கள்: ஆம்! என்றார்கள்.

அவ்வேளை, நபியவர்கள் தனது தோழர்களுடன்வீட்டுக்கு வந்துவிட்டார்கள். தனது தோழர்கள் அனைவரையும் பார்த்து, நீங்கள் முண்டியடித்துக் கொள்ளாமல், அமைதியாக உள்ளே பிரவேசியுங்கள் என்று கூறினார்கள்.

பின்னர், நபியவர்கள் சமையலறைக்குள் நுழைந்தார்கள். ரொட்டிகளை துண்டு துண்டாக ஆக்கினார்கள். அதில் இறைச்சித் துண்டுகளை வைத்தார்கள். சட்டியிலிருந்து இறைச்சியை எடுத்ததும் அதை மூடிவிடுவார்கள். அடுப்பை அணையாமல் பார்த்துக் கொள்வார்கள். இவ்வாறு, ஆட்டு இறைச்சிக் கறியையும், ரொட்டியையும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனது தோழர்களுக்குப் பரிமாறினார்கள். அவர்கள் அனைவரும் வயிறு நிரம்பும் வரை சாப்பிட்டார்கள். நபியவர்கள்உண்ட பின்னரும் சிறிதளவு உணவு மீதம் இருந்தது. அதனை ஜாபிர் (ரழி) குடும்பத்தினர் உண்டனர்.

(ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

0 Comments:

Post a Comment

<< Home